உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில, 1943ஆம் வருஷத்துச் சரக்கு; மீதியுள்ளவை 1936க்கும் அதற்கு முன்பும் பிறந்தவை; 1943ஆம் வருஷத்துச் சரக்குகளை 1943ஆம் வருஷத்துச் ஆசாமிகள் பாராட்டுகின்றனர். அதைப் போலவே, 1936ஆம் வருஷத்துச் சரக்கையும் அந்தக் காலத்து 'இவர்கள்' பாராட்டினார்கள். பார்க்கப் போனால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான் எனக்குப் படுகிறது. இந்தத் திரட்டு ஒரு வகையில் நல்லமாதிரி என்பது என் நினைப்பு. என்னைப் பாராட்டுகிறவர்களும் என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறவர்களும் மனசு பக்குவப்படும் முறையைக் கண்டுகொள்ள இது சௌகர்யமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. அப்படித்தான் நான் இதைப் பாவிக்கிறேன்.

1943ஆம் வருஷத்துச் சரக்குகளைப் பற்றியே சில சர்ச்சைகள், அவை பிறந்த காலத்திலிருந்து இருந்து வருகின்றன. காரணம் பலருக்கு என் போக்கு என்ன என்பது புரியாதிருப்பதுதான்.

என் கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனைக் கதையைப் படித்துவிட்டு, என்னிடம் வந்து, "உங் களுக்குப் பேய்பிசாசுகளில் நம்பிக்கை உண்டா? ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?" என்று கேட்டார். நான், "பேயும் பிசாசும் இல்லை என்று தான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே" என்றேன். "நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்தமென்ன?" என்று கேட்டார். "சத்தியமாக எனக்குத் தெரியாது" என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்துகொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக்கொண்டு இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாய் வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி கதை எழுதியிருப்பதாகவும் 'கயிற்றரவு' என்று சொல்லுவார்களே ஒரு மயக்க நிலை, அதை அழகாக வார்த்திருப்பதாகவும் சொன்னார். இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக் கொழுந்து என்று கருதப்படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ். அப்படிச் சொன்னால் யாருக்குத்தான் தலை சுற்றி ஆடாது? அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்.

காஞ்சனைக்குப் பிறகு சாப விமோசனம் இதே மாதிரி அவதிக்கு உள்ளாயிற்று. முக்கால்வாசிப் பேருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. விமரிசகர் 'சென்று தேய்ந்திறுதல்' என்றார். ஆனால் இன்னும் ஒருவர் வால்மீகி கதையில் அகலிகை கல்லாகவில்லையென்றும் ஜனங்களுக்கு உண்மையைவிட உண்மையின்மீதுள்ள பாசிதான் கண்களுக்குப் பளபளப்பாக இருக்கிறது என்றார். பாசி என்பதுதான் என்ன? மனப்பக்குவத்தின் ஒரு நிலைதானே அதுவும்? அப்படிப் பார்க்கப்போனால் ஜனக ராகங்களிலிருந்து ஜன்ய ராகங்கள் பிறப்பது எல்லாமே பாசிதானே? தொன்னைக்கு நெய்தான் ஆதாரம் என்று கருதுகிறவர்கள்தாம், ஒரு குறிப்பிட்ட கோல வகையில்தான் எதுவும் அமைந்திருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். வேறு ஒருவிதமான கோலம் போட்டுக் காண்பிக்க முடியாது, கூடாது என்று கருதுகிறவர்கள் - இவர்கள் தத்துவவாதிகள். உலக சிருஷ்டி இவர்களுடைய தத்துவத்துக்குள் மட்டும் ஒடுங்கிவிடவில்லை.

778

பின்னிணைப்புகள்