உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

இவ்விதம் பேசிடக் காரணம் என்ன என்பதுபற்றி ‘நிருபர்கள்’ தமது கருத்துகளைத் தொகுத்தனர்; நாட்டு மக்கள், வியந்தனர்; பலர் பாராட்டினர்; இஃதன்றோ அஞ்சா நெஞ்சம்! கவர்னர் பதவியில் இருப்பதாலேயே கண்மூடி மௌனியாகிவிடமாட்டேன்! அக்ரமமும் அநீதியும் கண்டால், எடுத்துக் காட்டிக் கண்டிக்கத்தான் செய்வேன்! என்று கூறிடும் போக்கிலல்லவா குமாரசாமிராஜா பேசியிருக்கிறார். தென்னாட்டுத் தலைவரில் ஒருவர் இப்படி வீரதீரமாகப் பேசுகிறார் என்பதறிந்தால், வடநாட்டுச் சர்வாதிகாரிகள்கூடச் சிறிதளவாவது அச்சம் கொள்வார்கள்; எதையோ காட்டி மயக்கிவிடலாம் என்று யாரைக் குறித்துவேண்டுமானாலும் நம்பலாம், குமாரசாமிராஜா அப்படிப்பட்டவரல்ல. கவர்னர் வேலை கொடுத்தோம், அதிலே இருந்துகொண்டே நமது போக்கைக் கண்டிக்கிறார். ஏ! அப்பா! பொல்லாத ஆசாமி! இவரிடம் நாம் சர்வ ஜாக்ரதையாக நடந்துகொள்ள வேண்டும், என்றெல்லாம் வடநாட்டுத் தலைவர்கள் எண்ணிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சு படைத்தவர் முதலமைச்சராக இருந்தால், தேவிகுளம் பீர்மேடு பறிபோகுமா, திருத்தணி திருப்பதியை இழந்து நிற்போமா, என்றுகூட எண்ணிக்கொள்வார்கள்; அவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசினார், கவர்னர் பதவியில் இருந்து கொண்டே! ஆனால்...? என்ன ஆயிற்று!

இலவு காத்த கிளி என்பார்கள், அந்த உவமை போதவில்லை!! குமாரசாமிராஜா, சின்னாட்களுக்கெல்லாம் மென்று விழுங்கினார், நான் சொன்னதை மிகைப்படுத்திவிட்டார்கள் என்று மழுப்பினார், நானொன்றும் வடநாடு தென்னாடு என்று பேதம் பேசுபவனல்ல என்றார், அப்படிப் பேசுபவர்கள்மீது பாய்ந்து தாக்குவேன் என்றார்! கடைசியில் நம்மீதுதான் அவர் தமது கோபத்தை திருப்ப முடிந்ததேயொழிய கோவைப் பேச்சைத் தொடர்ந்து செல்லமுடியவில்லை!!

நிதி அமைச்சர் சுப்பிரமணியனார், சில வேளைகளில், இதேபோல ஓசை எழுப்பி மகிழ்கிறார்.

தொழில் வளம் தென்னாட்டில் போதுமானதாக இல்லை; புறக்கணிக்கப்பட்டிருக்கிறது; நமக்கு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை மிகக் குறைவு—என்றெல்லாம் அவரும், ‘இடம் பொருள் ஏவல்’ கவனித்து, வீரத்தை விவேகத்தை அள்ளி வீசுகிறார்! வீசிவிட்டுச் சுற்று முற்றும் பார்க்கிறார்!! டில்லி, சவுக்கு எடுக்கும் என்று தெரிந்தால், கிலி பிடிக்கிறது. உடனே, ‘என்றாலும்’ என்ற பதத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, வடநாடு தென்னாடு