உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

க: அந்தப் பணம் அப்படித்தான் பாழாகும்......

[சிங்காரவேலர் முறைக்கிறார்.]

என்று ஊரிலே பேசுகிறார்கள். ஏழை வயிறு எறிய எறியச் சேர்த்த பணம்தானே, அது இப்படித்தான் பாழாகும் என்கிறார்கள்.....எனக்கே கேட்க வெட்கமாக இருக்கிறது.....சொல்ல அதைவிட வெட்கமாக இருக்கிறது.

[ஆத்திரம் தாங்காமல், சிங்காரவேலர் கண்ணாயிரத்தின் கன்னத்தில் பளார், பளார் என்று அறைகிறார்.]

சி: இருக்காதே என் எதிரில் வெட்டிப் போட்டுவிடுவேன்......எனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்வேன்.....ஏழைக்காகப் பரிந்து பேசுகிறாயா, ஏழைக்காக! பெரிய மகான்! மடப்பயலே! என்னால் எத்தனை ஏழைக் குடும்பங்கள் பிழைக்கின்றன, தெரியுமா.....எத்தனை வீடுகளில் நான் விளக்கு ஏற்றி வைத்திருக்கிறேன் தெரியுமா....உனக்கு என்னடா தெரியும்.....உல்லாச உலகில் உலவிவருகிறாய், என் பணத்தைச் செலவழித்துக்கொண்டு. இதிலே உபதேசம் வேறு செய்கிறாயா உபதேசம்......

[பாய்ந்து சென்று கண்ணாயிரத்தின் சட்டையைப் பிடித்திழுத்து அவனைக் குலுக்கியபடி. ஒரு ஏழையை வாழ வைத்ததுண்டா நீ? தொழில் கொடுத்ததுண்டா? கண்ணாயிரத்தை அலட்சியமாகத் தள்ளியபடி. அரிசி மில்லிலே நூறு பேர்...கட்டட வேலையிலே ஐநூறு பேர், கடைகளிலே இருநூறு என்னாலே பிழைக்கிறார்கள், என்னாலே! ஏழை பங்காளா! உன்னாலே அல்ல!! சொல்லேன்க்கா! உனக்குத் தெரியாதா. என்னாலே எத்தனைப் பேர் பிழைக்கிறார்கள் என்பதை. விரலை மடக்கடா பார்க்கலாம், வியாக்யானம் பேசுபவனே! விரலை மடக்கு, உன்னாலே ஒரு ஆளுக்காவது வேலையோ தொழிலோ, கிடைத்ததா? உனக்கே, நான் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பாழாக்குவது தவிர வேறு என்ன தெரியும்...]

அ: (செல்லமாக) அவனுக்கென்னடா தலை எழுத்து உழைக்கணும்னு.

சி: (கோபமாக) அக்கா! குறுக்கிட்டுப் பேசாதே...

க: (அமைதியாக) பேசுங்களப்பா, பேசுங்கள். இம்சைக்கு ஆளான எத்தனையோ பேர் சொல்லத் துணியாததை நான் சொல்லிவிட்டேன், கோபம் கொப்பளிக்கிறது...உங்களுக்கு...பேசுகிறீர்கள்...உங்களாலா முடியாது முடுக்காகப் பேச.....

362