பெரியார் பணிகளின் விளைவு 211 தில் கிண்டல், ஏளனச் சிரிப்பு; ஆனால் கால ஓட்டத்தில் நடை முறையாகிவிட்டது. வெறும் சந்தானமாக, ஈசுவரனாக, சிவ சைலமாக, பக்தவத்சலமாக, நடராசனாக, சாமிநாதனாக, மகா ராசனாக, சோமசுந்தரமாக பெயரை மடக்கிக்கொள்வதே இக் கால நாகரீகம். துண்டு போட்டுக்கொண்டு, நாயனம் வாசிக்கக்கூடாதென்று சிவக் கொழுந்துவுக்கு கானாடுகாத்தான் ஆணையிட, அதை எதிர்த்து தன்மான இயக்கத்தின் பீரங்கி அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி போராடிய நிலையிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி விட்டோம்! 1971ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சென்னையில் நடந்த தமிழ் இசை விழாவில், தொடக்க நாளன்று, மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அய்வரில் செட்டிநாட்டு அரசர், ஆளுனர் K. K . ஷா தவிர, மற்ற மூவரும் கலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாயனக் கலைஞர் வீருசாமி, நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு ஆவார்கள். அம்மூவரும் பளபளக்கும் சொக்காய் போட்டிருந் தார்கள்; அழகிய நீண்ட மேல் துண்டு அணிந்திருந்தார்கள். இவற்றையெல்லாம்விட மேலான பெருமை ஒன்றை உணர்ந்தேன். இம்மூவரில் எவரும் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அரசருக்கு, ஆளுனருக்குச் சமமாக உட்காரலாமா என்று சங்கடப் படவில்லை. அத்தகைய சிறப்புக்கே பிறந்தவர்கள்போல், தன்னம்பிக்கையோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம் என்பது உலக வழக்கு. சுயமரியாதை இயக்கத்தைச் சாடிக்கொண்டிருந்த ஒருவரின் வாயால் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை உளமாரப் பாராட்டப்பட்டதை நான் நேரில் கேட்டு மகிழும் பேறுபெற்றேன். பெரியார் ஆதரித்த நீதிக் கட்சியைச் சாடுவதையே காங்கிரசுத் தொண்டாகக்கொண்டிருந்த மூத்த தியாகி ஒருவரின் படப்பிடிப்பு இப்போது நினைவிற்கு வருகிறது. அவர் திரு.மீ. பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த காலம். நான், தமிழ்நாட்டின் பொதுக் கல்வி இயக்குநராக இருந்தேன். அலுவல்பற்றி, கல்வி அமைச்சரைக்காண, இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிலும் மூத்தவர். தமிழ்நாட்டு காங்கிரசு வட்டாரத்தில் பெரிய புள்ளி. நான் உள்ளே வருவதைக் கண்டதும் அவர் எழுந்து, முன்னே வந்து, என் கையைப் பிடித்துக் குலுக்கினார். 'நன்றாக இருக்கிறீர்களா?' என்று நான் அவரைக் கேட்டேன்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/223
Appearance