கருத்துக் கண்காட்சி/நெடுந்தொகை—தொகுப்புக் கலை
தமிழ்ச் சங்கப் பகுதி
12. நெடுந் தொகை—
தொகுப்புக் கலை
திரட்டூக்கம் :
உதிரிகளைத் திரட்டித் தொகுத்து வைக்கும் திரட்டூக்கம் (Acquisition) குழவி முதல் கிழவி கிழவன் வரையிலான மக்களின் இயல்பூக்கங்களுள் (Instincts) ஒன்றாகும். உலக மயக்கத்திற்கு உட்பட்டு வேண்டாத பொருள்கள் பலவற்றை விரும்பி மிகுதியாகத் தொகுத்து வைப்பதனினும், சிறந்த செய்யுள்களைத் தொகுத்து வைப்பது ஒரு பெரிய கலை உணர்வாகும். இத்தகைய செய்யுள் தொகுப்புக் கலையுணர்வு, மக்களினத்தின் ஒரு பிரிவினரிடையே பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்ததெனின், அந்தப் பிரிவினர் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியவ ராவர்.
ஆந்தாலஜி (Anthology)
செய்யுள் தொகுப்புக்கலை ஆங்கிலத்தில் ’ஆந்தாலஜி’ (Anthology) எனவும், பிரஞ்சில் ஆந்தொலொழி’ (Anthologie) எனவும், இலத்தீனில் ஆந்தொலொழியா (Anthologia) எனவும் பெயர் வழங்கப்படுகிறது. இப் பெயர்கள், 'ἀνθολογία' என்னும் கிரீக் சொல்லிலிருந்து வந்தவையாகும். இந்த கிரீக் சொல்லுக்கு (ஆந்தொலொழியா) மலர்த் தொகுப்பு-மலர் மாலை (Flower gathering) என்று பொருளாம். பாமாலை என்னும் தமிழ் வழக்காறு ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
உலகத் தொகை நூல்கள்:-
கிர்க் மொழியில் கி.மு. முதல் நூற்றாண்டில், மெலீகர் (Meleagar) என்னும், கிரேக்க அறிஞர் தம் பாடல்களுடன் பிறர் பாடல்களையும் தொகுத்து 'மெலிகர் மாலை' (Garland of Meleagar) என்னும் பெய்ரில் முதல் தொகை நூலை உருவாக்கினார். இலத்தீனில் கி.பி. ஐந்தாம் நூற் றாண்டில் ‘ழோன்னெஸ் ஸ்டோபேயுஸ் (Joannes Stobaeus) என்பவரால் செய்யுளும் உரைநடையும் கலந்த ஒரு தொகைநூலும், சம்சுகிருதத்தில் பத்தாம் நூற்றாண்டில் ‘கவிந்த்ர வசன சமுச்சயம்’ என்னும் தொகை நூலும், பிரெஞ்சில் பதினாறாம் நூற்றாண்டில் ’துய்பெல்லா’ (Joachin du Bellay) என்னும் பிரஞ்சு அறிஞரால் “Voeu d’un Vanneur De Ble Aux Vents’ (காற்றில் கோதுமை தூற்றிக் கொழித்தெடுப்பவனது விருப்ப வெளியீடு) என்னும் தொகை நூலும், ஆங்கிலத்தில் பதினாறாம் நூற்றாண்டில் 'டாட்டல்' (Tottle) என்பவரால் 'Book of Songs And Sonnets' or' Tottle's Miscellany' என்னும் தொகை நூலும் முதல் முதலாகத் தொகுத்து உருவாக்கப்பட்டன.
தமிழ்த் தொகையின் தொன்மை:
தமிழில் தொகை நூல்களைக் குறிக்க மாலை, கோவை முதலியனவாக ஏறக்குறைய இருபது பெயர்கள் உள்ளன. தமிழில், இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகட்கு, முன் தலைச் சங்க காலத்தில் பரிபாடல், களரியாவிரை முதலிய தொகை நூல்களும், இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன் இடைச் சங்க காலத்தில் கலி, வெண்டாளி, வியாழமாலை முதலிய தொகை நூல்களும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நெடுந்தொகை, குறுந்தொகை முதலிய தொகை நூல்களும் தொகுத்து உருவாக்கப்பட்டன. சங்ககாலத்திற்குப் பின் எண்ணற்றவை தோன்றியுள்ளன.
