உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை கைமாற்றிப் பாட்டையாவிடம் சேர்ப்பிக்கப்படுகிறது. ஊதல் சப்தத்தை மாத்திரம் விடவில்லை.

அதே சமயத்தில் திருமங்கல்யதாரணமும் நிகழ்கிறது... பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுகிறது. மாப்பிள்ளையின் கையில் மட்டும் சிறிது நடுக்கம்... முகத்தில் மலர்ச்சியானாலும்...!

கிழவனார் பேரன் கிராப்புத் தலையைத் தடவிக்கொண்டு மணமேடையைப் பார்க்கிறார். என்றாலும் பார்வையுடன் நினைவு லயிக்கவில்லை.

அம்மி மிதித்து அருந்ததி காட்டும் சடங்குகள் ... யாவும் நடை பெறுகின்றன.

ஆசீர்வாதம்...

பெரியோர் யாவர் முன்பும் தம்பதிகள் வந்து வணங்குகின்றனர். ஒவ்வொருவரும் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கின்றனர்.

கடைசியாக முதல் மாமனார் முறை.

அவர்முன் வந்ததும் சுந்தரவடிவேலு சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார்.... பெண்ணும் விழுந்து கும்பிடுகிறாள்.

பெரியவர் கண் கலங்குகிறது.... திருநீற்றை இருவர் நெற்றியிலும் இடுகையில் அவர் கை நடுங்குகிறது.

சின்னக் குழந்தை?

"அப்பா! நாந்தான் நல்லா ஊதியை ஊதினேன்! அந்த அக்கா மூஞ்சிலேகூட ஊதினேனே ...." என்கிறது. மணப்பெண்ணின் முகம் சிவக்கிறது. யாவரும் சிரிக்கின்றனர்.

மாப்பிள்ளையும் குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு முத்த மிட்டு "அக்கா இல்லேட - சித்தி" என்றுகொண்டே ஏதோ யோசனை தட்டியது போல பிரகாசமான முகத்துடன் குழந்தையைப் புது மனைவி கையில் கொடுக்கிறார்.

சற்று நேரம் தயங்கி நின்ற பெண் தயக்கத்துடன் வாங்கி பெண்களுக்குரிய பழக்கப்படி இடுப்பில் உட்கார வைக்கிறாள்.

பக்கத்தில் நிற்கும் பெண்கள் சிரித்து ரகளை செய்கின்றனர்.

இடுப்பிலிருந்த குழந்தை இறங்கி, "சித்தி! வா நான் கூட்டிக் கொண்டு போகிறேன்" என அவள் நடுவிரலைப் பிடித்துக்கொண்டு முன் நடக்கிறது.

"ஒனக்கென்னமா கவலெ! மகளே உன்னைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்" என்கிறாள் பெண் தோழி.

மறுபடியும் சிரிப்பும் அட்டகாசமும்.

பெண்கள் கூட்டம் மணப்பெண்ணுடன் வீட்டுக்குள் செல்லுகிறது.

மாப்பிள்ளையும் முதல் மாமனாரும் தனித்து நிற்கின்றனர்.

மாப்பிள்ளை "என்ன மாமா, நீங்க மட்டுந்தான் வந்தீர்களா? மதினியைக் காணலியே."


722

சிற்றன்னை