உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/001-052

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

கொங்கு நாடு ஆதிகாலம் முதல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடைய முடியாது. தமிழ் நாட்டின் சரித்திரம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரையும் தொடர்ந்து முழுமையாக எழுதப்படாதது போலவே கொங்கு நாட்டின் சரித்திரமும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இதுவரையில் எழுதப்படவில்லை. அங்கும் இங்குமாகச் சில சரித்திரப் பகுதிகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. அவ்வளவுதான். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தமிழகத்தின் வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. சங்ககாலத்துத் தமிழகம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்பவை, துளு நாடு, அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே சேர நாட்டுக்கு வடக்கே இருந்தது. இப்போது அது தென் கன்னட வட கன்னட மாவட்டங்களில் அடங்கி மைசூர் (கன்னட) தேசத்தில் சேர்ந்து இருக்கிறது. துளு நாட்டுக்குத் தெற்கே அரபிக் கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே சேரநாடு இருக்கிறது. பழைய சேர நாடு இப்போது மலையாள நாடாக மாறிக் கேரள இராச்சியமாக அமைந்திருக்கிறது. துளு நாடும் சேரநாடும் பிற்காலத்தில் தமிழகத்திலிருந்து தனியாகப் பிரிந்து போய்விட்டன. பாண்டி நாடு தமிழகத்தின் தெற்கே, வங்காளக்குடாக் கடல், இந்துமா கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களுக்கிடையே இருக்கிறது. பாண்டி நாட்டுக்கு வடக்கே, வங்காளக்குடாக் கடல் ஓரமாகச் சோழநாடு இருக்கிறது. சோழ நாட்டுக்கு வடக்கே வங்காளக்குடாக் கடலையடுத்துத் தொண்டை நாடு இருக்கிறது. தொண்டை நாடு வடபெண்ணை ஆறு வரையில் இருந்தது. இவ்வாறு துளுநாடும் சேரநாடும் பாண்டிய நாடும் சோழநாடும் தொண்டை நாடும் கடற்கரையோரங்களில் அமைந்திருந்தன. ஆறாவது பிரிவாகிய கொங்கு நாடு கடற்கரை இல்லாத உள் நாடு. அது இப்போதைய பழனிமலை வட்டாரத்திலிருந்து வடக்கே கன்னட நாட்டில் பாய்கிற காவிரி ஆறு வரையில் (ஸ்ரீரங்கப்பட்டணம் வரையில் பரந்திருந்தது, அதனுடைய மேற்கு எல்லை, மேற்குத் தொடர்ச்சி மலைகள். கிழக்கு எல்லை, சோழ தொண்டை நாடுகளின் மேற்கு எல்லைகள். சங்க காலத்திலே பெரிய நிலப்பரப்பாக இருந்த கொங்கு நாடு பிற்காலத்திலே குறைந்து குறுகிவிட்டது.

சங்க காலத்திலே, பெரிய பரப்புள்ளதாக இருந்த கொங்கு நாட்டைச் சிறுசிறு குறுநில மன்னர்கள் அரசாண்டார்கள். சேர, சோழ, பாண்டியரைப்போல முடிதரித்து அரசாண்ட பெருமன்னர் அக்காலத்தில் கொங்கு நாட்டில் இல்லை. சிறுசிறு ஊர்களைச் சிற்றரசர் பலர் அரசாண்டு வந்தனர். அந்தச் சிற்றரசர்களை வென்று கொங்கு நாட்டைக் கைப்பற்றி அரசாளச் சேரரும் பாண்டியரும் சோழரும் முயன்றார்கள். ஆகவே, சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே பல போர்கள் நடந்தன. கடைசியில், சேர அரசர் கொங்கு நாட்டில் கால் ஊன்றினார்கள். பிறகு அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொங்கு இராச்சியத்தை யமைத்து அரசாண்டார்கள். கொங்கு நாட்டை யரசாண்ட சேரர், இளையகால் வழியினரான பொறையர். அவர்களுக்கு இரும்பொறை என்றும் பெயர் உண்டு. மூத்தக் கால் வழியினரான சேரர் சேர நாட்டையும், இளைய கால் வழியினரான பொறையர் கொங்கு நாட்டையும் அரசாண்டார்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் சேர நாட்டையாண்ட சேர அரசரே கொங்கு நாட்டையும் அரசாண்டார்கள் என்று தவறாகக் கருதிகொண்டு அவ்வாறே சரித்திரம் எழுதியுள்ளனர். அவர் கூற்று தவறானது. ஒரே குலத்தைச் சேர்ந்த மூத்த வழி, இளைய வழியினராக இருந்தாலும், சேர நாட்டையாண்ட சேர அரசர் வேறு, கொங்கு நாட்டை யரசாண்ட பொறைய அரசர் வேறு.

