உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

போலீஸ்!! வந்தது வரட்டும் என்று உள்ளே நுழையலாம். ஆனால், பாதகர்கள், மிரட்டுகிறபடியே, குழந்தைகளைக் கொன்றுவிட்டால்...?

அவ்வளவு வெறிபிடித்தவர்களா என்ற சந்தேகத்துக்கு இடமேயில்லை—ஏனெனில், குழந்தைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, கொண்டுவா, பணத்தை!—என்று கொக்கரிக்கும் இருவரும், பைத்யக்காரர்கள்! மிகப் பயங்கரமான போக்குடைய பித்தர்கள்! பித்தர்கள் விடுதியிலிருந்து தப்பி ஓடிவந்து விட்டவர்கள்!

இப்போது, ஒருமுறை அந்தக் காட்சியை மனக்கண்ணாலே பார் தம்பி! உள்ளபடி, திடுக்கிடச் செய்கிறதல்லவா?

அப்படிப்பட்ட சமயத்திலேதான், அந்த ஆரணங்குக்கு எங்கிருந்தோ ஓர் வீர உணர்ச்சி பொங்கி எழுந்தது! குலக்கொடிகள், உயிரோவியங்கள், கட்டப்பட்டு, கண்ணீர் வடிக்கின்றன! கொஞ்சி விளையாடும் சிறார்கள், சிறுமிகள்! கன்னக்குழியைக் காட்டி மகிழ்விக்கும் ஓர் சிட்டு, கண்ணில் குறும்பு காட்டி களிப்புறச் செய்யும் ஓர் மான், இசைபாடி இன்பமூட்டும் ஓர் குயில், களிநடம் காட்டி கவலையைப் போக்கிடும் ஓர் கலாபம், மழலையால் மனதுக்கு மதுரம் தரும் பருவத்தினர், தாய் உச்சிமோந்து முத்தமிட்டு பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பருவத்தினர்—பாதகர் இருவர், பயங்கரம் பேசுகின்றனர். அவர்தம் கரத்தில் கத்தியும் இருக்கிறது, புத்தியிலோ கோளாறு! எதையும் செய்வர்! எதற்கும் அஞ்சார்! பாதகம் இது, தீது, ஆகாது என்ற பாகுபாடு அறியா மனம்! எந்த நேரத்திலும், சுட்டுத் தள்ளிவிடக் கூடும், வெட்டிச் சாய்த்துவிடக் கூடும்!!

குழந்தைகளைப் பார்க்கப்பார்க்க, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்புகிறது! பயன்? எதையாவது செய்து, ஆபத்தைப் போக்கியாக வேண்டும். அதுவும் விரைவில்!

பூவை புலியானாள்! வெறியன்மீது பாய்ந்தாள் — அஞ்சாமையன்றி வேறொர் ஆயுதம் இல்லை! ஆனால் அஞ்சாமையைவிட ஆற்றலளிக்கவல்ல ஆயுதம் வேறென்ன உண்டு! பாய்ந்தாள்—பித்தன் கரத்திலிருந்த கத்தியைப் பறித்துக்கொண்டாள். அந்தக் கத்தியைக்கொண்டே அவன் மண்டைமீது தாக்கவே, மதி குழம்பிக்கிடந்த அந்த வெறியனின் மண்டை பிளந்தது, கீழே சாய்ந்தான்! வெற்றி—முதல்கட்டம்! கட்டிடக் கதவினைத் திறந்திட முடிந்தது. காரிகையைக் கொன்றுபோடக் கிளம்பினான் மற்றோர் பித்தன்! அவனைச் சுட்டுச் சாய்த்தது, உள்ளே நுழைந்த போலீஸ்.