உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

வாதவூரர்‌

வாதவூரன் மனசும் அறிவும் தட்டுமறித்து விளையாடின. யாருக்கு யார் பதில் சொல்லுகிறார்கள் என்ற நினைப்பின்றி யாரோ மனசில் சொன்னதை, தாம் நாவால் சொன்னதாகவே வாதவூரருக்குப்பட்டது. குதிரைகள் வாங்க வேண்டும் என்ற நினைப்பே அற்றுப் போகும்படி தம்மை இழுத்து உட்கார்த்திவிட்ட பெரியார் தம்மிடம் என்னத்தைக் கண்டுவிட்டார் என்பதுதான் முடிவில்லாப் புதிராக அவரை மலைக்க வைத்தது.

கல்லால நீழலில் அமர்ந்த தட்சிணாமூர்த்தத்துக்கு, கண்கூடாகக் கண்டு, ஸ்பரிசித்துப் பேசக்கூடிய ஒரு ரூபம் இருக்குமாகில் அது அவர்தாம். என்னை ஆட்கொள்வதற்காக அம்மையப்பனே அப்படி வந்தானோ! சீ! நான் யார்? எனக்குத் தகுதி என்ன? மனசில் அவன்மீது நாட்டம் இருந்துவிட்டால் போதுமா? கால் எடுத்து வைக்கமுடியாமல், அறிவுதான் அடிக்கு நூறு வேலிகள் கட்டுகிறதே, அப்படிப்பட்ட அறிவு, என்னை ஆட்கொண்டு என்னை அளந்து நிற்கும்போது, அவனால்தான் வர முடியுமா, என்னால்தான் அவனிடம் போக முடியுமா?

பாண்டியனிடம் சமத்காரமாகப் பேசிவிட்டதால் நான் செய்த காரியம் சரியாகிவிடுமா? அவன் கொடுத்தானாவது! அவன் வாங்கிக் கொண்டானாவது! அவன் அரிமர்த்தனனாக வந்து கொடுத்த பொழுது அரிமர்த்தனனாக நிற்கும் அவனிடம் கணக்குக் காட்டுவதை விட்டு, வேதாந்தம் பேசி என்னை நான் பொய்த்துக் கொண்டேனே! என்னை விட நெஞ்சறி கள்வன் எவன்? என்னையும் நம்பி, பணத்தைக் கொடுத்தானே பாண்டியன்! பாண்டியன் பணம். பாண்டியன் பணம் கரையும் பொழுது காலம் நின்றதே; களனே அழிந்ததே. அந்த பெரியவரை நான் திரும்பவும் பார்க்க வேண்டுமே அவர் அருகில் இருந்தால், தாய் மடியில் இருப்பது போலல்லவா இருந்தது? அவர் என்னிடம் என்ன சொன்னார்? என்னத்தைத்தான் சொல்லவில்லை? அவர் சொன்னதை வேதமும் வேதாந்திகளும் சங்கரனும் சொல்லத் தான் செய்திருக்கிறார்கள். அவர் சொன்னதன் நுட்பம் வார்த்தைக்குள் இல்லையே. குரலிலா? கண்ணிலா? அவர் எதைக் கொண்டு என்னை இழுத்து விட்டார்? எனக்குத் தெரிந்ததைத் தான் சொன்னார். ஆனால் தெரிந்தது என நான் நம்பி இருந்ததற்கு எவ்வளவு உள்ளுறை கொடுத்துவிட்டார்! "தாமே குதிரைகள் வரும்; நீ உன் குதிரைகளை அடக்கக் கற்றுக் கொள்" என்றாரே சிரித்துக் கொண்டு! அப்பொழுது பாண்டியனும் அவனுடைய குதிரைகளும் அவனுடைய குதிரை வேட்கையும் இந்தப் பிரபஞ்ச லீலையில் எவ்வளவு அற்பமாக, துச்சமாகப் பட்டன; நமது பார்வைக்குள் படவேண்டாத ஒன்றாகப் படும்படி செய்துவிட்டாரே! நானா பணத்தை எடுத்துக் கொடுத்தேன்?

652

அன்று இரவு