உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

பாரதியார் கதைகள்

தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல்.

உயிரை வாழ்த்துகின்றோம்.

காற்றே, வா.

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனதை மயக்கும் இனிய வாசனையுடன் வா.

இலைகளின் மீதும் நீர் நிலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த பிராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு வந்து கொடு.

காற்றே வா.

எமது உயிர் நெருப்பு நீடித்து நின்று நல்ல ஒளி தரும் வண்ணம், நன்றாக வீசு.

சக்தி குறைந்து போய் அதனை அவித்து விடாதே.

பேய் போலே வீசி அதை மடித்து விடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு.

உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.

உன்னை வாழ்த்துகிறோம்.

சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது.

யார் வைத்தனர்? மகா சக்தி.

அந்த உறுப்புக்க ளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.