உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

ருடன் நேரு, சோ–இன்–லாயுடன் நேரு, கெனியாடாவுடன் நேரு, நைல் நதி தீரத்தில் நேரு, வோல்கா கரையில் நேரு, ஐ.நா.சபையில் நேரு, ஆல்ப்ஸ் குன்றில் நேரு, வெசுவயஸ் எரிமலை காணும் நேரு, லால்பகதூர் தோளைத் தடவிக் கொடுத்திடும் நேரு தம்பி! ஒன்றா இரண்டா, ஓராயிரம் மட்டுமா? ஓராண்டா ஈராண்டா? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அல்லவா, அவர் திருஉருவம் கண்டு, நாட்டு மக்கள் சொக்கினர்!

இருந்தும்? அவர் நடாத்திய ஆட்சி, மக்களுக்கு நல்வாழ்வு தரவில்லை என்று மனதார நம்பிய எதிர்க்கட்சிகள் அந்தப் புகழொளி கண்டு மயங்கி, முடங்கிக் கிடந்தனவா இல்லையே!

அந்தப் புகழொளி எதிர்க்கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமலா செய்து விட்டது இல்லையே!

அவருடைய புகழ் ஒளி போதும் தனி மராட்டிய மாநிலம் வேண்டாம் என்றா கூறிவிட்டனர் இல்லையே!

அந்தப் புகழொளி இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை–இந்தி வந்தால் வரட்டும் என்றா இருந்து விட்டனர்? இல்லையே!

குறைகளைக் கூறிட, கருத்து வேற்றுமைகளை எடுத்துரைத்திட, கிளர்ச்சி நடத்திட, கருப்புக்கொடி காட்டிட முடிந்தது எதிர்க்கட்சிகளால்—புகழொளி இருந்தும்.

நேருவின் புகழொளிக்கு இல்லாத வசீகரமும் வல்லமையும், காமராஜரின் புகழொளிக்கு இருக்கிறது என்று கூறிடக் கூசுவர் எவரும்; கூறிடத் துணிவோர், நேருவின் நினைவுக்கே கறை பூசிடும் காதகராவர்.

நேருவின் புகழொளியையே இவ்வளவு விரைவிலே மறந்து, வேறோர் புகழொளி அவருடையதைவிட வலிவுள்ளது என்று பேசிடத் துணிவோர், இந்தப் புதிய புகழொளியை எத்தனை சடுதியில் மறந்திடத் துணிவர் என்பதை எண்ணும்போது, தம்பி! எவருக்கும் நடுக்கம் எடுக்கும்.