86
தஞ்சை
அதுமட்டுமா! நாட்டின் நிலையை இவ்வண்ணம் மாற்றி அமைத்தால், தமது நிலையிலே இவ்வண்ணம் ஏற்றம் கிடைகும் என்று யூகித்து, யாரும் அறியா முறையில், எவரும் குறை கூறாத தன்மையில், நாட்டு நிலையை மாற்றி அமைப்பர்.
இதன்படி, மணிமுடிகள் உருண்டிடவும், மண்டலங்கள் கை மாறிடவும், மன்னர்கள் ஓடிடவும், மாமிசப் பிண்டங்கள் மன்னர்களாகிடவுமான, ‘சம்பவங்களை’ உண்டாக்கி வந்தனர், புரோகிதர்கள்; குருமார்கள் என்ற நிலைக்குக் குறைவு ஏதும் ஏற்படாத வகையிலே, இந்தச் ‘சம்பவங்களை’ உண்டாக்குவர்.
அரசுக்குள்ளே சமர் மூளும்—களங்களிலே கழுகுகள் வட்டமிடும்—அரண்மனைகளிலே அழுகுரல் எழும்—கோட்டை கொத்தளங்கள் தூள் தூளாகும்—அகழிகளிலே முதலைகளுக்கு விருந்து கிடைக்கும்—இந்த நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் போர் என்று சரிதம் இந்தச் சம்பவத்துக்குப் பெயரிடும்—ஆனால், மிக மிகக் கவனமாகக் கூர்ந்து பார்த்து, விடுபட்ட வரிகள், துண்டாடப்பட்ட நிகழ்ச்சி ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தால் சரிதம் வெளிப்படையாகக் கூறாமலிருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். வீண் வேலை என்றெண்ணிச் சிலரும், விஷ வாடை வெளியாகிவிடுமே என்று சிலரும், விளக்கமறிவது சிரமமான காரியமாயிற்றே என்று சிலரும் இருந்துவிடுகின்றனர்—இதனால் முழு உண்மை மங்கி, மடிந்து விடுகிறது. கமண்டல நீருக்கும், மக்களின் குருதிக்கும் இருந்துவந்த பயங்கரத் தொடர்பு மறைக்கப்பட்டுவிடுகிறது. மங்கிக் கிடக்கும் உண்மைகள், தேய்த்து தெரியும் சம்பவங்கள்—இவைகளிலே ஒன்று, தஞ்சை வீழ்ச்சி—வீரம், வஞ்சகத்தால் வதைக்கப்பட்ட விபரீதச் சம்பவம்.
தஞ்சைத் தரணி தமிழகத்தின் பூஞ்சோலை—அன்றும்!
கடல் கொந்தளித்தெழுந்ததால் புயல் கிளம்பி, இன்று அந்தப் பூந்தோட்டம் அழிவுற்றுக் கிடக்கிறதே—அது போன்றே கமண்டல நீர் கொந்தளித்தது; வஞ்சகப் புயல்