262
பாரதியார் கதைகள்
கொள்ளவும், அவர்களிடம் தாழ்மை யுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப் படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.
இஃதெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இஃதனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் ஸுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல். அவளைக் கண்டவுடனே முகத்தைச் சுளிக்காமலிருக்க அவருக்கு ஸாத்தியப்படவில்லை. பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று. ஆனால், முத்தம்மாளிடம் ப்ரேமை செலுத்துவதெப்படி? விவாகம் செய்து, ருதுசாந்தி முடிந்து சில மாஸங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம் பயந்து கொண்டிருந்தன. அப்பால் அவை அவருக்கு சுகஹேதுக்களாகாமல் மாறிப் போய்விட்டன. பதினைந்தாம் வயதில் அந்த பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும் கொண்டு வரத் தொடங்கினாள். அவர் அவளை முத்தமிடப் போகும் ஸமயத்தில் அந்தக் குழந்தை வீறிட்டழத் தொடங்கிற்று. அல்லது மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும் இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று. அன்றைக்குத் தொடங்கிற்று பெருங் கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும் தம்முடைய மனைவிக்கும் இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளைப் பார்க்குநதோறும் அவருள்ளத்தில் எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம மூடத்தனத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிக மூடத்தன மாகத் தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில் வெறுப்பெய்துவதும் முகத்தைச் சுளிப்பதுமாகிய தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து, நாளுக்குநாள் அந்தப் படுகுழியில் தமது சித்தத்தை அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங் கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால்