உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரிகையின்‌ கதை

255

நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் ப்ரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், ஸாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்த்ரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மனைவி யாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

இந்த ஸங்கதிகளெல்லாம் ஸோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத் தென்படலாயின. சில மாஸங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்து போய்விட்டாள். அவள் சாகுமுன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்:—

“அடே, அய்யா, ஸோமூ! உன் பொண்டாட்டி முத்தம்மாளை நீ ஸாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மஹா பதிவிரதை. உன்னை ஸாக்ஷாத் பகவானுக்கு ஸமமாகக் கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள்