பாரதி அறுபத்தாறு/குருக்கள் துதி
குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்)
ஞான குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்
மோன குரு திருவருளாற் பிறப்பு மாறி
முற்றிலு நா மமர நிலை சூழ்ந்து விட்டோம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித் தினியல் காட்டி மனத் தெளிவு தந்தான்.
வானகத்தை யிவ் வுலகிலிருந்து தீண்டும்
வகை யுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி!
எப்போதுங் குரு சரண நினைவாய், நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பர தேசிகன் றாளெண்ணாய்.
முப் பாழுங் கடந்த பெரு வெளியைக் கண்டான்,
முக்தி யெனும் வானகத்தே பரிதியாவான்,
தப்பாத சாந்த நிலை யளித்த கோமான்,
தவ நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர் நீக்கி யெனைக் காத்தான், குமார தேவன்;
(20)
தேசத் தா ரிவன் பெயரைக் குள்ளச்சாமி
தேவர் பிரானென் றுரைப்பார் ; தெளிந்த ஞானி
பாசத்தை யறுத்து விட்டான், பயத்தைச் சுட்டான்;
பாவனையாற் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை யழித்து விட்டான் ; யமனைக் கொன்றான்;
ஞான கங்கை தனை முடிமீ தேந்தி நின்றான்,
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமேபோன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே.
21
வாயினாற் சொல்லிடவு மடங்கா தப்பா;
வரிசையுட னெழுதிவைக்க வகையுமில்லை.
ஞாயிற்றைச் சங்கிலியா லளக்கலாமோ?
ஞான் குரு புகழினை நாம் வகுக்கலாமோ?
ஆயிர நூ லெழுதிடினு முடிவுறாதாம்;
ஐயனவன் பெருமையை நான் சுருக்கிச் சொல்வேன்;
காய கற்பஞ் செய்து விட்டா னவன் வாழ்நாளைக்
கணக் கிட்டு வயதுரைப்பார் யாரு மில்லை.
22