கருத்துக் கண்காட்சி/வழி காட்டி
வருக வருக! வணக்கம். கருத்துக் கண்காட்சி பார்க்க வேண்டுமா? சரி. இதோ நான் ஒரு வழி காட்டி (Guide) இருக்கிறேன்-வாருங்கள். நான் ஒவ்வொரு பகுதியாகக் காண்பிப்பேன். இந்தக் கண்காட்சி ஊனக் கண்ணால் பார்க்கும் காட்சியன்று; மனக் கண்ணால்-கருத்துக் கண்ணால் பார்க்கும் காட்சியாகும். இந்தக் கண்காட்சியில் இருபத்தொரு பகுதிகள் , (Stalls) உள்ளன. நாம் ஒவ்வொன்றாகக் காணலாம்:
இதுதான் முதல் பகுதி (Stall). இஃது ஒர் இயற்கைக் காட்சிப் பகுதியாகும். இதில், ஒரு தாமரைத் தடாகத்தில் சேவல் அன்னமும் பெடை அன்னமும் அளவளாவுவதை அறிந்து மகிழலாம்.
இது இரண்டாம் பகுதி. இது ஒரு கலைக் கூடப் பகுதி. இதில் மற்போர்ப் பயிற்சி, படைப் பயிற்சி, கல்விப் பயிற்சி முதலிய பயிற்சிகளைக் காணலாம்.
அடுத்தது மூன்றாம் பகுதி; இது மேடைப் பேச்சுப் பகுதி. மேடைப் பேச்சாளர் பலரை இங்கே பார்க்கலாம்.
புலவர் பகுதியாகிய இந்த நாலாம் பகுதியைப் பாருங்கள். இங்கே முதுபெரும் புலவர்-மகா வித்துவான் ஒருவர் உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை ஈண்டு அறியலாம்.
இதுவா? இது மாதிரி நீதிமன்றப் பகுதி. ஒரு குழந்தையை ஈன்ற தாய் யாரென்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இன்னார்தான் தாய் என்று ஒரு சிலரும், வேறொருவர் தாய் என்று வேறு சிலரும் வாதிடுகின்றனர். சிக்கல் தீர நீதியந் தலைவர் கூறும் தீர்ப்பை அறிந்து கொள்ளலாம். இது ஐந்தாம் பகுதியாகும்.
அடுத்து ஆறாம் பகுதிக்குச் செல்வோம்-வாருங்கள். எழுத்தாளர் பகுதியாகிய இங்கே ஒர் எழுத்தாளர் உள்ளார். அவர் உரை நடை எழுதுவதிலே மிகவும் வல்லவர். அவரது உரை நடையின் சிறப்பை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இது ஏழாம் பகுதி-அச்சுப் பதிப்புப் பகுதி, ஒலைச் சுவடிகளில் உள்ளவற்றை அச்சில் பதிப்பிக்கும் ஓர் அறிஞரை இங்கே காணலாம். என்னென்ன நூல்களெல்லாம் பதிப்பித்திருக்கிறார் என்பதை இங்கே அறியலாம்.
இதோ எட்டாம் பகுதியாகிய தன் வரலாற்றுப் பகுதிக்கு (Autobiography) வந்து விட்டோம். இங்கே ஒருவர் தன் வரலாற்றிலிருந்து ஒரு சிறு பகுதியை நமக்கு அறிவிக்கிறார்.
அடுத்து, ஒன்பதாவதாகிய இந்த வரலாற்றுப் பகுதியில், வரலாறு பற்றியும் அதை அறிந்து கொள்ள உதவும் துணைக் கருவிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இதுதான் பத்தாம் பகுதி-உலகப் பொது அறிஞர் பகுதி. இங்கே, பேரறிஞர்கள் இருவர், உலக உயிர்கள் நன்முறையில் வாழ்வதற்கு உரிய பொதுவான புரட்சிக் கருத்துகளைக் கூறுவதை அறியலாம். அவ்விருவரும் ஒத்த கருத்து உடையவர்கள் என்பதும் புலப்படும்.