எட்டுத்தொகை :
இப்பொழுது முழுதும் கிடைத்திருக்கும் தமிழ்த் தொகை நூல்களுள் மிகவும் பழமையானவை 'எட்டுத் தொகை' எனப்படும் கடைச் சங்க நூல்கள் எட்டுமாகும். இவற்றை,
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்தபதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம்என்று,
இத்திறத்த எட்டுத் தொகை"
என்னும் பழம் பாடலால் அறியலாம். எட்டு நூல்களும் இந்தப் பாடலில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள முறை சரியன்று, இதற்கு முன்பே இறையனார் அகப்பொருள் உரையில் எட்டுத்தொகை நூல்கள் பின் வருமாறு பெயர் தரப் பெற்றும் வரிசைப்படுத்தப்பெற்றும் உள்ளன:"அவர் களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந் தொகை நானூறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறு நூறும் பதிற்றுப் பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும்.... என்று இத்தொடக்கத்தன.” என்பது அந்த உரைப் பகுதி
நெடுந்தொகை:
மேலே, அகநானூறு என்னும் நூல் 'நெடுந்தொகை நானூறு’ என்னும் பெயருடன் முதலில் நிறுத்தப்பட்டுள்ளமை காண்க. எட்டுத் தொகை நூல்களுள் நெடுந்தொகையே முதன்மையானது. “நெடுந்தொகை முதலாகிய தொகை யெட்டும் என்றவாறு"- என்னும் பேராசிரியரின் (தொல்காப்பியம்- செய்யுளியல்-236) உரைப்பகுதியும், “அவை நெடுந்தொகை முதலிய தொகை யெட்டுமாம்"என்னும் நச்சினார்க்கினியரின் (தொல். செய்.236) உரைப் பகுதியும் மேலும் இதற்குச் சான்று பகரும்.
இந்நூலுக்கு அகநானூறு என்னும் பெயருக்கு முன்பு, நெடுந்தொகை என்னும் பெயரே வழங்கப்பட்டமையை, இந்நூலின் பாயிரப் பாடல்களில் உள்ள, ‘முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்கு’, ‘தொகையில் நெடிய தனை’ என்னும் பகுதிகளாலும் அறியலாம்.
தொகுப்பு வரலாறு:
இந்நூல் தொகுக்கப்பட்ட வரலாற்றை ஆய்வோமாயின், இந்நூலின் முதன்மையும் நெடுந்தொகை என்னும் பெயர்க் காரணமும் தாமே விளங்கும். கடைச் சங்க காலத்தில் எண்ணிறந்த ஆசிரியப் பாக்கள் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தன. அவற்றைச் சங்கத்தார் திரட்டினர். புறப்பொருள் பற்றிய பாடல்களினும் அகப் பொருள் பற்றிய பாடல்களே மிக்கிருந்தன. வீடு திருந்தினால்தானே நாடு திருந்தும்! அவ்வகப்பொருள் பாடல்களுள் மிகவும் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து நூலாக்க விரும்பினர். எல்லாவற்றையும் ஒரே நூலாகத் தொகுக்கின், நூலைக் கையாள்வதற்கும் தொடர்ந்து படிப்பதற்கும் தொல்லையாயிருக்கு மாதலின் பல நூல்களாகத் தொகுக்கலாயினர். கிடைத்திருந்த பாடல்களுள், அடியளவால் நீண்ட பாடல்கள், மிகவும் குறுகிய பாடல்கள், நடுத்தரமான பாடல்கள் என மூவகை யிருக்கக் கண்டனர். அம் மூவகைப் பாடல்களையும் ஒத்த எண்ணிக்கையில் மூன்று தனி நூல்களாகத் தொகுக்க விரும்பினர். ஒவ்வொன்றையும் நானூறு பாடல்கள் வீதம் தொகுத்தால் ஏறக்குறைய ஒத்த எண்ணிக்கை வரும்போல் தோன்றியது. எனவே, ஒவ்வொரு வகை அளவிலும் நானுாறு பாடல்கள் தேறும் படியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மூன்று தொகை நூல்கள் உருவாகின. அவற்றிற்குப் பெயர் வைக்க வேண்டுமே!
