உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/006-052

விக்கிமூலம் இலிருந்து


5. செல்வக் கடுங்கோ வாழியாதன்

மாந்தரன் 1

அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (செ. க. வா. ஆ.) சிக்கற்பள்ளி என்னும் ஊரில் இறந்தபடியால் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன் என்று இவன் பிற்காலத்தில் பெயர் பெற்றான். செல்வக்கோமான் (7ஆம் பத்து 7 : 23) என்று பெயர் பெற்ற இவன் போரில் மிக்க வலிமையுடையவனாக இருந்தது பற்றிக் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். “மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல், துப்புத்துறை போகிய கொற்றவேந்தே” என்று இவனைக் கபிலர் கூறுவது காண்க (7ஆம் பத்து2: 8–9). திறல் -ஆற்றல், வல்லமை.) ‘செல்வக் கோவே சேரலர் மருக’ என்று கபிலர் கூறுகிறார் (7ஆம் பத்து 3: 16) ஆதன் என்பது இவனுக்குரிய பெயர்.

செ. க. வா. ஆதனுக்கு மாந்தரன், மாந்தரஞ்சேரல் என்னும் பெயரும் இருந்தது. இவ்வரசன் காலத்தில் வாழ்ந்தவரும் சேர அரசர் பரம்பரையை நன்கறிந்தவருமான பரணர் இப்பெயரைத் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். அகநானூறு 142ஆம் செய்யுளில் இப்புலவர் இவ்வரசனை ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ’ என்று கூறுகிறார். சிலப்பதிகாரக் காவியத்திலும் இவன் மாந்தரம் பொறையன் (கட்டுரை காதை, அடி 84) என்று கூறப்படுகிறான். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை ‘மாந்தரன் மருகன்’ (மாந்தரனுடைய பரம்பரையில் வந்தவன்) என்று பெருங்குன்றூர்கிழார் கூறுகிறார்.

போர்செய்வதில் திறலுடைய வீரன் இவன் என்றும் அதுபற்றியே இவன் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் என்றும் அறிகிறோம். ஆனால், இவன் செய்த போர்களின் விபரந் தெரியவில்லை. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியைச் சேர்ந்த பொறையர், கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாக வென்றனர். இவன் தந்தையாகிய அந்துவன் பொறையன் ‘மடியா உள்ளத்து மாற்றோர்ப் பிணித்தவன்’ என்று கூறப்படுகிறான். அவனைத் தொடர்ந்து கொங்கு இராச்சியத்தை விரிவுபடுத்திய இவ்வரசனும் கொங்கு நாட்டிலிருந்த பல சிற்றரசர்களுடன் போர்செய்து அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருக்கவேண்டும். இவ்வரசன் மேல் ஏழாம் பத்துப் பாடிய கபிலர் இவ்வரசனைப் போர்க்களத்திலே பாசறையில் சந்தித்தார். போர்க்களங்களிலே இவனுடைய உடம்பில் பல வெட்டுக் காயங்கள் பட்டிருந்தன என்றும் அந்த விழுப்புண் தழும்புகளை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான் என்றும் கபிலர் கூறுகிறார் (“எஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து, சாந்தெழில் மறைந்த சான்றோர் பெருமகன்” -7ஆம் பத்து, 7: 17 18). ஆனால், எந்தெந்தப் போர்க்களத்தில் எந்தெந்த அரசனுடன் இவன் போர் செய்தான் என்பது தெரியவில்லை. சோழ, பாண்டியர் ஒன்று சேர்ந்து வந்து இவன் மீது போர்செய்தனர் என்றும் அவர்களை இவன் வென்று ஓட்டினான் என்றும் கபிலர் கூறுகிறார்.1 சேர அரசர் கொங்குநாட்டுச் சிற்றரசருடன் நாடு பிடிக்கப் போர் செய்தபோதெல்லாம் சோழ பாண்டியர் கொங்கு நாட்டுச் சிற்றரசருடன் சேர்ந்து சேர அரசரை எதிர்த்தார்கள். அவ்வாறு சோழ, பாண்டியர் சேரரை எதிர்த்த ஒன்றைத்தான் இது கூறுகிறது. செ.க.வா. ஆதன் கொங்கு நாட்டுச் சிற்றரசர்களோடு போர்செய்து வென்று அவர்களுடைய ஊர்களைக் கைக்கொண்டான் என்பது தெரிகின்றது. இவனுடைய கொங்கு இராச்சியம் சிறிதாக இருந்ததைப் பெரியதாக்க வேண்டும் என்று இவன் கருதிப் போர் செய்து வென்று சில நாடுகளை இவன் தன் இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்பதைக் கபிலர் கூறுகிறார். சேரலாதனுக்குச் சூரியனை ஒப்புமை கூறுகிறவர் சேரலாதனுக்குச் சூரியன் இணையாக மாட்டான் என்று கூறுகிறார்.2 பல அரசர்களை வென்று இவன் அவ்வெற்றிகளுக்கு அறிகுறியாக வேள்விகளைச் செய்தான்.

