38
பிடி
வைணவர்கள், விழாக் கொண்டாடினர், இரகசியமாக-பரஞ்ஜோதி தொலைந்தான் அரச அவையைவிட்டு என்று களித்து. சைவர்கள், பகிரங்கமாகவே விழாக் கொண்டாடினர், மன்னன் சைவத்தின் மேன்மையை உணர்ந்து, சிவபக்தராம் பரஞ்ஜோதியாரை, சிவத்தொண்டு புரிக என்று கூறி விட்டான்—இனிச் சைவம் கொழிக்கும் எதிரிப் படைகள் முறிந்ததுபோல. எமது சைவத்துக்கு எதிராக உள்ள மார்க்கங்கள் அழிந்துபடும் என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர். மன்னன், அரண்மனைத் தோட்டத்திலே, தனியாக உலவ அமைக்கப்பட்டிருந்த மணி மண்டபத்திலே, உலவிய வண்ணம். ஏதேதோ எண்ணிக் கொண்டே இருந்தான். இடையிடையே மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். இருள் சூழ்ந்தது. பணியாள், விளக்கு ஏற்றி வைத்து விட்டுப் போய்விட்டான். விளக்கை அடிக்கடி தூண்டி விட்டுக்கொண்டே மன்னன் உலவினான்—அவன் மனதிலே உலவிய எண்ணங்கள்; அவை இவை.
“அப்பா! மிகமிகச் சிரமப்பட வேண்டி இருந்தது. சிக்கலான காரியம்! பரஞ்ஜோதி துளியும் எதிர்பார்த்திருக்க முடியாது. தெரிந்து கொண்டும் இருக்க முடியாது. ஒரே திகைப்பு.”
ஆனால் என்ன செய்வது! ஓங்கி வளருகிறது அவன் கீர்த்தி, ஒப்பற்ற வீரன் பரஞ்சோதி என்று மண்டலமெங்கும் பேசுகிறார்கள் சகலரும்—ஆமாம்! இடையிடையே ஒப்புக்கு ஒரு மொழி என்னைப்பற்றி வருகிறது. இதற்கு நான் ஏன் மன்னனாக இருக்க வேண்டும்! மண்டலம் புகழ்வது வாதாபியை வென்றவனை! மண்டலத்துக்கு நான் மன்னன்!அலங்காரப் பொம்மை! செ! அந்த நிலையில் மகேந்திரன் மகன் இருப்பதா! படைத்தலைவன் பரஞ்ஜோதியைக் கொண்டுதான்; பல்லவ மன்னன் தன்னைத் தமிழருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை பிறந்தது. நரசிம்மன் யார் தெரியுமோ? வாதாபியை வென்ற வீரர் திலகம். பரஞ்ஜோதியார் வாழும் பல்லவ நாட்டுக்கு மன்னன்!