உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
தஞ்சை வீழ்ச்சி


சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு—வஞ்சகர்களோ எப்படியோ, எதைச் செய்தோ, வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை, தமிழக வரலாற்றுச் சுவடியிலே காணலாம்—தெளிவாகவும் விளக்கமாகவும் இராது—ஓரிரு வரிகள்—சிறுசிறு சம்பவங்கள் என்ற முறையிலே!!

முடிதரித்த மன்னர்கள் அரசு இழந்தால் அல்லற்படுவர்!

புதிய முலாம் பூசப்பட்டவர்கள் மன்னர்களாகி, புது வாழ்வு துவக்குவர்.

அரசர்கள், வாழ்வு தாழ்வு எனும் இரு நிலைகளிலும் உருட்டப்படுவர், கால வேகத்தால். ஆனால், புரோகிதரோ, புன்னகையை இழந்ததில்லை! மன்னன் மாறுவான்; மணிமுடி, சிரம் மாறும்; மறையவர் குலத்துதித்து அரசவையில் இடம் பிடித்த ‘ஜடாமுடி’யின் நிலை மாறாது.

‘இவர்களல்லவா பாக்யசாலிகள்’ என்பர் யாரும்—இவர்களின் முழு உருவம் இதுமட்டுமல்ல.

நாட்டு நிலை மாறினாலும் தங்கள் நிலையிலே தாழ்வு புகாதபடி பார்த்துக் கொள்ளும் திறமைசாலிகளாக மட்டுமல்ல, புரோகிதர் இருந்தது—நாட்டுநிலை இப்படி இப்படி மாறிவிடக்கூடும் என்று முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்கேற்பத் தங்களைத் தயாராக்கிக் கொள்ளும் யூகசாலிகள்!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/85&oldid=1771356" இலிருந்து மீள்விக்கப்பட்டது