மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/001
முகவுரை
‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்னும் இந்தப் புத்தகம் கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்), மலேயா, பர்மா முதலான கடல்கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபு நாடு, அலக்சாந்திரியம் (எகிப்து) உரோம் சாம்ராச்சியம் (யவன தேசம் ஆகிய நாடுகளுடனும் செய்த வாணிகத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்ககாலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் ‘செங்கடல் வாணிகம்’ என்னும் நூலிலிருந்தும், புதைபொருள் ஆய்வுகளிலிருந்து கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.
அந்தப் பழங்கால வாணிகத்துக்கும் இக்காலத்து விஞ்ஞான உலக வாணிகத்துக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பழங்காலத்தவர், அக்காலத்து இடம், பொருள், ஏவல்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தக்கப்படித் தரை வாணிகத்தையும் கடல் வாணிகத்தையும் நடத்தினார்கள். அவர்கள் கூட்டாகச்சேர்ந்து ‘சாத்து’ அமைத்துப் பெரிய வாணிகத்தை நடத்தினார்கள். தரை வாணிகஞ்செய்த வாணிகத் தலைவர் மாசாத்துவர் என்று பெயர்பெற்றனர். கடல் வாணிகத் தலைவர் மாநாய்கர் (மாநாவிகர்) என்று பெயர் கூறப்பட்டனர். அக்காலத் தமிழகத்திலே பல மாசாத்துவர்களும் பல மாநாய்கர்களும் இருந்தார்கள்.
சங்ககாலத்துத் தமிழரசர்கள் தங்களுடைய நாடுகளில் வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள். அவர்கள் தங்களுடைய நாடுகளில் வாணிகக் கப்பல்கள் வந்துபோகவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் துறைமுகப் பட்டினங்களை அமைத்தார்கள். இராக்காலத்தில் கடலில் வருகிற கப்பல்கள் திசை தப்பிப் போகாமலும், துறைமுகத்தைக் காட்டவும் கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள். துறைமுகங்களில் உள்ள வாணிகப் பொருள்கள் களவு போகாதபடி காவல் வைத்தனர். வாணிகஞ்செய்து பெரும்பொருள் ஈட்டின வணிகப் பெருமக்களுக்கு ‘எட்டி’ என்னும் சிறப்புப் பெயரையும், ‘எட்டிப்பூ’ என்னும் பொற்பதக்கத்தையும் அளித்துச் சிறப்பினைச் செய்தார்கள். தரை வாணிகமும் கடல் வாணிகமும் பெருகவே, அவற்றைச் சார்ந்து பயிர்த்தொழில் வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும் பெருகிப் பொருள்உற்பத்தி அதிகப்பட்டது. பொருள்களின் உற்பத்தியினாலும் வாணிகத்தினாலும் பொருளாதாரம் உயர்ந்து நாடு செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள். நாட்டுமக்களின் நல்வாழ்வுக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் வாணிகம் முக்கிய காரணமாக இருந்தது.
நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று. அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திரமாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக்காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மயிலாப்பூர் - சென்னை – மயிலை சீனி. வேங்கடசாமி
6-4-1974