பயல் 'சுரணாவுகிற' தொழிலில் ஆரம்பிக்கிறான். கண்கள் ஏற ஏறச் சொருகுகிறது. பல் தன்னையறியாமல் இளிக்கிறது. இந்த அலங்கோலக் காட்சியில், மனிதனுடைய அசம்பாவிதமான அசட்டுத்தன அலங்கோலத்தை பரிபூரணமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்த அவளுடைய தேங்கிய துக்கம், வந்த சிரிப்பையும் அடக்கிக் கோபாவேசமாக மாறுகிறது. தன் வீட்டுக்குள் தன் கௌரவத்தைக் கெடுக்க யாருக்குத் தைரியம் என்ற சீற்றம்.
"யாருடா நீ களவாணிப் பயலே? எங்கே வந்தே? யாரைக் கேட்டுக்கிட்டு உள்ளே நொளஞ்சே? எடு செருப்பை!" என்று புஸ்தகத்தால் மண்டையில் போடுகிறாள்.
அவன் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு "மார்க்குப் பார்க்க வந்தேன்" என ஊளையிடுகிறான். எதிர்ப்பை எதிர்பாராததால் அவ்வளவு பீதி.
"உன்னை லவ் பண்ணினேன்; தூரத்திலிருந்தே லவ் பண்ணினேன்" எனப் பேத்துகிறான்.
"போடா வெளியே! மொதல்லெ வெளியே போ?" என்று அதட்டிக் கைகளை ஓங்குகிறாள்.
அவன் அவசர அவசரமாக ஓடுகிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கைக்கு வசமாக ஒன்றும் அகப்படவில்லை. ஒரு ஜதை செருப்புத் தென்படுகிறது. இரண்டையும் விரல்களில் இறுக்கிக்கொண்டு, வராந்தாவிலிருந்து இறங்குகிறவன்மீது விட்டெறிந்து, "போடா கரப்பான் பூச்சி!" என்று கதவைப் படால் என்று சாத்தித் தாழிட்டு விடுகிறாள். அதற்குள் வசை மொழி அவ்வளவும் அவளுக்குக் காலியாகிவிட்டது.
ஆவேசம் ஒடுங்க, பயம் தலைவிரித்தாடுகிறது. தான் தப்பித்த ஆபத்தின் பூரணத் தன்மையைப் புரிந்துகொள்ள அவகாசம் ஏற்படுகிறது.
நாற்காலியில் உட்காருகிறாள். மேல் மூச்சு வாங்க, உடல் நடுங்க, வியர்வை முகத்தில் அரும்புகிறது. அவன் போய்விட்டானா என்று பார்க்கவும் பயம். கூச்சலிடவும் வாய் எழவில்லை.
சிறிது நேரத்தில் மனம் கொஞ்சம் நிலைகொள்ளுகிறது.
வெளியில் போய் பூட்ஸை எடுக்கக்கூடப் பயம்.
ஜன்னல் பக்கத்தில் நின்றுகொண்டு, வெளியே விளையாடும் குழந்தையை, "குஞ்சம்மா! குஞ்சம்மா!" என்று கூப்பிடுகிறாள்.
குழந்தை தன் பொக்கிஷங்களை வாரிச் சுருட்டிக்கொண்டு, பயிற்சியற்ற குழந்தை ஓட்டத்துடன் "என்னச் சித்தீ" என்றுகொண்டு ஓடிவருகிறது.
"அந்த பூடுசெ எடுத்துகிட்டு உள்ளே வாடி" என்று கதவைத் திறந்து குழந்தை உள்ளே வந்ததும் கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொள்ளுகிறாள்.
புதுமைப்பித்தன் கதைகள்
697