இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை
சமூகத்தின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கிடக்கும் உயிர்த் துடிப்புள்ள பிரச்னைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து, வெளிப்படுத்தி, அதற்குப் பரிகாரம் காண முயல்வது எதுவோ அதுவே மக்கள் இலக்கியம்.
இதில் வெற்றி கண்டவர் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேதான் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.
ரசனைக்காக எழுதுவதை கவலையை மறப்பதற்காக கற்பனையில் சிறகடித்துப் பறப்பதையெல்லாம் இலக்கியமாக ஒருக்காலமும் அங்கீகரிக்க முடியாது.
படிப்பதற்காக மட்டுமல்ல, படிப்பினை பெறுவதற்காகவும் அந்த இலக்கியம் மக்கள் சமுதாயத்திற்குப் பயனுடையதாய் இருக்க வேண்டும்.
துவண்டு போயிருக்கும் மனத்தைத் தூக்கி நிறுத்தும் வல்லமை கவிதைக்கு எந்த அளவுக்கு உண்டோ, அதே அளவுக்கு உரைநடை இலக்கியத்துக்கும் உண்டு.