உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பல்

49

தன் பாதத்தை முத்தமிடச் செய்தான், சாளுக்கிய மன்னன்!

பல்லவ மன்னன், அந்த விநாடியில், எத்தனை முறை எண்ணினானோ பரஞ்ஜோதியைப் பற்றி!

எவ்வளவு ஆயிரமாயிரம் மக்களின் கண்களிலே, நெருப்பைச் சுடும் நீர் வெளி வந்ததோ!

தாய்நாடு பிறனிடம் அடிமைப்பட்டுத் தார்வேந்தன் எதிர்நாட்டு மன்னனின் பாதத்தை முத்தமிடக் கண்ட பிறகு, கண்களா அவை? புண்களல்லவா? ஆஹா! பரஞ்ஜோதி மட்டும் மடாலயம் புகாமல், படையில் இருந்திருந்தால்...என்று எண்ணித் துடித்தனர் மக்கள். வேறென்ன செய்வர்?

‘பிடி சாம்பல்! பிடி சாம்பல்!’ என்று முழக்கமிட்டான் வில்லாளன்.

‘யாரிவன் பித்தன்? பிதற்றுகிறான்! பிடி சாம்பலாம் பிடி சாம்பல்!’ என்று அன்று வாதாபியில் வில்லாளனைக் கடிந்துரைத்தனரே தமிழ்வீரர்கள்; அவர்கள் இம்முறை என்ன கூற முடியும். “ஆம்! பிடிசாம்பல்! பிடிசாம்பலைத் தந்து பரஞ்ஜோதியாரைப் பூசிக் கொள்ளச் செய்து, மடத்துக்குள் அனுப்பினோம்; இன்று படைத்தலைவர் இன்றித் திகைத்துத் தோற்றோம்! பிடி சாம்பலால் தோற்றோம்.” என்று மெள்ளக் கூறிக் கொண்டனர்.

“அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும், குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின்—அறுவகைப் படைகள் செல்லுங்கால், கிளம்பிய, தூசியானது எதிர்க்க வந்த பல்லவேந்திரன் ஒளியை மங்கச் செய்தது. பல்லவனும் காஞ்சிபுரத்து மதில்களுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.”

—கவி ரவிகீர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/49&oldid=1766549" இலிருந்து மீள்விக்கப்பட்டது