செ. க.வா. ஆதனின் கொங்கு இராச்சியம் கொங்குநாட்டின் தென் பகுதியில் மட்டும் இருந்தது. இவனுடைய இராச்சியத்தின் வடக்கிலிருந்த கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை இவன் வெல்லவில்லை. அவற்றை வென்று சேர்த்துக் கொண்டவன் இவனுடைய மகனான பெருஞ்சேரல் இரும் பொறையாவான்.

செல்வக் கடுங்கோ வாழி ஆதன், ஆவி நாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்த (இப்போதைய பழநிமலை வட்டாரம்) நாட்டின் சிற்றரசனாகிய வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவனுடைய பெண்களில் ஒருத்தியைத் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்தான். இவ்வரசியின் பெயர் வேள் ஆவிக்கோமான் பதுமன்தேவி என்பது (8ஆம் பத்து, பதிகம் அடி 1 -2). இந்த அரசியின் தமக்கையை இவனுடைய தாயாதித் தமயனான சேரலாதன் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) மணஞ்செய்திருந்தான். அந்த அரசிக்கும் ‘வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி’ என்று பெயர் இருந்தது (4ஆம் பத்து, பதிகம் 1–3). எனவே, செ.க.வா ஆதனும் நெடுஞ்சேரலாதனும் சமகாலத்தில் முறையே கொங்கு நாட்டையும் சேரநாட்டையும் அரசாண்டனர் என்று தெரிகின்றது. இவர்களுக்குப் பெண் கொடுத்த மாமனாராகிய வேள் ஆவிக்கோமான் பதுமன், பொதினி என்னும் வையாவி நாட்டையாண்ட சிற்றரசன் என்று கூறினோம். அந்த வையாவி நாடு அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. இக்காலத்தில் அது பழனி என்னும் பெயருடன் பாண்டி நாட்டு மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது.


      (மூத்தவழி)  (இளையவழி)
சேரநாட்டுச் சேரர்  கொங்கு நாட்டுப் பொறையர்

   உதியஞ்சேரல் =  அந்துவன் பொறையன் =
வேண்மாள் நல்லினி  பொறையன் பெருந்தேவி
                 │ 
   ────────────
    
  இமயவரம்பன்  பல்யானைச்  செல்வக்கடுங்கோ
நெடுஞ்சேரலாதன்  செல்கெழுகுட்டுவன் வாழியாதன் =
= வேளாவிகோமான்   வேளாவிகோமான்
 பதுமன்தேவி I   பதுமன்தேவி II

செ. க. வா. ஆதனுக்கும் அவனுடைய அரசியாகிய பதுமன் தேவிக்கும் இரண்டு ஆண்மக்கள் பிறந்தனர் என்று அறிகிறோம்.3 இவ்விரு புதல்வர்களில் ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை. (பிற்காலத்தில் தகடூரை வென்று புகழ்பெற்றவன். 8ஆம் பத்துப் பதிகம்). இளைய மகன் பெயர் குட்டுவன் இரும்பொறை என்பது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று சிவராச பிள்ளை கருதுகிறார்.4 இவர் கருதுவது தவறு. செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு மக்கள் இருந்ததையறியாமல், ஒரே மகன் இருந்தான் என்று கருதிக்கொண்டு இவ்வாறு எழுதினார் என்று தோன்றுகிறது. கே. ஜி. சேஷ ஐயரும் இதே தவற்றைச் செய்துள்ளார்.5 நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தவற்றைச் செய்தேன். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதினேன்.6 அது தவறு என்பதை இப்போது அறிந்து திருத்திக்கொண்டேன். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் துணைப் புதல்வர் (இரண்டு பிள்ளைகள்) இருந்தனர் என்பது திட்டமாகத் தெரிகிறது.

