உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மக்களின்‌ உரிமை மதிக்கப்படாமலிருப்பது பற்றிய கண்டனமும்‌, மன்னன்‌ மனம்போன போக்கிலே நடப்பது பற்றிய சீற்றமும்‌, குடிகெடுப்போருடன்‌ குலவுவது பற்றிய ஏளனமும்‌, மாமன்றத்தினர்‌ வெளியிட்டனர்‌ மன்னன்‌ சீறினான்‌. மாமன்றத்தார்‌ மருண்‌டுவிடவில்லை மரியாதை தவறாமல்‌, ஆனால்‌ உறுதி குறையாமல்‌, மாமன்றத்தார்‌ அரசனிடம்‌ ஆட்சி முறையின்‌ குறைபாடுகளைக்‌ குறித்துக்‌ கூறிவந்தனர்‌.

மன்னனுடைய சொந்த நிலங்களிலிருந்து கிடைக்‌கும்‌ வருமானம்‌, அவன்‌ வசூலித்துத்கொண்டு வந்த பல்‌வேறு வரிகள்‌ எல்லாம்‌, நிர்வாகத்‌ திறமைக்‌ குறைவு காரணமாகத்‌ தேய்ந்தன. கடன்‌, 735,000 பவுனாகிவிட்‌டது. கிடைக்கும்‌ வருமானத்தை, மன்னனைச்‌ சூழ நின்று துதி பாடும்‌ சுகபோகிகள்‌ தின்று தீர்த்தார்கள்‌; எனவே ஜேம்ஸ்‌, பணமுடையால்‌ பாதிக்கப்பட்டான்‌; மாமன்றம்‌ நிலைமையைத்‌ திறம்படப்‌ பயன்படுத்திக்கொண்டது

அரசியல்‌, மத இயல்‌ எனும்‌ இரு துறைகளிலும்‌ மன்னன்‌ கொண்டிருந்த போக்கை மாற்றிக்கொண்டாக வேண்டும்‌, என்று வலியுறுத்தப்பட்டது,

மன்னன்‌ சார்பில்‌, சாலிஸ்‌ பரிபிரபு, கடன்‌ தீர்க்க ஆறு இலட்சம்‌ பவுன்‌ தேவை என்றும்‌ வரித்தாகையை இரண்டு இலட்சம்‌ பவுன்‌ அதிகமாக்க வேண்டுமென்றும்‌, மாமன்றத்தாரிடம்‌ கேட்டார்‌. மறுத்தனர்‌; ஜேம்ஸ்‌ கோபம்‌ கொண்டான்‌; தத்துவ நோய்‌ கொண்டவனல்லவா, உடனே மாமன்றத்தாரை வரவழைத்து, மன்னனுடைய அதிகாரம்‌ எப்படிப்பட்டது, அதன்‌ மகிமை எத்தகையது, அதைக்‌ கட்டுப்படுத்த முயல்வது எவ்வகையான குற்றம்‌ என்பதை எல்லாம்‌ விளக்கினான்‌. விளக்கினதாக மன்னன் எண்ணிக்கொண்டான்‌, மிரட்டல்‌ என்று மாமன்றம்‌ கருதிற்று; பணியவில்லை.