உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலிச் சீமான்கள் தெய்வத்தை சந்தியில் விட்டுவிட்டு ஓடிப்போக மாட்டார்கள். போன கணக்கைக் குளத்தில் போட்டுத் தூற்றுவிட்டு, திருப்பணியையாவது அரையும் குறையுமாக நிற்காமல் நிறைவேற்றிவிட ஆசைப்பட்டார்கள். திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் ரஸ்தா குத்தகையில் எதிர்பார்த்த வரம்புக்கும் அதிகமாகக் கணக்கு லாபம் காட்டியதால், திருப்பணிக்கு என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து, பழமலை கடையையும், சிவசிதம்பரம் பிள்ளை கோயில் திருப்பணியையும் பார்த்துக் கொள்ளுவது என்று சேவகப் பங்கீடு செய்துவைத்தார். சிவசிதம்பரம் பிள்ளைக்கு ஜவுளிக்கடை நிழல்போய் ஆயிரங்கால் மண்டப நிழலும், நரி வௌவால் நெடியும் பரிச்சயமாயிற்று.

2

சிவசிதம்பரம் பிள்ளை சொப்பனத்திலிருந்து விழித்துக் கொண்டதுபோல் தம் வாழ்வின் பேரேட்டுக் கணக்கைப் பார்த்தார். ஐந்து பெண்கள், எம்டன் குண்டு போட்டபோது கிடைத்துவந்த சம்பளம், குடவயிறு, சில நரையோடிய தலைமயிர்கள் - இவைதான் இவரது வரவிலிருந்தது. மற்றதெல்லாம் பற்றிலிருந்தது. எம்டன் போட்ட குண்டு விரட்டின காலத்திலிருந்து மேயன்னா கண்ணை மூடிவிட்ட நேரம் வரை அவர் வாழ்வு தனிச்சாகை பிடிக்கவில்லை. ஜவுளிக் கடையும் மூன்று குடும்பமும் அவர்களது வாழ்வும் போக்குமே இவரை இழுத்து வந்திருக்கிறது. குதிரை லாயத்தை எட்டும் நேரத்தில் குத்துப் புல் கூட அகப்படவில்லை என்றால்... இதுவரை இந்த மாதிரி நினைத்ததே கிடையாது. ஐந்து பெண்களைக் கரையேற்ற வேண்டுமே; அவருக்கு நினைக்க நினைக்க மூச்சே திணற ஆரம்பித்தது. நெஞ்சு சுளுக்கிக் கொள்ளும் போலிருந்தது.

ஆனால் ஒன்றில் பரமசுகம். படித்துறை கட்டிக் கொண்டிருப்பதில் பரமசுகம். நிச்சிந்தையாக, யாரோ கொடுக்கிற பணத்தைக் கொண்டு ஏதோ தெய்வத்துக்குச் சேவை நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. சிற்றுளியும் டொங் டொங் என்று எதிரொலிக்கிறது. நரி வௌவால் கிறீச்சிடுகிறது. எங்கு பார்த்தாலும் கருங்கல் தளத்தின் எதிரொலி.

அதிலிருந்துதான் அவருக்கு தாடி வளர ஆரம்பித்தது. இடையிடையே நரையோடிய தாடி வளர ஆரம்பித்தது. ஒரு வரிசை முடிந்தவுடன், பிறகு மறுபடியும் பணவசூல், அப்புறம் கட்டுமான வேலை. கோவிலிலே வசனம் இருந்தமாதிரி சேவகம். முன்பு நரசேவகம். இப்பொழுது தெய்வ சேவகம். லோகத்திலும் அயோக்கியர்கள் நடமாடுகிறார்கள்; தெய்வ சந்நிதிதானத்திலும் நடமாடுகிறார்கள். அங்கே வியாபாரார்த்தமாக மனசை அடமானம் வைக்கிறார்கள்; இங்கே உலகத்தை உய்விக்கும் பரந்த நோக்கத்துடன் வியாபாரார்த்தமாக மனசை அடமானம் வைக்கிறார்கள். மானத்தை விற்கிரயம் பண்ணுகிறார்கள். பொற்றாமரைக் குளம் இடிந்து கிலமாகுமுன்பு அதன் ஜீவ முடிச்சு இடிந்து கிலமாகிவிட்டது. அது அவருக்குத்

புதுமைப்பித்தன் கதைகள்

595