இதோ நகைச் சுவைப் பகுதி பதினொன்றாவதாகஉள்ளது. இவ்வளவு நேரம் பார்த்து வருவதால் உண்டான அலுப்பு தீர, இங்கே பலவகைப் பைத்தியங்கள் உளறுவதை அறிந்து நகைத்து மகிழலாம். அடுத்து உள்ளது தமிழ்ச் சங்கப் பகுதி. ஆமாம், பன்னிரண்டாவது இது. உதிரியாகக் கிடந்த பாடல்கள் பலவற்றை நூலாகத் தொகுக்கும் பணி தமிழ்ச் சங்கத்தினுடையது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பதின் மூன்றாவதாகிய இது இலக்கிய வரலாற்றுப் பகுதி யாகும். புரட்சிப் பாவலர் ஒருவரின் இலக்கிய நூல்களின் வரலாறு குறித்து அதாவது விவரம் பற்றி இங்கே அறியலாம். மற்றும் அவருடைய இலக்கிய நூல்களால் உலக வரலாற்றின் சிறு சிறு பகுதிகளும் தெரியவரும்.
அடுத்த பதினான்காம் பகுதி ஏறக்குறைய முன்போன்றதே. ஆனால், வரலாற்று இலக்கியப் பகுதியாகிய இதில், ஒரே ஒருவரின் வரலாறு பற்றிய ஒரே ஒரு இலக்கிய நூல் பற்றி மாதிரிக்காக அறியலாம்.
மேற் கொண்டு, பொருளியல் பகுதியான பதினைந்தாவது பகுதி இதுதான். ஒரு வகையில் கோடீசுவரராக ஆகக் கூடிய வழிபற்றிய பரிந்துரையை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மருத்துவப் பகுதி இல்லாத கண்காட்சி உண்டா என்ன! அடுத்ததான பதினாறாம். பகுதி இதுதான், உறுப்புகளுள் மிகவும் இன்றியமையாததான கண்ணின் நலத்திற்குப் பரிந்துரைக்கும் ஒருவகை மருத்துவத்தை இந்தப் பகுதியிால் அறியலாம்.
கண் காட்சியில் மர இனமாகிய தாவர இயல் (Botany) பகுதி இருக்குந்தானே? அதுதான் இந்தப் பதினேழாம்பகுதி. இதில் ஒருவகைச் செடிகளின் இயல்பு பற்றித் தெரிந்து கொள்ளலாம். பதினெட்டாவது கலைகளின் தாய்ப் பகுதி. இங்கே பல கலைகளின் தாயாக இருக்கிற ஒரு கலையின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னும் மூன்று பகுதிகளே உள்ளன. அடுத்த பத்தொன்பதாம் பகுதி கூத்துப் பகுதியாக உள்ளது. கூத்து என்றால் தெருக் கூத்து அன்று. தில்லைக் கூத்தனது நடனக் கலையை-நாட்டியக் கலையை இங்கே காணலாம்.
அடுத்தது சிறு கதைப் பகுதி. இவ்வளவு நேரம் என்னென்னவோ பார்த்தறிந்து வந்தவர்கட்குக் களைப்பு தீர, சுவையான ஒரு சிறு கதை சொல்லப்படின் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? அந்த வாய்ப்பு இந்த இருபதாவது, பகுதியில் உண்டு.
இன்னும் எஞ்சியிருப்பது ஒரே ஒரு பகுதிதான். போட்டி விளையாட்டுப் பகுதிதான் இருபத்தோராம் பகுதி. போட்டி விளையாட்டைக் காண எவருக்கும் ஆர்வம் இருக்கும்தானே! இந்தப் பகுதியில், சுவையான ஒருவகை விளையாட்டுப் போட்டியைக் கண்டறிந்து மகிழலாம். இதோடு கண்காட்சி நிறைவுறுகிறது.
தமிழ் ஆர்வம் நிரம்பிய தக்கோர்களே! கருத்துக் கண்ணால் கண்டறியக் கூடிய இந்த இருபத்தொரு பகுதிக் காட்சிகளையும் நீங்கள் கண்டறிவதற்குத் துணைபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பற்றிப் பெரிதும் மகிழ்கிறேன்-பெருமைப் படுகிறேன். நன்றி. வணக்கம்.