பதின் மூன்று அடிகட்குக் குறையாமல் முப்பத் தோரடிவரையு முள்ள நானூறு நெடும் பாடல்களின் தொகுப்புக்கு நெடுந்தொகை நானுாறு எனப் பெயரிட்டனர். நான்கு அடிக்குக் குறையாமல் எட்டடிக்கு மிகாமல் உள்ள நானூறு குறுகிய சிறிய பாடல்களின் தொகுப்புக்குக் ‘குறுந் தொகை நானூறு’ எனப் பெயர் வைத்தனர். இவ் விருவகை அளவுக்கும் இடைப்பட்டனவாய் ஒன்பதடிக்குக் குறையாமலும் பன்னிரண்டடிக்கு மிகாமலும் உள்ள நானுரறு பாடல்களின் தொகுப்பு (நல்+திணை= )'நற் றிணை நானூறு’ எனப்பட்டது. ஏதாவது ஒரு பெயர் வைத்தாக வேண்டுமல்லவா? இந்த மூன்று நூல்களையும் இப்படி அடி வரையறை செய்யாமல், பத்தடிக்குக் குறையாதவற்றை ஒரு நூலாகவும், படித்தடிக்குமேல் இருபதடிக்குக் குறையாதவற்றை இன்னொரு நூலாகவும் இருபதடிக்கு மேற்பட்டவற்றை மற்றொரு நூலாகவும் தொகுத்திருக்கலாமே எனின்,-இந்த அடிவரையறையின் படி செய்தால், நானுாறு பாடல்கள் வீதம் என்ற ஒத்த எண்ணிக்கை தேறாமற் போகும். எனவேதான் இப்போதுள்ள முறை பின்பற்றப்பட்டது. நெடுந் தொகை என்னும் பெயர்க்காரணம் இப்போது விளங்கலாம்.
தொல்காப்பியத்தில், பாக்களுள் ஆசிரியப் பாவே முதலில் கூறப்பட்டிருத்தலானும், புறத்தினும் அகமே முதலில் பேசப்பட்டிருத்தலானும், எட்டுத் தொகை நூல்களுள் ஆசிரியப்பாவால் ஆன நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்னும் அகப் பொருள் நூல்கள் முதலிடம் பெற்றன. இவற்றுள்ளும் அடியளவால் நீண்டிருத்தலின் நெடுந்தொகை முதன்மை பெற்றது.
எண் முறை:
நெடுந்தொகை தொகுத்த முறையில் வியத்தற்கும் நயத்திற்கும் உரிய வேறொரு கலைத்திறன் உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்தும் அகன் ஐந்திணைகள் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இந்த அகன் ஐந்திணைகளையும் பற்றியது நெடுந்தொகை. இந்நூலிலுள்ள நானுாறு பாடல்களையும் ஐந்திணைகளுக்கும் பங்கிட்டு எண் இட்டு வரிசைப்படுத்தி யிருக்கும் முறை ஓர் அருங்கலைச் செயலாகும்.
நானுாறு பாடல்களில் நாற்பது பத்துப்பாடல்கள் (10x40=400) உள்ளன. ஒவ்வொரு பத்திலும் ஒற்றைப் படையாக உள்ள ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்னும் எண்கள் கொண்ட பாடல்கள் பாலைத்திணைக்கு அளிக்கப்பட்டுள்ளன. இரட்டைப்படை எண்களுள் இரண்டு, எட்டு என்னும் இருவகை எண் கொண்ட பாடல்கள் குறிஞ்சிக்கும், நான்கு முல்லைக்கும், ஆறு மருதத்திற்கும் பத்து நெய்தலுக்குமாகப் பங்கிடப்பட்டுள்ளன. அஃதாவது, ஒவ்வொரு பத்துப்பாடல்களிலும் பாலைக்கு ஐந்தும் குறிஞ்சிக்கு இரண்டும் முல்லை, மருதம், நெய்தல் ஆகிய வற்றிற்கு ஒவ்வொன்றும் இருக்கும். எனவே, நானுாறு பாடல்களிலும், பாலைக்கு இருநூறும், குறிஞ்சிக்கு எண்பதும், மற்ற வற்றிற்கு நாற்பது வீதமும் இருக்கும். இந்த எண் தொகுப்பு முறை மிகவும் வேலைப்பாடு கொண்ட ஒரு வகைக் கலைச் செயலாகும்.