செ.க. வா. ஆதன் பதிற்றுப்பத்து 7ஆம் பத்தைப் பாடியவர் கபிலர். பறம்பு நாட்டின் அரசனாக இருந்த கொடை வள்ளல் என்று புகழ்பெற்ற பாரி மன்னனின் புலவராக இருந்த கபிலர், அம் மன்னன் இறந்தபிறகு கொங்கு நாட்டுக்கு வந்து செ.க.வா. ஆதனைப் பாசறையில் கண்டு அவன் மீது 7 ஆம் பத்துப் பாடினார்.

செ.க.வா. ஆதன் இருபத்தைந்துயாண்டு அரசாண்டான் என்று ஏழாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு கூறுகிறது.

இவ்வரசன் திருமாலை வழிபட்டான். அந்தத் திருமாலின் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங்கொடுத்தான் (“மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்கு, ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து” 7ஆம் பத்துப் பதிகம் அடி 8-9). இவன் தன்னுடைய புரோகிதனைப் பார்க்கிலும் அறநெறி யறிந்தவனாக இருந்தான் என்று 7ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.7

செ.க.வா. ஆதன் சில யாகங்களைச் (வேள்விகளைச்) செய்து பிராமணருக்குத் தானங்கொடுத்தான். இவன் வேள்வியில் பிராமணருக்குப் பொன்னை நீர்வார்த்துக் கொடுத்தபோது அந்நீர் பாய்ந்து தரையைச் சேறாக்கியது என்று கூறப்படுகிறது. இதனால் இவனுடைய தானம் மிகப் பெரிதாக இருந்தது என்பது தெரிகின்றது.8

புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து இவ்வரசன் போற்றினான். இசைவாணர்களையும் இவன் ஆதரித்தான். ‘பாணர் புரவல, பரிசிலர் வெருக்கை’ என்று இவன் புகழப்படுகிறான்(7ஆம் பத்து 5:11).

இவ்வரசனிடம் பரிசில் பெறச் சென்ற குண்டுகண் பாலியாதனார் என்னும் புலவருக்கு இவன் பெருஞ்செல்வம் வழங்கினான். யானை, குதிரை, ஆட்டுமந்தை, மாட்டுமந்தைகள், மனை, மனையைச் சார்ந்து வயல்கள், வயல்களில் வேலை செய்யக் களமர் (உழவர்) இவைகளை யெல்லாம் இவ்வரசன் இப்புலவருக்கு வழங்கினான். இவைகளையெல்லாங் கண்ட இந்தப் புலவர் இது கனவா நனவா என்று அறியாமல் திகைத்துப் போனதாக அவரே கூறுகிறார் (புறம். 387).

வயிரியரை (இசைவாணரை) இவன் ஆதரித்தான். தான் ஆதரித்ததல்லாமல், தான் இல்லாதபோது அவர்கள் அரண்மனை வாயிலில் வந்தால் தன்னைக் கேளாமலே அவர்களுக்குப் பொருளையும் குதிரைகளையும் வண்டிகளையும் கொடுத்தனுப்பும்படி தன்னுடைய அரண்மனை அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருந்தான்.9 இவனுடைய கொடைச் சிறப்பைக் கபிலர் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ‘என்னைப் புரந்த பாரிவள்ளல் இறந்து போனபடியால் உம்மிடம் பரிசுபெற உம்மை நாடிவந்தேன் என்று நினைக்க வேண்டாம். செல்வக்கடுங்கோ வாழியாதன் பெரிய வள்ளல், இரவலரை ஆதரிக்கும் வண்மையன் என்று பலருங் கூறக்கேட்டு நேரில் கண்டு மகிழ வந்தேன்’ என்று கூறுகிறார்.

"புலர்ந்த சாந்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேட்புலம் படர்ந்தோன்அளிக்கென
இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலுநின்
நல்லிசை தர வந்திசின் (7ஆம் பத்து 1: 7-14)

இவன் மீது ஏழாம் பத்தைப் பாடிய கபிலருக்கு இவ்வரசன் பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்தான். கைச்செலவுக்கென்று நூறாயிரங் காணம் (ஒரு லட்சம் பொற்காசு) கொடுத்து, கொங்கு நாட்டிலுள்ள நன்றா என்னும் மலைமேல் ஏறி நின்று அங்கிருந்து காணப்பட்ட நாடுகளின் வருவாயை அவருக்குக் கொடுத்தான்.10

செ.க.வா. ஆதனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை ஒன்பதாம் பத்தில் பாடிய பெருங்குன்றூர்கிழார், செ.க.வா. ஆதன் நாடு காண் நெடுவரை மேல் இருந்து கபிலருக்குக் காட்டிக் கொடுத்து நாடுகளைப் பற்றித் தம்முடைய செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.

“கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையின் நெஞ்சின்

நனவின் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே” (9ஆம் பத்து 5:7-13)

பொறையன் மரபைச் சேர்ந்த இந்தச் செல்வக் கடுங்கோவுக்கு மாந்தரங் கடுங்கோ என்ற பெயரும் வழங்கி வந்தது என்பது தெரிகிறது. இவன் காலத்தவராகிய பரணர் தம்முடைய செய்யுள் ஒன்றில் இப்பெயரையும் இவனுடைய வள்ளன்மையையுங் கூறுகிறார்.

“இலவ மலரன்ன அஞ்செந் நாவில்
புலமீக் கூறும் புரையோர் ஏத்தப்
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவவினி வாழிய நெஞ்சே.” (அகம்.142:1-7)

இவ்வரசனைப் பரணர் மாந்தரன் என்று கூறியது போலவே கபிலரும் வனை மாந்தரன் என்று கூறியுள்ளார். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை 9ஆம் பத்தில் பாடிய பெரும்குன்றூர்கிழார் அவனை மாந்தரனுடைய மரபில் வந்தவன் என்று கூறுகிறார் (9ஆம் பத்து 10: 9-13). மாந்தரன் பெரும் புகழ் படைத்து அறம் வாழ்த்த நன்றாக அரசாண்டான் என்று கூறுகிறார்.

“வாள்வலி யுறுத்துச் செம்மை பூண்டு
அறன் வாழ்த்த நற்காண்ட
விறன் மாந்தரன் விறன் மருக.” (9ஆம் பத்து 10:11-13)

செ.க.வா. ஆதனின் சமகாலத்தில் இருந்த பாண்டிய அரசன் ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன் இவர்கள் காலத்துச் சோழ அரசன் யார் என்பது தெரியவில்லை. கொங்கு நாட்டையரசாண்ட இவன் காலத்துச் சேர அரசர் இவனுடைய தாயாதித் தமயன்மாராகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் (இ. வ. நெ. சேரலாதன்) அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் ஆவர். இ. வ. நெ. சேரலாதன், வேளாவிக் கோமான் மகளைத் திருமணம் செய்திருந்தான். அவளுடைய தங்கையை (வேளாவிக் கோமான் பதுமனுடைய இளைய மகளை) செ.க.வா. ஆதன் மணஞ்செய்திருந்தான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். எனவே இவர்கள் இருவரும் சமகாலத்திருந்தவர் என்பது ஐயமில்லாமல் தெளிவாகத் தெரிகின்றது. இரண்டாம் பத்தின் தலைவனான இ. வ. நெ. சேரலாதனும், மூன்றாம் பத்தின் தலைவனான பல்யானை செல்கெழுகுட்டுவனும் ஏழாம் பத்துத் தலைவனான செ.க.வா. ஆதனும் சமகாலத்திலிருந்த தாயாதிச் சகோதரர்கள்.

இ. வ. நெ. சேரலாதன் 58 ஆண்டு அரசாண்டான். இவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டு அரசாண்டான். மாந்தரன் கடுங்கோவாகிய செ.க.வா. ஆதன் 25 ஆண்டு அரசாண்டான். ஆகையால் இவன், இ. வ. நெ. சேரலாதன் காலத்திலேயே இறந்து போனான் என்பதும், இவனுக்குப் பிறகு இவன் மகனான பெருஞ் சேரலிரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான் என்பதும் தெரிகின்றன. அதாவது, இ. வ. நெ. சேரலாதன் சேர நாட்டை ஆட்சிச் செய்த காலத்திலேயே கொங்கு நாட்டை செல்வக்கடுங்கோ வாழி யாதனும் அவன் மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறையும் (தகடூரை எரித்தவன்) அரசாண்டார்கள்.

