உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரிகையின்‌ கதை

263

இவருக்குண்டாகிய புதிய தெளிவின் பயனாக, இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார். அந்த முயற்சி இவருக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது. அவளோ, இவரிடத்திலே தோன்றிய மாறுதலைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும், இவருடைய புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரைப் பல கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மஹா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த ஸமயங்களில், அவருக்குச் சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிஹாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மஹிமைக்குப் பொருந்துமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு எத்தனை விரைவாக நடத்துதல் ஸாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷயத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.

ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதி வருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும் அவனை அந்த மஹா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கியக் கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி, அதனால் அவனுக்குச் சிறிது காலம் வரை அதிக சிரமங்கள்