இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
போராட்டம்
அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! மறைந்த மாவீரன் தோழர் சௌந்தர பாண்டியன் அவர்கள் பெயரால் ஓர் படிப்பகத்தை திறக்க முன்வந்த ஒன்பதாவது வட்ட திராவிட முன்னேற்றக்கழக அன்பர்களின் அரிய ஏற்பாட்டைக் கண்டு ஆனந்தமடைகிறேன்—அவர்களின் நல்ல எண்ணத்தைப் பாராட்டுகிறேன்.
நம்முடைய நாட்டில் இப்படிப்பட்டப் படிப்பகங்கள் பலப்பல தேவைப் படுகிறது. படிப்பகத்தின் மூலம் பாமர மக்கள் பலப்பல புதிய நூல்களைப் படித்துப் பயன் பெறக்கூடும். படிப்பகம் மட்டுமல்ல ஆரம்ப பாடசாலைகளை ஏற்படுத்த வேண்டும். மாலை அல்லது குறிப்பிட்ட சில நேரங்களில் முதியோர் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி அதற்காகவும் பாடுபடவேண்டும்.
சென்னை முழுமையும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறியதோர் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்கான உதவிகளைப் பொது மக்கள் செய்ய முன்வர வேண்டும்.