உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

111


சே : இதோ, ரத்னம் எல்லாம் சொல்வான்....

தே : (கோபத்துடன்) இந்தப் பயல்தானே சுசீலாவுடன்....

சே : சுசீலா, பவானியின் மகள்! மாசற்றவள். முழு விவரம் இவன் சொல்வான். ரத்னம் யார் தெரியுமா? சொர்ணத்தின் மகன்! உங்கள் குமாரன்.

[தேவர் ரத்னம் ஆலிங்கனம்.]

காட்சி - 49

இடம் :- சுசீலா வீட்டு மாடி அறை.
இருப்போர் :- சுசீலா, (பிறகு) சேகர்.

[சுசீலா விம்மிக்கொண்டிருக்கிறாள். சேகர் உள்ளே நுழைந்து.]

சே : கண்ணே! சுசீலா? அழாதே. நமது கஷ்டம் தீர்ந்து விட்டது. நமது காதலை இனி யாரும் தடுக்கமுடியாது. (அவளை அணைத்துக்கொண்டு) இனி நாம் சாக வேண்டியதில்லை.

[விஷ சீசாவை எடுத்துக் கீழே போட்டு உடைத்து.]

ஜெகவீரன் கட்டிய சூதுக்கோட்டை தூளாயிற்று சுசீலா! உன் தந்தையை மிரட்ட அவன் வைத்திருந்த பயங்கர இரகசியம் ஒழிந்தது. இனி ஜெமீன்தாரன் நாம் சொல்கிறபடி ஆடுவான்.

சு : என்ன? என்ன? ஆபத்து இல்லையா? வாழ்வு இருக்கிறதா? எனக்கா?

சே : நாளைக்கு நமக்கு நிச்சயமாகிறது திருமணம்.

சு : அன்பே! ஆருயிரே! என்மீது கொண்ட சந்தேகம்?

சே : சந்தேகம், சஞ்சலம், சங்கடம், சதி, சோகம் யாவும் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போய்விட்டது. உத்தம நண்பன் ரத்தினம், உன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் உபகாரம் செய்ததாலேதான், ஜெமீன்தாரனை அடக்க முடிந்தது.

சு : கண்ணாளா! நான் கனவு காணவில்லையே?

சே : (அவள் கன்னத்தைக் கிள்ளி) இது கனவா? (அவள் கரங்களை முத்தமிட்டு) இதுவும் கனவா?

சு : (ஆனந்தத்தால் கண்களை மூடிக்கொண்டு) இல்லை! வாழ்வு இன்பவாழ்வு இது!

சே : ஒரு இரவு - ஒப்பற்ற இரவு சுசீலா! இந்த இரவு இன்பத்தோடு தொடங்கிற்று. இடையிலே நமது வாழ்வையே வதைக்கும் பயங்கரம் நம்மைச் சூழ்ந்தது அப்பப்பா! நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறது.