உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அறிஞர் அண்ணா



காட்சி - 47

இடம் : பாதை.
இருப்போர் : சேகர், ரத்னம்.

சே : ரத்னம்! பிணம்போலவே இருந்தாயே இவ்வளவு நேரம்.

ர : நமக்கு இது பழக்கம் டாக்டர். போலீசிலே எப்பவாவது சிக்கிக்கிட்டா, கொன்னு போடுவாங்கோ, ஒரு அடி இரண்டு அடி விழுந்ததும், கீழே பிணம்போல விழுந்துவிட்டா அடியிலே இருந்து தப்பிக்கலாம். மூச்சிபேச்சே இல்லாமே கிடப்பேன் கால் மணி நேரம்கூட அதெல்லாம் சாதகத்தாலே வர்றது.

சே : நான் பயந்தே போய்விட்டேன். துப்பாக்கி வெடிச்சுது, நீ கீழே விழுந்தே, என்பாடு அடிவயத்தையே கலக்கிவிட்டது. துப்பாக்கியைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு, உன்னைப் பார்க்கிறேன், நீ, கண் அடிக்கறே. அப்புறம் தான். எனக்குத் தைரியம் வந்தது, யோசனையும் பிறந்தது.

ர : சரியான வேலை செய்தே போ! இனி அந்தப் பய வாலாட்ட மாட்டான். ஆனா என்னைத்தான் கொன்று போட்டே.

சே : ஆமாம்! ரோந்து வருகிற ரத்னம் செத்துவிட்டான். இனிமே. சுசீலாவின் அண்ணன் வாழப்போகிறான். ஆமாம்! ரத்னம்! துப்பாக்கி வெடிக்சுதே, எப்படியோ?

ர : வெடிக்கும், சாகடிக்காது. சும்மா விளையாட்டுத் துப்பாக்கிதானே. ஆளை மிரட்டத்தானே அது. கொல்ல வேணும்னா, துப்பாக்கி வேணுமா? இரட்டைத் துப்பாக்கி இல்லை இதோ (இரு கரங்களையும் காட்டுகிறான். சேகர், அவன் முதுகில் தட்டிக்கொடுக்கிறான். இருவரும் போகின்றனர்.)


காட்சி - 48

இடம் : தேவர் வீடு.
இருப்போர் : தேவர்.

[தேவர் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். சேகர் உள்ளே நுழைந்து.]

சே : ஒழிந்தது, உம்மை வாட்டி வதைத்த சனியன். சாபம் இல்லை! இதோ படம்!

[போட்டோவைப் பெற்றுக்கொண்டு]

தே : ஆஹா! கிடைத்துவிட்டதா? என்னைக் கெடுக்க இருந்த படம் கிடைத்துவிட்டது. என் வாழ்விலே இருந்த பயம் ஒழிந்தது. சேகர் எப்படிக் கிடைத்தது?