குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/மனித வேட்டை
மனித வேட்டை
காட்டில் உள்ள மிருகமெலாம்
கூட்டம் ஒன்றைக் கூட்டினவாம்.
வேட்டைக் காரர் தொல்லைகளை
விவர மாகப் பேசினவாம்.
“துப்பாக்கியினால் நம்மையெலாம்
சுட்டுக் கொல்லும் மனிதர்களை
இப்போ தேநாம் பழிவாங்க
எழுந்திடுவோம்” எனப் புலிசொல்ல,
“இப்படி வாயால் பேசிடுதல்
எளிதே. ஆனால், மனிதர்களை
எப்படிப் பழிநாம் வாங்குவதோ ?”
என்றே சிங்கம் கேட்டிடவே,
குள்ள நரியும் முன்வந்தே
கூறிட லானது சபைதனிலே:
“நல்ல யோசனை ஒன்றுண்டு.
நானிப் பொழுதே கூறிடுவேன்.
கரடி, சிங்கம், புலியுடனே
காட்டில் உள்ள மிருகமெலாம்
அருகில் உள்ள நகருக்குள்
அதிகா லையிலே புகுந்திடலாம்.
தூங்கி எழுந்து மனிதரெலாம்
சோம்பல் முறிக்கும் வேளையிலே,
வேங்கை போலே நாமெல்லாம்
‘விர்’ரெனப் பாய்ந்து கொன்றிடலாம்.
ஆளுக் கொருவரை நாம்கொன்றால்
அப்புறம் மனிதர் யாரிருப்பார்?
நாளைக் காலையே கிளம்பிடலாம்.
நமக்குக் கவலை இனியில்லை.”
நரியின் பேச்சைக் கேட்டதுமே,
“நல்லது. யோசனை நல்ல”தெனக்
கரடி, சிங்கம், புலிகளெலாம்
களிப்பாய் ஏற்றுக் கொண்டனவே.
மறுநாள் காலை மணி இரண்டு.
வந்தன மிருகம் யாவையுமே.
திரண்டு கிளம்பிச் சென்றனவே,
திமுதிமு வென்றே நகர்நோக்கி.
விடியும் நேரம் நகர் அருகே
விரைந்தே அவைகள் செல்லுகையில்,
இடிஇடி யென்றே பெரும்சப்தம்
எழுந்தது காதும் அதிர்ந்திடவே!
சப்தம் கேட்டதும் மிருகமெலாம்
சட்டென நின்றன. பயத்துடனே.
“எப்படி நாமும் வருவதனை
இந்த மனிதர்கள் அறிந்தனரோ?
துப்பாக் கியினால், ஐயையோ,
சுடுகின் றார்கள் வருமுன்னே !
தப்பிப் பிழைக்க வேண்டுமெனில்,
சடுதியில் திரும்பி ஓடிடுவீர் !
உள்ளே சென்றால் ஆபத்து !
ஓடுவீர், ஓடுவீர்” என்றங்கே
குள்ள நரியும் நடுநடுங்கிக்
கூறிய வுடனே, மிருகமெலாம்
ஓட்டம் பிடித்தன காட்டிற்கே
ஒருநொடி கூட நில்லாமல் :
காட்டு மிருகம் அனைத்தையுமே
கலக்கிய சப்தம் அறிவீரோ?
சிறுவர்க ளெல்லாம் மகிழ்வுடனே
தீபா வளியாம் அந்நாளில்,
தெருக்களி லெங்கும் பட்டாஸ்கள்
சேர்ந்து கொளுத்திய சப்தம்தான் !