72
கொண்டாடினரே, பக்தர்கள், இரவு பகலாகிவிட்டதே, ஊர் இந்திரலோகம்போலக் காட்சி கொண்டதே, எங்கும் எவரும், வெள்ளிரத உற்சவத்தின் விசேஷத்தைப் பற்றித்தானே வியந்து பேசினர்! அவ்விதம், நம்மைப் பக்தர்கள், பெருமைப்படுத்திக் கொண்டாடி, தோத்தரித்திருக்க, நீர், ஏன் விசாரப்படவேண்டும்? நாத்திகப் புயல் அடிக்கிறதோ என்று நாம் எண்ணிக்கொண்டிருந்தோம் ஏக்கத்துடன்! பூஜா உணர்ச்சி புகைந்து போய்விட்டதோ என்று சந்தேகப்பட்டோம். காஞ்சி க்ஷேத்ரவாசிகள் நமது சந்தேகத்தைப் போக்கி, அழகான வெள்ளிரதத்தைக் காணிக்கையாக்கினரே, நமக்கு...
ஏகா: பார்வதி! உன் பூரிப்புக்கு எது காரணமாக இருக்கிறதோ, அதுவே, என் விசாரத்துக்குக் காரணமாக இருக்கிறது. எந்த வெள்ளித் தேர் வைபவத்தைக் கண்டு உன் மனம் துள்ளி விளையாடுகிறதோ, அதே வைபவந்தான் எனக்கு வாட்டத்தைக் கொடுத்திருக்கிறது.
உமா: விளங்கவில்லையே, நாதா!
ஏகா: விளங்காது உனக்கு, நான் விளக்கினாலொழிய! பார்வதி! வெள்ளிரத உற்சவம் கொண்டாடினார்களே, அது நமக்குப் பெருமை என்றா எண்ணிக்கொண்டாய்?
உமா: இல்லையா, நாதா! அத்தனை இலட்சம் செலவு செய்தது, நம்மைப் பெருமைப்படுத்துவது என்றுதானே பொருள்!
ஏகா: இங்குதான், நான் சிந்திக்கிறேன்—சித்தம் சோர்கிறேன்—நீ சிந்திக்காமலிருக்கிறாய், ஆகவே மகிழ்ச்சி பெறுகிறாய்! சிந்தனை வேண்டும் சிவகாமி! நாமாவது சிந்திக்காவிட்டால், பிரபஞ்சம் என்ன கதியாவது! இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்தார்களல்லவா...?