இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிய்த்தெறியப்படுகின்றன, நடைபாதை வாசிகள் ஒண்ட இடமின்றித் திண்டாடுகிறார்கள். இடியும் மின்னலும் பயங்கரமாகிறது. ஏழை எளியவர்கள் கோணிகளைப் போர்த்துக்கொண்டு வீடு நோக்கி ஓடுகிறார்கள். ஊர்க் கோடியில் பரவலான பெரிய பள்ளத்தை நோக்கிப் பல பக்கமிருந்தும் மழைத் தண்ணீர் புரண்டோடி விழுகிறது. அந்தப் பள்ளத்துக்கு ஒருபுறம், சிங்காரபுரி; மற்றோர் புறம் கரும்புத் தோட்டம். பள்ளம் நிரம்பி வழிய ஆரம்பிக்கிறது. தண்ணீர் கரும்புத் தோட்டத்துப் பக்கம் பாய்ந்துவிடுவது போலிருக்கிறது. மழையிலே நனைந்து கொண்டே, வெள்ளம் கரும்புத் தோட்டத்தின் பக்கம் பாயாதபடி, மண்ணால் கரை அமைத்துப் பார்க்கிறார்கள் சிலர். கரையைக் கரைத்துக்கொண்டு செல்கிறது வெள்ளம். திகைக்கிறார்கள் என்ன நேரிடுமோ என்பதை எண்ணி, ஆடையில் தண்ணீர் சொட்டச் சொட்ட மாளிகையை நோக்கி ஓடிவருகிறான் ஒரு உழவன். அவன் கதவைத் தட்டுகிறான். வேலையாள் கதவைத் திறந்துவிடுகிறான். பதறியபடி கூடத்திற்கு வருகிறான், உழவன். கூடத்திலே விரிப்பு மீது, தண்ணீர் சொட்டச் சொட்ட நிற்கிறான். அவன் உடல் வெடவெடுக்கிறது. சிங்காரவேலரின் முகம் கடுகடுக்கிறது.]
சி: மடப்பயலே! துணியைப் பிழிந்துபோட்டுவிட்டு வரப்படாதோ......கூடத்தைச் சேறாக்கிவிட்டயே கடாமாடு! எதுக்காகத் தலைதெறிக்க ஓடிவந்தே.....
உ: மழை நிற்கறதா காணோமுங்க.....ஒரே வெள்ளக் காடாயிருக்கு, ஊரு......
சி: (கேலியாக) வந்து 'குடை' பிடிக்கச் சொல்றயா, ஊராருக்கு.
உ: இல்லிங்க......நம்ம கரும்புத் தோட்டப் பக்கம் இருக்குதுங்களே பள்ளம்......காத்தான் குட்டை ரொம்பி வழியுதுங்க......
சி: கல்லை மண்ணைப் போட்டு அடைக்கறது.......
உ: நிற்கலிங்க....தண்ணி பொத்துக்கிட்டு வருதுங்க கரும்புத் தோட்டப் பக்கமா....
சி: (பதறி) கரும்புத் தோட்டப் பக்கமா?
உ: ஆமாங்க......வெள்ளக்காடு ஆயிடுங்க. கரும்புத் தோட்டம் அழிந்து விடும்ங்க......உழைப்பு அவ்வளவும் வீணாயிடும்ங்க......
358