கொங்கு நாட்டு வரலாற்றின் சரித்திரக் காலம், இப்போது கிடைத்துள்ள வரையில், ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிறது. கி. பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிற கொங்கு நாட்டுச் சரித்திரம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் (ஏறத்தாழ கி. பி. 250இல்) முடிகிறது. அதாவது, தமிழ்நாடு களப்பிர அரசருக்குக் கீழடங்கியபோது கொங்கு நாட்டுச் சரித்திரத்தின் பழைய வரலாறு முடிவடைகிறது.

ஒரு நாட்டின் வரலாறு எழுதுவதற்கு நல்ல சான்றுகளாக இருப்பவை ஆர்க்கியாலஜி (பழம்பொருள் அகழ்வாராய்ச்சி), எபிகிராபி (சாசன எழுத்துக்கள்), நூமிஸ்மாட்டிக்ஸ் (பழங்காசுகள்), இலக்கியச் சான்றுகள் முதலானவை. கொங்கு நாட்டுப் பழைய சரித்திரம் எழுதுவதற்கு இந்தச் சான்றுகளில், இலக்கியச் சான்றுகளைத் தவிர, ஏனைய சான்றுகள் மிகமிகக் குறைவாக உள்ளன.

அகழ்வராய்ச்சி (ஆர்க்கியாலஜி) கொங்கு நாட்டில் தொடங்கவில்லை என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய மண்டலங்களில் ஆர்க்கியாலஜி முறையாகவும் தொடர்ந்தும், முழுமையுமாகச் செயற்படாமலிருப்பது போலவே, கொங்கு மண்டலத்திலும் ஆர்க்கியாலஜி அதிகமாகச் செயற்படவில்லை. ஆகவே, ஆர்க்கியாலஜி சான்றுகள் நமக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை.

எபிகிராபி (பழைய சாசன எழுத்துச் சான்று) ஓரளவு கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கிறபடியால் நம்முடைய கொங்கு நாட்டுப் பழைய சரித்திரத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கின்றன. பிராமி எழுத்துச் சாசனங்கள், கொங்கு நாட்டில் உள்ளவை, முழுமையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. கிடைத்திருக்கிற பிராமி எழுத்துச் சாசனங்களும் அக்காலத்து அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறவில்லையாகையால் இவையும் நமக்கு அதிகமாகப் பயன்படவில்லை. ஆனால், இந்தச் சாசன எழுத்துகள் அக்காலத்துச் (மத) சமயங்கள் சம்பந்தமாகவும் சமூக வரலாறு சம்பந்தமாகவும் நமக்குப் பயன்படுகின்றன. கொங்கு நாட்டில் கிடைத்துள்ள பெரும்பான்மையான பிற்காலத்து வட்டெழுத்துச் சாசனங்கள் நம்முடைய பழங்கால ஆராய்ச்சிக்குப் பயன்படவில்லை.

நூமிஸ்மாட்டிக்ஸ் என்னும் பழங்காசுச் சான்றுகள் கிடைத்திருக்கிற போதிலும், இவை கொங்கு நாட்டுக்கேயுரிய பழங்காசுகளாக இல்லாமல், உரோமாபுரி நாணயங்களாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழங்காசுகளிலிருந்து கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தையறிய முடியவில்லை. ஆனால், இந்த ரோமாபுரிப் பழங்காசுகள் அக்காலத்துக் கொங்கு நாட்டின் வாணிக வரலாற்றை யறியப் பயன்படுகின்றன.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள நிலையில் கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தை எழுத வேண்டியிருக்கிறது. இப்போது கிடைத்துள்ள ஒரே கருவி சங்க இலக்கியங்கள் மட்டுமே. சங்க இலக்கியம் என்பவை எட்டுத்தொகை நூல்களாகும்.

அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்பவை எட்டுத்தொகை நூல்களாம். எட்டுத் தொகையில் பதிற்றுப்பத்தும், புறநானூறு, அகநானூறும், நற்றிணையும் ஆகிய நான்கு நூல்கள் கொங்கு நாட்டுப் பழைய சரித்திர ஆராய்ச்சிக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்த நான்கு நூல்களின் உதவியும் சான்றும் இல்லாமற்போனால் கொங்குநாட்டின் பழைய வரலாறுகள் கொஞ்சமும் தெரியாமல் அடியோடு மறைந்து போயிருக்கும். நற்காலமாக இந்த நூல்களில் கொங்குநாட்டின் பழைய வரலாற்றுச் செய்திகள் அங்கும் இங்குமாகக் காணப்படுகின்றன. அவை முறையாக அமையாமல் அங்கும் இங்குமாக ஒவ்வோரிடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. வரலாறு கூறுவது என்பது இந்தப் பழைய இந்நூல்களின் நோக்கம் அன்று. தங்களைப் போற்றிப் புரந்த அரசர், சிற்றரசர் முதலானோரைப் புகழ்ந்து பாடிய செய்யுள்களாக அமைந்துள்ள இந்தப் பழைய நூல்களில் சரித்திர வரலாற்றுச் செய்திகளும் தற்செயலாக இடம் பெற்றிருக்கின்றன. இந்த வரலாற்றுச் செய்திகளைத் தக்க முறையில் ஏனைய செய்திகளுடன் பொருத்தி ஆராய்ந்து, வரலாற்றை அமைக்க வேண்டியது சரித்திரம் எழுதுவோரின் கடமையாகிறது.

கொங்குநாட்டுப் பழைய வரலாறு எழுதுவதற்குப் பெருந்துணையாக இருக்கிற இந்த நூல்களைப் பற்றிச் சிறிது கூறுவோம்.

பதிற்றுப்பத்து

சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்து, சங்க காலத்துச் சேர அரசர்கள் மேல் பாடப்பட்டது. ஒவ்வொரு அரசன் மேலும் பத்துப்பத்துச் செய்யுளாகப் பத்து அரசர் மேல் பாடப்பட்டபடியால் இது பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது. இப்போது கிடைத்துள்ள பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் பத்தாம் பத்தும் காணப்படாதபடியால் எட்டுப் பத்துக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே, பதிற்றுப்பத்தில் எட்டு அரசர்களைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கின்றது.

சேர நாட்டு அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப்பத்துக்கும் கொங்குநாட்டு வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று கேட்கலாம்; இப்போது பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கிறபடி, பதிற்றுப்பத்து சேர நாட்டு வரலாற்றை மட்டுங் கூறவில்லை; கொங்குநாட்டு வரலாற்றையுங் கூறுகிறது. முதல் ஆறு பத்துகள் சேர நாட்டுச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. அடுத்த நான்கு பத்துகள், கொங்கு நாட்டையாண்ட கொங்குச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உண்மையை இதுவரையில் சரித்திரக்காரர்கள் உணரவில்லை.

பதிற்றுப்பத்து அரசர்களை மூத்தவழியரசர் என்றும் இளைய வழியரசர் என்றும் இருபிரிவாகப் பிரிக்கலாம் மூத்த வழியரசர்கள் சேர நாட்டை யரசாண்டார்கள். இளைய வழியரசர்கள் கொங்குநாட்டை யரசாண்டார்கள். கொங்கு நாட்டை யரசாண்ட இளையவழி யரசர்களுக்குக் கொங்குச் சேரர் என்று பெயர் கூறலாம். சங்க இலக்கியங்களில் அவர்கள் பொறையர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆனால், மூத்தவழிப் பரம்பரையாருக்கும் இளையவழிப் பரம்பரையாருக்கும் கொங்குநாட்டுச் சரித்திரத்தில் பெரும் பங்கு உண்டு. மூத்தவழியைச் சேர்ந்த சேர அரசர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிச் சேர சாம்ராச்சியத்தோடு (சேரப் பேரரசோடு) இணைத்துக் கொள்ள பல காலம் முயன்றனர். கொங்கு நாடு, சேர இராச்சியத்துக்கு அடங்கிய பிறகு சேர அரசர்களின் இளைய பரம்பரையார் கொங்கு நாட்டில் வந்து தங்கி கருவூரைத் தலைநகரமாக அமைத்துக்கொண்டு கொங்குச் சேரர் என்னும் பெயர் பெற்றுக் கொங்கு நாட்டை யரசாண்டார்கள். இந்த வரலாற்றை அறிவதற்குப் பெருந்துணையாக இருப்பது பதிற்றுப்பத்து. முக்கியமாக 7, 8, 9 ஆம் பத்துகள் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றை அறிவதற்கு உதவியாக உள்ளன.

புறநானூறு

புறநானூறு சங்க காலத்திலிருந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் மேலும், சிற்றரசர்கள் மேலும் புலவர்கள் அவ்வப்போது பாடிய செய்யுள்களின் தொகுப்பு ஆகும். புறநானூற்றுச் செய்யுள்களில் சேர அரசரைப் பற்றிய செய்யுள்களும் உள்ளன. கொங்குச் சேரர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கூறப்பட்ட வரலாறுகள் சில புறநானூற்றுச் செய்யுள்களிலும் கூறப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் கூறப்படாத கொங்கு நாட்டு அரசர் செய்திகளும் புறநானூற்றில் கூறப்படுகின்றன. மேலும், கொங்கு நாட்டை அக்காலத்தில் அரசாண்ட சிற்றரசர்கள் (பதிற்றுப்பத்தில் கூறப்படாதவர்) சிலர் புறநானூற்றில் கூறப்படுகின்றனர். ஆகவே, புறநானூறு கொங்கு நாட்டுச் சரித்திரத்தை அறிவதற்கு இன்னொரு முக்கியக் கருவி நூலாக இருக்கிறது.

