உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/பூனை பூனைதான்!…

விக்கிமூலம் இலிருந்து

பூனை பூனைதான்!



பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.

ஒருநாள் அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
விறைத்தே அதனில் பார்த்ததுவே.

கறுத்த நீளக் கோடுகளும்
கனத்த உடலும் கண்டதுமே,
‘சிறுத்தை நான்தான் எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே !’

பூனை இப்படி எண்ணியதே;
புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
பாய்ந்து உடைத்து நொறுக்கியதே.


ஆட்டம் போட்டு வீட்டினையே
அதிரச் செய்தது, புலிபோலே.
பாட்டி அங்கே வந்திடவே
பாய்ந்தது பூனை அவள்மீதும்!

பாட்டி கோபம் கொண்டனளே.
பக்கம் கிடந்த துடைப்பத்தால்
போட்டாள் பூனை தலைமேலே,
‘பொத்’தென உதைகள், புத்திவர.

அடியைத் தாங்க மாட்டாமல்
அங்கே பூனை படுத்ததுவே.
‘கொடிய புலியாய் எண்ணியதே
குற்றம் குற்றம் குற்றம்தான்!

பூனை என்றும் பூனைதான்.
புலியாய் மாற முடியாது’
தானே இப்படி எண்ணியதே!
சாது வாக மாறியதே !