உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானரதம்

79

யிருந்தது அந்தக் காலம்!’ என்று நினைத்தேன். எதிரே நின்ற மோகன விக்கிரகம் இன்னும்—சிறிது நெருங்கிற்று. நான் அதைத் தழுவும் பொருட்டாக எழுந்தேன். எனது கைகளுக்கிடையே மின் வெட்டு முன் பர்வதகுமாரி வந்து நின்றாள். இதழ்களோடு இதழ் பொருத்தி ஒரு க்ஷணம் மோக பரவசத்திலே இருந்தேன். இரண்டு மூன்று பூமிகள் இடிந்து விழுந்ததுபோலப் “படேர்” என்று ஒரு சப்தம் கேட்டது. “கோ“ என்றலறி மூர்ச்சை போட்டு விழுந்தேன்.

கண்ணை விழித்துப் பார்க்கும்போது பழைய திருவல்லிக்கேணியில் பழைய இடத்திலே என்னைச் சுற்றிச் சிலர் விசிறிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். “என்ன செய்கிறீர்கள்“ என்று கேட்டதற்கு, “நீ பேய்கண்டவன்போல அலறினாய். நாங்கள் வந்து பார்க்கும்போது மூச்சில்லாமலிருந்தது. பலவிதமான சைத்யோபசாரங்கள் செய்தபிறகு இப்போது மூச்சு விடுகிறாய்“ என்றார்கள்.

“ஐயோ. மூச்சுப் போயிருந்தாலும் பெரிய காரியமில்லையே, தர்மத்தைத் தவறவிட்டேனே!“ என்று கூறிக் கண்ணீர் சிந்தினேன்.