145
தம்பி! சாதுக்களைப்பற்றி, சாந்தமுனிவர் என்று சான்றோர் கொண்டாடிய காந்தியாரிடம் சிஷ்யையாக இருந்த மீராபென் கூறியது இது. பத்திரிகைகளில் அறிக்கையே வெளிவந்தது. இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் இது குறித்து எழுதிற்று, மீராபென் கூறுவது போலவே நிலைமை இருக்கிறது என்று. அந்த இதழின் ஆசிரியர் மகாத்மாவின் மைந்தர்—தேவதாஸ் காந்தி.
பூலோக மாயையிலிருந்து விடுபட்டு, சாலோக சாமீப சாயுச்யப் பதவி பெற்றிட, அநித்ய வாழ்வை அகற்றிக் கொண்டு நித்திய வாழ்வு பெற, நிலையில்லா இன்பத்தை உதறிவிட்டுப் பேரின்பம் பெற, மருள் மூட்டிடும் பொருளை எறிந்துவிட்டுப் பரம்பொருளைக் கண்டிட வழி கூறிடும் மகான்கள், காவி கட்டிய இந்தச் சாதுக்கள் என்று நம்பிச் சென்றார் மீராபென் அம்மையார்; சாதுக்களின் தலைமைப் பீடமோ என்று எவரும் எண்ணிடத்தக்க ரிஷிகேசத்துக்கு, அங்கு அம்மையார் கண்டது,
சூதாட்டம்
கற்பைச் சூறையாடல்
கொலை
குடிவெறி
தம்பி! ஆண்டு பலவற்றுக்கு முன்பு நான் எழுதிய ‘வேலைக்காரி’யில் கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக் கொடியவன் ஒருவன் சாது வேடமிட்டுக் கொண்டு ஆசிரமம் நடத்தி அங்கு அழகிகளை மலராகக் கொண்டு காமவேளுக்குப் பூஜை செய்து வந்தான்; அவனை உண்மைச் சாது என நம்பிக்கிடந்த ஒரு வாலிபன், யோகியாக வேடமணிந்து கிடந்தவன் போகி என்பதைக் கண்டறிந்து குமுறி, கொதித்தெழுந்து, கண்டனச் சொற்களை வீசினான் என்று எழுதியபோது, எத்தனை