இரு பெருந் திணைகள்:
நெடுந்தொகையில் பாலைத்திணைப் பாடல்கள் மிகுதியாய்த் தொகுக்கப்பட்டிருப்பது பற்றி ஒருசிறிது ஆராய வேண்டும். ஐந்திணைகளைக் குறிஞ்சி, பாலை என்னும் இருபெருந் திணைக்குள் அடக்கிவிடலாம். மருதத்தைச் குறிஞ்சியிலும், முல்லை நெய்தல் இரண்டையும் பாலையிலும் அடக்கலாம். குறிஞ்சி என்பது புணர்தல்; மருதம் என்பது ஊடுதல்; ஊடுதலின் முடிவு கூடுதல். குறிஞ்சியிலும் மருதத்திலும் தலைவன்-தலைவியர் இணைந்தேயிருப்பர்’ எனவே, ஊடுதலாகிய மருதத்தைக் கூடுதலாகிய குறிஞ்சியில் அடக்கலாம். அடுத்து,-பாலை என்பது பிரிதல்; முல்லை, பிரிந்து ஆற்றியிருத்தல்; நெய்தல், பிரிந்தபோது ஆற்றாது இரங்குதல். இம்மூன்றும் பிரிவு தொடர்பானவை யாதலின், முல்லையையும் நெய்தலையும் பிரிதலாகிய பாலையுள் அடக்கலாம். ஆகவே, ஐந்திணைகள், குறிஞ்சி, பாலை என்னும் இரண்டனுள் அடங்கும். "இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்” என்னும் தொல்காப்பிய (செய்யுளியல்-208) நூற்பா இதனைக் குறிப்பாய் உணர்த்துகிறது.பெரும்பான்மைக் கட்சி:
இனிக்குறிஞ்சியும் பாலையும் பற்றி ஆய்வோம்: குறிஞ்சி புணர்தல்; பாலை பிரிதல். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை. குறிஞ்சி என்னும் கட்சித் தலைவனுக்கு மருதத்தான் ஒருவன் மட்டுமே வாக்கு (VOTE) அளித்துள்ளான். பாலை என்னும் கட்சித் தலைவனுக்கோ முல்லையான், நெய்தலான் ஆகிய இருவரின் வாக்குகள் கிடைத்துள்ளன. குறிஞ்சியினும் பாலையே பெரிய கட்சி. இந்த அடிப்படையில் நோக்கின், நெடுந்தொகையிலுள்ள நானூறு வாக்குகளுள் (பாடல்களுள்) குறிஞ்சிக் கட்சிக்கு (குறிஞ்சி 80+மருதம் 40=120) நூற்றிருபது வாக்குகளும், பாலைக்கட்சிக்கு (பாலை 200+ முல்லை 40+ நெய்தல் 40=280) இருநூற்றெண்பது வாக்குகளும் கிடைத்துள்ளமை புலனாகும். பாலை, மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட பெரும் பான்மை (Majority) வாக்குகள் பெற்று மிகப் பெரிய கட்சியாக நெடுந் தொகையில் ஆட்சி செலுத்துகிறது.
பாலை பெற்றிருக்கும் பெரும் பான்மை, பாலைக்கு உரிய பிரிதலாகிய துன்பச் சுவைப் பாடலையே பெரிதும் மக்கள் விரும்பியுள்ளனர் என்பதை அறிவிக்கிறது.
