உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

வில்லை; தரித்திரர்கள்‌ இருக்கத்தான்‌ செய்தனர்‌, எனினும்‌ தொழில்‌ வளர்ந்து, பெரும்பாலோருக்கு வசதி தந்தது! வெளிநாட்டு வியாபாரம்‌, பல புதுச்‌ செல்வவான்களை உண்டாக்கி வைத்தது; பலநாடுகளுடன்‌ ஏற்பட்ட தொடர்பு, பொது அறிவை வளமாக்கி வந்தது, புதிய கருத்துக்கள்‌ மலருவதற்கான மனப்‌ பக்குவம்‌, இருந்தது, எனவே உரிமைக்‌ கிளர்ச்சிக்குத்‌ தேவையான உள்ளப்‌ பாங்கு இருந்தது, தளராது உழைக்கும்‌ தன்மையும்‌. தன்னலம்‌ மறுக்கும்‌ பண்பும்‌, எடுத்ததை முடிக்கும்‌ ஆற்றலும், மக்கள்‌ பணியை மேலானதெனக்‌ கொள்ளும்‌ மாண்பும்‌ கொண்டவர்‌. பலர்‌, மாமன்ற உறுப்பினர்களாகி இருந்தனர்‌. மனம்‌ அமைந்துவிட்டது!

தந்‌தை மகனுக்குத்‌ தந்துவிட்டுப் போனவைகளிலே, மற்றுமொன்று உண்டு—அது, மற்றவைகளை வெளியே கிளறிவிடக்‌ கூடியதாக அமைந்தது. அதுதான்‌ பணமுடை!

வரவை மீறிய செலவினாலும்‌, புதிய போர்களுக்காக ஏற்படும்‌ செலவினாலும்‌, ஜேம்ஸ்‌ திண்டாட நேரிட்டது. முதல்‌ மூன்றாண்டுகளிலே மட்டும்‌ ஆண்டொன்றுக்கு முப்பத்து ஐயாயிரம்‌ பவுன்‌ நிர்வாகச்‌ செலவு! கடனோ ஏராளம்‌.

மற்றச்‌ சமயங்களிலே மாமன்றத்தைப் பற்றிக்‌ கவலைப்‌படாத மன்னன், பணமுடை ஏற்பட்டதும்‌, மாமன்றத்தைக்‌ கூட்டி, பணத்துக்கு வழிவகை கூறுமாறு கேட்க வேண்டியதாயிற்று, இதுதான்‌ வாய்ப்பு என்று கண்ட மாமன்றம்‌, மன்னன்‌ கேட்கும்‌ தொகையைத்தர இசைவதற்கு முன்பு, ஆட்சி முறையிலே உள்ள கறைகளைப்‌ போக்கவும்‌, மேற்கொண்டு கறை ஏற்படாதிருக்கவும்‌, வழிவகை கண்டாக வேண்டுமென்று வலியுறுத்தலாயினர்‌.