191
மாப்பிள்ளையைக் காணோமே? வழிதவறிவிட்டதோ? என்று கேட்டுப் பதறிநிற்கும் மாமனாரிடம், “பார்த்தேன் உமது மாப்பிள்ளையை! பாதையில்! படுத்து உருண்டு கொண்டிருந்தார் சாக்கடை ஓரத்தில்! கேட்கப்போனால், இது பன்னீர்க் குளம் என்கிறார்!!” என்று ஒருவர் சொன்னால், மாமனார் மனம் எப்படிப் பதறும். அவ்வளவுக்குப் போவானேன், தரமான மாம்பழம் என்று எண்ணி வாங்கிச் சுவைத்திடும்போது, ஒரு பக்கம் புளிப்பாகவும், மற்றோர் பக்கம் வெம்பலாகவும், முழுதும் நாராகவும் இருந்தால், மனம் என்ன பாடுபடும்!
அதுபோல, மாலையும் மரியாதையும், மக்கள் ஆதரவும் பெறத்துடிக்கும் நேரத்தில், தியாகிகள்! தீரர்கள்! ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள்! என்று வாழ்த்துரைகளைப் பெற்று மெய்மறந்து கிடக்கும் வேளையில்,
இடந்தேடிகள்
பணம் பிடுங்கிகள்
பத்தாம்பசலிகள்
வேடதாரிகள்
கபடர்கள்
சுயநலப்புலிகள்
என்றெல்லாம் பொருள்பட, அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிகப் பொறுப்பான பதவியில் உள்ள அம்மையார், திட்டவட்டமாகக் கூறிடக் கேட்டால், எப்படி இருக்கும் ‘அரசியல் அந்தஸ்து’ தேடிக்கொண்டிருக்கும் காங்கிரசாருக்கு!
போகட்டும், பொதுமக்கள் மட்டும், பாவம், என்ன நினைப்பார்கள்?
பேச்சாளர்களும் எழுத்தாளர்களும், காங்கிரசில் உள்ளவர்களைப்பற்றி,
உண்மைத் தொண்டர்கள்
ஊருக்கு உழைப்பவர்கள்
தியாகச் செம்மல்கள்
தீரமிக்கவர்கள்