பாரதி அறுபத்தாறு/சினத்தின் கேடு
Appearance
சினத்தின் கேடு
சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற் சுட்டுச்
செத் திடுவா ரொப் பாவார்; சினங் கொள்வார்தாம்.
மனங் கொண்டு தங் கழுத்தைத் தாமே வெய்ய
வாள் கொண்டு கிழித்திடுவார் மானுவா ராம்.
தினங்கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.
(8)
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தி லெதற்கு மினிக்கவலை வேண்டா;
சாகாம லிருப்பது நஞ் சதுரா லன்று;
சக்தி யருளா லன்றோ பிறந்தோம் பார் மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்,
பாரீர் நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்
வேகாத மனங் கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தா லெமக்கென் னென்றே.
(9)