அகநானூறு

அகநானூறு, அகப்பொருளாகிய காதற்செய்திகளைக் கூறுகிற நூல். ஆகையால் அதில் பொதுவாகச் சரித்திரச் செய்திகளும் வரலாற்றுச் செய்திகளும் இடம்பெறுவதில்லை. ஆனால், அச்செய்யுள்களைப் பாடிய புலவர்களில் சிலர், தங்களை ஆதரித்த அரசர், சிற்றரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை இந்தக் காதற் செய்யுள்களில் புகுத்திப் பாடியுள்ளனர். இப்படிப்பட்ட வரலாற்றுச் செய்திகள் சில, கொங்கு நாட்டு வரலாற்றை அறிவதற்கு உதவியாக இருக்கின்றன. எனவே, அகநானூற்றுச் செய்யுள்களும் நமது சரித்திர ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கின்றன.

நற்றிணை நானூறு

அகநானூற்றைப் போலவே, நற்றிணை நானூறும் அகப்பொருளைக் கூறுகிறது. அகநானூற்றுச் செய்யுள்கள் சில அரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுபோல நற்றிணைச் செய்யுட்கள் சிலவற்றிலும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. அதனால், நற்றிணைச் செய்யுள்களில் சில கொங்குநாட்டு வரலாற்றுக்குத் துணைசெய்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற வேறு சில அகப்பொருள் நூல்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் காணப்படுகிற வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் இடம் பெறுகின்றன.

சிலப்பதிகாரம்

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும் இந்த நூலை எழுதுவதற்குத் துணையாக இருந்தது. பதிற்றுப்பத்தில் கூறப்படுகிற சேரர்களைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. ஆகவே. இந்த வரலாறு எழுதுவதற்கு இது துணை செய்கின்றது.மேலும், கொங்குநாட்டுப் பொறைய அரசர்களின் காலத்தைக் கணித்து நிறுவுவதற்கும் சிலம்பு பெரிய உதவியாக இருக்கிறது.

இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு ஆகும். கொங்கு நாட்டின் புகழூரை அடுத்த மலைப்பாறையில் எழுதப்பட்ட பிராமி எழுத்துச் சாசனம், கொங்கு நாட்டை யாண்ட பெருங் கடுங்கோன், இளங் கடுங்கோன், இளங்கோன் என்னும் மூன்று அரசர்களைக் கூறுகிறது. அவர்களைப்பற்றிய வரலாறு தெரியவில்லை. நமக்குக் கிடைத்த வரையில் உள்ள சான்றுகளை யெல்லாம் தொகுத்து வரன்முறையாக எழுதப்பட்ட சங்க காலத்துக் கொங்கு நாட்டுச் சரித்திரம் இது.

இவ்வாறு சங்க காலத்துக் கொங்கு நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு என்னென்ன சாதனங்களும் கருவிகளும் சான்றுகளும் கிடைத்திருக்கின்றனவோ (அவை மிகச் சில) அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு இந்தக் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றினை எழுதுகிறேன். இதைச் சரியாகச் செய்திருக்கிறேனா என்பதை வாசகர்தான் கூறவேண்டும்.

இந்த நூலை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவருக்கு நன்றி செலுத்துகிறேன். பொள்ளாச்சிப் பெருந்தகையார் திரு. நா. மகாலிங்கம் அவர்கள், இந்நூலை எழுதுமாறு என்னைத் தூண்டி ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் தூண்டுகோல் இல்லாமற்போனால் இந்நூலை நான் எழுதியிருக்க முடியாது. அவர்களுக்கு என்னுடைய நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலை அழகாக அச்சிட்டு வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிலையத்தாருக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த வரலாற்று நூலைப் பொதுமக்கள் ஆதரித்து எனக்கு மேன்மேலும் ஊக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன். இது போன்ற பணிகளில் என்னைச் செலுத்தித் தமிழகச் சமய வரலாறு, மொழி வரலாறு, சமுதாய வரலாறு, நுண்கலை வரலாறுகளை எழுத உதவியருள வேண்டுகிறேன்.

சென்னை - 4 மயிலை சீனி. வேங்கடசாமி

19.09.74