50
பிடி
“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன்முன் கொணர்ந்தான்”
—சேக்கிழார்.
“புலிகேசியின் புதல்வன் விக்ரமன், நரசிம்மப் பல்லவன் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடித்து, சித்திரகாந்தா என்ற தன் குதிரைமீது அமர்ந்து, உருவிய வாளுடன் பவனி வந்து, பரமேஸ்வரனைத் தன் பாதத்தை முத்தமிடச் செய்தான்.”
—வரலாறு.
மகேந்திர பல்லவன் புலிகேசியிடம் தோற்றான். மகேந்திரன் மகன் நரசிம்மன், புலிகேசியைத் தோற்கடித்தான்—கொன்றான். புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடித்துப் பணிய வைத்தான்.
காஞ்சிபுரம் கலங்கிற்று! புலிகேசியின் வெற்றி முரசு கேட்டு; மகேந்திரன் காலத்தில், காஞ்சிபுரம் களித்தது. மகேந்திரனின் மகன் காலத்திலே, புலிகேசி களத்தில் கொல்லப்பட்டு, தலைநகர் வாதாபி தீக்கு இரையான செய்தி கேட்டு. காஞ்சிபுரம் மீண்டும் கலங்கிற்று, புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் (மகேந்திரனின் பேரன்) பரமேஸ்வரனைப் பணிய வைத்தது கண்டு.
அழுகுரல்—ஆனந்தம்—அழுகுரல்—மாறி மாறி வரும்! இதற்கு ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டுமே! ஒன்றும் இல்லையோ! மகேந்திரன், களத்திலே புலி, பல வெற்றிகளைப் பெற்றவன்; எனினும் புலிகேசியிடம் தோற்கிறான். பிறகு அதே புலிகேசி, மகேந்திரனின் மகனிடம் தோற்கிறான். பிறகு புலிகேசியின் மகன் விக்ரமன், நரசிம்மனின் மகன் பரமேஸ்வரனைத் தோற்கடிக்கிறான்.
இந்த விசித்திர வரலாற்றுக்கு, ஒரு விளக்கம், எங்கோ ஓர் உண்மை புதைந்திருக்க வேண்டும்—அதைக் கண்டறி-