உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பல்

43

தான்—விளக்கைத் தூண்டிக் கொண்டே, “பரஞ்ஜோதி! எனக்கு ஒளி கொடுக்க ஒரு ஜோதி வேண்டாம்! என்னால் தூண்டிவிடப்பட்டு, ஒளிவிடும் ஜோதி போதும்” என்று கூறிக் கொண்டே, அரண்மனை உட்பகுதிக்குச் சென்றான். காற்று வீசி, விளக்கு அலைந்தது; எண்ணெய் குறைந்தது; தூண்டிவிட ஆளில்லை, விளக்கு படர்ந்து போய்விட்டது—எங்கும் இருள்மயம்!

சேனைத் தலைவர் சிவபக்தரானார்-மாளிகை, காட்சிப் பொருளாக்கப்பட்டது—மடத்தில் குடி ஏறினார் பரஞ்ஜோதி—சாளுகியன், அந்தக் குடிபுகு விழாவை வெற்றி விழாவாகக் கொண்டாடினான். சின்னாட்கள், பரஞ்ஜோதியின் புதிய கோலத்தைக் கண்டு களிப்பதிலே செலவிட்டான். மடத்திலே புகுந்த படைத்தலைவரின் செயலைப் பலரிடம் பாராட்டிப் பேசினான். சிவநெறி புகுவோர் சிலர், பரஞ்ஜோதியாரைப் போலக் கொலைத் தொழிலாம் படைத் தொழிலை விட்டு விலக வேண்டுவதே முறை என்று கூறினான். பரஞ்ஜோதியின் பண்டாரக் கோலத்தைக் கண்டு ஏற்கனவே மயக்கமடைந்தவர்கள், வில்லாளனின் தூண்டுதலால், அடியோடு மயக்கமுற்று, ஆளுக்கோர் மடம் தேடிக் கொள்ளவாயினர். படைத் தளபதிகள் பலர், மடம் புகுந்தனர்—களத்திலே அவர்களைக் கொல்வதைவிட, அவர்களை வாழ அனுமதித்து, அதேபோது அவர்களின் ஆற்றலைப் பயனற்றதாக்கிவிடுவது சிறந்தது. நாகத்தை அடித்துக் கொல்லலாம்; இல்லையேல், அதன் நச்சுப் பல்லைப் பெயர்த் தெடுத்துவிட்டுப் பெட்டியில் போட்டு வைக்கலாம்; ஆடவைத்துக்கூட மகிழலாம்-அதுபோல, சாளுக்கியத்தை அழித்த படைவீரர்கள், அவர்களின் தலைவன் பரஞ்ஜோதி மடம் போய்ச் சேர்ந்தான்—பல்லவம், தன் கூர்வாளை, வெற்றி வாளை இழந்தது—இழக்கச் செய்தோம்; வென்றோம் என்று. சாளுக்கியன் கூறிக் களித்தான். அவனுடைய நினைவு உடனே தாய் நாட்டின்மீது சென்றது. இந்தச் சந்தோஷச் செய்தியை; வெற்றிச் செய்தியை சாளுக்கியரிடம் கூறவேண்டும் என்று துடிதுடித்தான். பக்குவமாகப் பேசிப் பரஞ்ஜோதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/43&oldid=1766536" இலிருந்து மீள்விக்கப்பட்டது