பரமசிவம் பிள்ளையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரையில் கிடத்தி விட்டார்கள். பாம்பு கடித்தால் பிழைக்க முடியுமா? போகிற வழிக்கும் புண்ணியம் சேர்க்கத் தலைமாட்டில் உட்கார்ந்து யாரோ தேவாரம் படித்தார்கள். பரமசிவம் பிள்ளை ஏறிட்டுப் பார்த்து சிரமத்துடன், 'தூரத்தில் இருந்து படித்தால் கேட்பதற்குச் சுகமாக இருக்கும்... பக்கத்திலிருந்தால் காதில் வண்டு குடைகிற மாதிரி தொந்தரவாக இருக்கிறது' என்றார்...
கண்ணை முழுவதும் திறக்காமலும் முழுவதும் மூடாமலும் அரைக்கண் போட்டபடி உலகைப் பார்ப்பதிலே அவருக்கு ஓர் ஆனந்தம் இருந்தது. நிம்மதி இருக்கிறது. தூரத்திலே தேவாரம் தண்ணீரடியில் முங்கி உட்கார்ந்திருக்கும்போது கேட்கும் தூரத்து ரீங்காரம் மாதிரி சுகமாக இருக்கிறது. அதோ தெரிகிறது என் புஸ்தகம்... என்னுடைய கால் கட்டைவிரல்தான்... இனி எத்தனை நேரம் எனக்கு இது தெரிந்துகொண்டிருக்கும்... ஸ்மரணையில் கால் இருக்கிறமாதிரி தெரியவில்லையே. கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா? ஸ்மரணைக்குப் புலனாக வேண்டாமா? கால் கட்டைவிரல் ரொம்ப தூரத்திலிருக்கிறதோ... இரண்டு மைல் தூரத்தில் சீ... எட்டு மைலாவது இருக்க வேண்டும். அதோ அந்தப் புஸ்தகம் இப்பொழுது அதுவும் தூரத்தில் தெரிகிறதே... அதில் என்ன எழுதி வைத்திருந்தேன்... கணக்கா... சுவடியா... அழகிய நம்பியைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டும்... எது இருந்தால் என்ன?... நாம் செத்துப் போனால் இந்தக் கால் கட்டை விரல் சாம்பலாகத்தானே... அது எவ்வளவு நேரம் எனக்குத் தெரியப் போகிறதோ... கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துக்கொண்டே இருப்போமா... அதுவும் சுகமாகத்தானிருக்கிறது... உறக்கம் வருகிறதோ... அசதியாக வருகிறதே நிம்மதியாகக் கண்ணை மூடினால்... அப்பா என்ன சுகம்... மூச்சு நின்றது... கைக்கட்டை விரல்கள் உள்வாங்கின... காட்டு மலம் வந்தது... நான் கழன்றது... ஸ்மரணை சுழன்றது... உயிர் - ஆமாம் - உயிரும் அகன்றது... அன்று கருவூரிலே உருவற்று நிலைத்த பிண்டம் இன்று உருவுடன் வதங்கிக் கிடந்தது.
சுழி
சாம்பல் காற்றோடு போச்சு; பெயர் பெயரோடு போச்சு... மனித மனம் இம்மாதிரி அனந்த கோடிக் கூடுகளைக் கட்டிக்கட்டி விளையாடியது... கைலாசபுரத்து மருத மரம் நிழல் கொடுத்தது. மரம் பூத்துக் காய்த்தது, பழுத்தது... ஆற்றில் தண்ணீர். தண்ணீர் மணலிலும் படியிலும் தவழ்ந்து ஓடியது. கள்ளிப்பட்டியானால் என்ன, கைலாசபுரமானால் என்ன? காலவெள்ளம் தேக்கமற்று ஓடிக் கொண்டே இருந்தது... அதிலே வரையில்லை வரம்பில்லை... கோடுகூடத் தெரியவில்லை... கருவூரிலானால் என்ன? காட்டூரிலானால் என்ன? சமாதியோ... பிரக்ஞையோ எதுவானால் என்ன?...
புதுமைப்பித்தன் கதைகள்
679