இவர்கள் மூவரும் (இ. வ. நெ. சேரலாதன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன், செ.க.வா. ஆதன்) சமகாலத்தில் இருந்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்திலிருந்தும் அறிகிறோம். சோழ நாட்டிலிருந்த பராசரன் என்னும் பிராமணன் வேதம் ஓதுவதில் வல்லவனாக இருந்தான். அவன், சமகாலத்தில் சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் அரசாண்ட இந்த மூன்று அரசர்களிடத்தில் போய் வேதம் ஓதிப் பரிசு பெற்றான். பராசரன் முதலில், ‘வண் தமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த, திண்திறல் நெடுவேல் சேரலனை’க் (பல்யானைச் செல்கெழு குட்டுவனை) காணச் சேர நாட்டுக்குச் சென்று அவனுடைய அவையில் பார்ப்பனருடன் வேதம் ஓதி அவர்களை வென்று ‘பார்ப்பனவாகை’ சூடினான். அப்போது அவ்வரசன் இவனுக்குப் பல பரிசுகளை வழங்கினான். பரிசுகளைப் பெற்ற பராசரன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் இடத்திலும் சென்று பரிசுகளைப் பெற்றான். பிறகு கொங்கு நாட்டுக்கு வந்து மாந்தரஞ் சேரலாகிய செ.க.வா. ஆதனிடத்திலும் பரிசு பெற்றான். இவன் பெற்ற பரிசுகளை மூட்டைக் கட்டிக் கொண்டு தன்னுடைய ஊருக்குத் திரும்பி வருகிற வழியில் பாண்டி நாட்டுத் தண்கால் என்னும் ஊரில் அரசமர மன்றத்தில் தங்கி இளைப்பாறினான். தங்கியிருந்தபோது தனக்குப் பரிசுகளை வழங்கிய இம்மூன்று மன்னர்களையும் அவன் வாழ்த்தினான்.

“காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தன் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க.”

(சிலம்பு, கட்டுரை காதை: 79-84)

என்றும் வாழ்த்தினான்.

இதில் முதல் இரண்டு அடிகள் பல்யானைச் செல்கெழுகுட்டுவனையும் மூன்றாம் நான்காம் அடிகள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், ஐந்தாம் ஆறாம் அடிகள் மாந்தரன் கடுங்கோ ஆ கிய செ.க.வ. ஆதனையுங் குறிப்பிடுகின்றன. இம்மூன்று அரசர்களிடத்திலும் பராசரன் பரிசுகளைப் பெற்றபடியால் இம்மூவரையும் வாழ்த்தினான். இதனாலும் இம்மூவரும் சமகாலத்து அரசர்கள் என்பது உறுதியாகின்றது. பராசரன் பாண்டி நாட்டில் தண்காவில் தங்கிய காலத்தில் பாண்டி நாட்டையரசாண்டவன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன் வெற்றிவேற் செழியன்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஏறத்தாழ கி.பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.


✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. ‘குன்று நிலை தளர்க்கும் உருமிற்சீறி, ஒரு முற்றிருவர் ஓட்டிய ஒள்வாள், செருமிகுதானை வெல்போ ரோயே’, (7ஆம் பத்து. 3: 10–12) ஒரு முற்று - ஒன்றாகச் சேர்ந்து முற்றுகையிட்டு. இருவர் - சோழ பாண்டியர்.

2. “இடஞ் சிறிதென்னும் ஊக்கந்துரப்ப, ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக், கடந்தடு தானைச் சேரலாதனை, யாங்ஙன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம்”. (புறம். 8:3-6).

“நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவருதானை கொடு செருப்பல கடந்து
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி” (7ஆம் பத்து, பதிகம் அடி. 4-7).

3. ‘வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்’. 7 ஆம் பத்து 10: 20-22.

4. (P. 124. The Chronology of Early Tamils 1932).

5. (P. 44. Cera Kings of the Sangam period 1937).

6. சேரன் செங்குட்டுவன், பக்கம் 25.சேர அரசர் பரம்பரைகாண்க. மயிலை சீனி. வேங்கசாமி. 7. இவன் ‘புரோசு மயக்கினான்’ (7ஆம் பத்து பதிகம்) ‘புரோசு மயக்கி’ என்பது ‘தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்த தென்றவாறு’ என்று பழைய உரை கூறுகிறது.

8. (‘அறங் கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய, உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு, இருஞ்சேறாடிய மணல் மலி முற்றம்’ (7ஆம் பத்து 4: 3-6).

9. ‘புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகு படையறுத்த கொய்சுவல் புரவி. அலங்கும் பாண்டில் இழையணித் தீமென, ஆனாக் கொள்கையை’ (7ஆம் பத்து 4:8-11).

10. “சிறுபுறமென நூறாயிரங்காணங் கொடுத்து நின்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ”. (7ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு).