உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/எலியும் பூனையும்

விக்கிமூலம் இலிருந்து

[வளைக்குள் இருக்கும் எலிக்கும் வெளியில்
நிற்கும் பூனைக்கும் நடக்கும் உரையாடல்]


பூனை -
எலியம்மா, எலியம்மா,
எட்டிப் பாரம்மா.
இனிமையான பண்டம் இங்கே
இருக்கு தேஅம்மா.

எலி -
பூனையாரே, பூனையாரே,
என்ன பண்டமோ ?
போளி, அல்வா, பூந்தி என்று
புரியச் சொல்லுமே !

பூனை -
வளையை விட்டு வெளியில் வந்தால்
தெரிந்து கொள்ளலாம்.
வாய்க்கு இனிய பண்டம் இதனை
உண்டு மகிழலாம்.

எலி -
பொந்து வழியாய் அந்த இனிப்புப்
பண்டந் தன்னையே
போட்டு விட்டுப் போக லாமே !
பூனை நண்பரே.


பூனை -
என்ன செய்வேன்? இந்தப் பொந்தோ
சின்னஞ் சிறியது.
என்னிடத்தில் இருக்கும் பண்டம்
மிகவும் பெரியது !

எலி -
பிட்டுப் பிட்டுச் சிறிது சிறிதாய்
எனது வளையிலே
போட்டு விட்டுப் போக லாமே
பூனை நண்பரே.

பூனை -
கல்லைப் போலக் கடினமாகப்
பண்டம் இருப்பதால்,
கடித்துக் கொறிக்கும் சக்தி உன்போல்
எனக்கும் இல்லையே !

எலி -
இல்லை யானால், தொல்லை யில்லை.
வளையின் வாயிலே
இனிப்புப் பண்டம் அதனைப் போட்டுச்
செல்வீர் நண்பரே,

பூனை -
வளையின் அருகே போட்டுச் சென்றால்
என்ன ஆகுமோ ?
வட்ட மிட்டுத் திரியும் காகம்
விட்டு வைக்குமோ?


எலி -
ஆசை காட்டி மோசம் செய்யும்
அற்பப் பூனையே,
அசடு நானும் அல்ல, அல்ல.
அறிந்து கொள்ளுவாய்.

பூனை -
அடடா ! இதுபோல் நீயும் என்னை
நினைக்க லாகுமோ ?
அருமை யான பண்டந் தன்னை
மறுக்க லாகுமோ ?

எலி -
இனிப்பை நானும் தின்ப தற்கா
வருந்தி அழைக்கிறாய் ?
இல்லை; இல்லை. என்னைப் பிடித்துத்
தின்னப் பார்க்கிறாய்.

உலகில் உள்ள பண்டம் யாவும்
கிடைப்ப தாயினும்,
உயிரைக் கொடுக்க உலகில் எவரும்
துணிந்து வருவரோ ?

வளையை விட்டே உனது வயிற்றில்
வந்து சேர்ந்திட
மடைய னல்ல. வழியைப் பார்த்து
கடையைக் கட்டுவாய் !