இன்பியல்-துன்பியல்:
நாடகக் கதையினை இன்பியல் (Comedy), துன்பியல் (Tragedy) என இருவகையாகப் பிரித்துக் கூறுவர். இன்பமாக முடிவது இன்பியல். துன்பமாக முடிவது துன்பியல். குறிஞ்சியை இன்பியல் எனவும் பாலையைத் துன்பியல் எனவும் கூறலாம். இதனை, இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் என்னும் தொல்காப்பிய (செய்யுளியல்-208) நூற்பா குறிப்பாய் உணர்த்துவது போல் இல்லையா?முதலில் இன்பியலை மிகுதியாய் விரும்பிப் படிப்பவர்கள் அதில் தெவிட்டல் ஏற்பட, பின்னர்த் துன்பியலில் சுவை காணத் தொடங்குவர். புணர்ச்சி என்பது காம வெறியாட்டத்தின் விளைவு. பிரிவின் போதுதான் காதல் உணர்வு கொழுந்து விட்டுத் தளிர்த்துக் காணப்படும். காதல் சுவையின் உயர்ந்த எவரெஸ்ட் கொடுமுடி எல்லையைக் காணவேண்டுமாயின், குறிஞ்சிப் பாடல்களினும் பாலைப் பாடல்களிலேயே மிகுதியாகக் காணமுடியும். எனவே, நெடுந்தொகையில் பாலைப் பாடல்கள் மிகுதியாய்த் தொகுக்கப்பட்டிருப்பதின் காரணம் புலனாகலாம்.
முறை வைப்பு:
தொல்காப்பியத்தில் (அகத்திணையியல்-5,9) முல்லை குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசையில் ஐந்திணைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நெடுந்தொகையில் உள்ள முறைவைப்புப் பொருந்துமா? ‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்திலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்னும்(தொல்-அகம்-5) நூற்பாவின் உரையில், 'சொல்லவும் படும்’ என்னும் எதிர் மறை உம்மையால் இம்முறை மாற்றியும் சொல்லலாம் என்பது பெறப்படும் என்பதாக, இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுதியிருப்பது காண்க.
நெடுந் தொகையில் ஒவ்வொரு திணையும் பலரால் பாடப்பட்டிருத்தலானும், ஒத்த எண்ணிக்கையில் இன்றி, 200,80,40,40,40 என்னும் வேறுபட்ட எண்ணிக்கையில் இருத்தலானும், இந்நூல் ஐந்து திணைகளும்கலந்துதொகுக்கப்பட்டது. நெடுந்தொகை நானுாறில் பாதிப் பாடல்கள் பாலையாயிருப்பதால் ஒன்று விட்டு ஒன்றாக ஒற்றை எண்களில் பாலையை அமைத்தும், பாலைப்பாக்களின் இடையிடையே ஒன்று விட்டு ஒன்றாக மற்ற பாக்களை அமைத்தும் தொகுத்துள்ள முறையின் அழகே அழகு! தமிழர்தம் பாடல் தொகுப்புக் கலையின் உயர் திறனுக்குச் சான்று பகர இஃதொன்றே போதுமே!
மூன்று பிரிவுகள்:
நெடுந் தொகைக் குள்ளேயே வேறொரு கலையழகும் விளங்குகிறது. மாமூலனார் முதல் உலோச்சினார் ஈறாக உள்ள புலவர்கள் நூற்றுநாற்பத்தைவரால் பாடப்பட்டுள்ள இந்நூலின் நானூறு பாடல்களும் மூன்று பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் நூற்றிருபது பாடல்கள் ‘களிற்றி யானை நிரை’ என்னும் பெயரிலும், நூற்றிருபத்தொன்று முதல் முந்நூறு வரையுமான நூற்றெண்பது பாடல்கள் 'மணிமிடை பவளம்’ என்னும் பெயரிலும், இறுதி நூறு பாடல்கள், 'நித்திலக் கோவை’ என்றும் பெயரிலும் தொகுக்கப்பட்டுத் தனித்தனி நூல்கள் போல் காட்சியளிக்கின்றன. இம் மூன்றின் பெயர்க் காரணம் தெளிவு செய்யப்படவில்லை.
ஆண்யானை வரிசையைப் போல எடுப்பான நடையும் மிடுக்கான கருத்தமைப்பும் கொண்ட பாடல்களின் தொகுப்பு களிற்றியானை நிரை என்றும், நீலமணியும் செம்பவளமும் கலந்த மாலை போல நடையாலும் அமைப்பாலும் ஒரு சிறிது வேறுபட்ட பாடல்களின் தொகுப்பு மணி மிடை பவளம் என்றும், ஓரின முத்து மாலையைப் போல தடையாலும் அமைப்பாலும் ஒத்த பாடல்களின் தொகுப்பு நித்திலக் கோவை என்றும் பெயர் வழங்கப்பட்டதாக ஒருவாறு காரணம் கூறலாம்.
