71
கிளர்ச்சி ஆபாசமாகப் போய்விட்டதற்குக் காரணம் நான் கூறுகிறேன். கேண்மின்! தலைமை, அவ்வளவு மோசமானது!! திறமையற்றது!! என்று குரலெழுப்பினோரும்,
சட்டசபையில் பேசிடாமல் சந்து முனை சென்று கத்துவதா? இதுவா கிளர்ச்சி? என்று அரசியல் பாடம் போதிக்க முன்வந்தவர்களும், ஏ! அப்பா! எத்தனை எத்தனை பேர்!!
இவர்களை ஜாமீன் கேஸ் போட்டு, உள்ளே தள்ளி வைக்க வேண்டும் என்று முழக்க மெழுப்பினோரும்,
இவர்கள் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கிளர்ச்சி நடத்திக் கிளர்ச்சிக்கு இருந்து வந்த மதிப்பையே பாழாக்கி விட்டார்களே! இனி எந்தக் கிளர்ச்சியும் செய்யவே முடியாத நிலையாகி விட்டதே! என் செய்வது! என்று சோக கீதம் பாடிக் காட்டியவர்களும்,
வீணான கிளர்ச்சி செய்தார்கள்; அதை அடக்கப் பணம் செலவாயிற்று; அந்தப் பணம் இருந்தால் பத்துப் பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம் என்று பொருளாதாரப் பேரறிவைப் பொழிந்தவர்களும்,
உற்பத்தி பெருகுவது ஒன்றுதான் விலைகளைக் குறைத்திடச் செய்யும் ஒரேவழி, நல்வழி, எம்வழி! என்று அகில உலக அறிவைத் தம்மிடம் ஏகபோகமாக வைத்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு எக்காளமிட்டவர்களும், இருக்கிறார்கள், தம்பி! இங்கேயேதான் இருக்கிறார்கள் — இளித்தவாயர்களாகிவிட்டோம் என்று ஒப்புக்கொள்ள மனமின்றி, அன்று என்னென்ன பேசினார்களோ அவ்வளவையும் விழுங்கிவிட்டு இன்று.
விலைவாசி ஏறிவிட்டது, ஒப்புக்கொள்கிறோம்.
விலைவாசி கட்டுப்படுத்தப் படவேண்டும், ஒப்புக்கொள்கிறோம்.என்று விநயமாகப் பேசி வருகிறார்கள். நமது கிளர்ச்சியை மதிக்க மறுத்தார்கள்; இன்று அவர்களின் முன்னாள் முடுக்கு மாய்ந்தது; உண்மையை ஒப்புக்கொண்டு தீர வேண்டிய நிலை பிறந்தது.