பிற நூல்களில் இல்லாத இந்தப் பிரிவு முறை நெடுந் தொகை நானூற்றில் இருப்பது ஒரு கலைச் சிறப்பாகும்.
நெடுந் தொகை தொகுத்தவர், முதல் நூற்றிருபது பாடல்களைச் சீர்செய்து முதல் பாகம் என்னும் வறட்டுப் பெயருக்குப் பதிலாகக் 'களிற்றியானை நிரை' எனவும், அடுத்த நூற்றெண்பது பாடல்களை ஒழுங்கு செய்து இரண்டாம் பாகம் என்னும் வெறும் பெயருக்குப் பதிலாக ‘மணிமிடை பவளம்’ எனவும், இறுதி நூறு பாடல்களை அணிசெய்து மூன்றாம் பாகம் என்னும் சுவையற்ற பெயருக்குப் பதிலாக 'நித்திலக் கோவை’ எனவும் பெயர் வழங்கியுள்ளார். நானூறு பாடல்களையும் அலுப்பு சலிப்பின்றி இடைவெளி தந்து படிப்பதற்கும், சுவடியை எளிதாகக் கையாள்வதற்கும் இந்தப் பிரிவினை வசதி செய்கிறது. இந்த மூன்று பிரிவுகளையும் மூன்று தனித்தொகை நூல்களாகக் கருதியவர் போல, நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் பல இடங்களில் இம்மூன்று பெயர்களையும் விதந்து குறிப்பிட்டுள்ளார். நெடுந்தொகையை மூன்றாகப் பகுத்ததுகூடப் பெரிதில்லை; மூன்றுக்கும் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்னும் எடுப்பான கவர்ச்சியான இனிய அழகிய பெயர்களை வழங்கியிருப்பது ஒரு பெரிய கலைக்கூறு ஆகும்.
தொகுப்பாளரும் காலமும்:
நெடுந் தொகையைப் பாண்டியர் அவையிலே சங்கப் புலவர் தொகுத்ததாக நெடுந்தொகைப் பாயிரச் செய்யுள் கூறுகிறது. அச்செய்யுளின் அடியிலுள்ள உரைநடைப் பகுதியில், ‘தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி; தொகுத்தான் உருத்திர சன்மன், எனக் கூறப்பட்டுள்ளது. பேராசிரியரும் (தொல்-செய்யுளியல்-149உரை), நச்சினார்க் கினியரும் (மலைபடு கடாம்-உரை), தொகை நூல்களைச் சங்கத்தார் தொகுத்ததாகப் பொது வாகக் கூறியுள்ளனர். இதனால் அறியப் படுவதாவது,சங்கத்தார் பலரும் சேர்ந்து நூல் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இன்னின்ன நூலை இன்னின்னார் சீர் செய்ய வேண்டும் எனப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதன் படி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் மேற்பார்வையில் உருத்திர 56TD நெடுந்தொகையைத் தொகுத்தார்.
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி புலவராகவும் திகழ்ந்தார். நெடுந் தொகையில் அவர் பாடல் (26) ஒன்று உள்ளது. எனவே, நெடுந்தொகை, கி.பி. முதல் நூற்றாண்டிற்குள் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்த மன்னரைப் பற்றிய செய்தி. நெடுந்தொகையில் (251,265) கூறப்பட்டிருத்தலால், இந் நூல் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குப்பின் தொகுக்கப்பட்டதாகும். பல சான்றுகள் கொண்டு பார்க்குங்கால், நெடுந்தொகை கி.மு. முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது எனக் கூறலாம்.
அகப்பொருள் நூல்களுக்குள் மிகச் சிறந்ததாதலின், அகம்-அகப்பாட்டு-அகநானூறு என்றெல்லாம் இந்நூல் விதந்து குறிப்பிடப்படும். நெடுந்தொகை நூல் தொகுப் புக்கலை வரலாற்றின் சுருக்கம் இது. பல மொழித் தொகைநூல்களைப் பற்றி ஆராய்ந்துள்ள அடியேனுக்கு, நெடுந்தொகைத் தொகுப்பளவு கலை நுட்பம், வேறு எம்மொழியிலுள்ள எந்தத் தொகை நூலிலும் இருப்பதாகத் தோன்றவில்லை. தமிழ்நூல் தொகுப்புக்கலை வாழ்க!