தமிழவேள் திருஅம்மானை
Appearance
தமிழவேள் திருஅம்மானை
[தொகு]ஆசிரியர்: முல்லைவாணன்
[தொகு]- ஆரூரன் அங்கழலே பாடுதுங்காண்!
- சீரூரூஞ் செந்தமிழின் சீர்த்தி வளங்குநிலைத்
- தேரூரும் பேரூரில் மூவறுநூ றும்மூன்றில்
- ஏரூரும் ஐந்திங்கள் ஈரைந்தோர் நாளின்கண்
- காரூரும் வானக் கதிரெனவே தான்தோன்றி
- ஊரூரும் மக்கள் உவக்கப் பணிபுரிந்த
- ஆரூரன் அங்கழலே பாடுதுங்காண் அம்மானாய் (1)--
- காவிரி நீங்கிச் சிங்கைநகர் சேர்ந்தான்
- கங்குலாம் மாலைக் கலைநிலவு போற்றமிழிற்
- தங்குலாக் கொள்ளும் தகவால்ஈ ரைம்வகுப்புப்
- பொங்குபுக ழாற்குப் பொலியகலை மூவேழில்
- செங்குமுதப் பூச்சிங்கைச் சீராள் தமிழணிய
- கொங்கலரும் காவிரியாள் கொஞ்சும் துறைநீங்கிச்
- சிங்கைநகர் சேர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (2)
- 3.தமிழர் ஒற்றுமைக் குரலுயர்த்திய உத்தமன்
- கணக்காய ராய்நின்று கன்னித்தமிழ்மாந்தர்
- பிணக்காய மாக்கள்போல் பேணா தொழியொருமை
- குணக்கேடா மென்று குரலுயர்த்தி ஒற்றுமைப்பண்
- உணர்ந்தேற்கச் செய்தும் உவந்துளஞ்சீர் உற்றுநலம்
- இணர்க்காயாய்ப் பெற்றிடவே ஏற்றங்கொள் பெற்றிமிகு
- மணக்காவைத் தாங்குசிங்கை பாடுதுங்காண் அம்மானாய் (3)
- 4. தமிழர் முன்னேற்றம் கொள்ள முனைந்தவன்
- பின்னேற்றம் தன்னில் பெருவிருப்பு கொண்டஇனம்
- முன்னேற்றங் கொள்ள முனைந்ததினால் "முன்னேற்றம்"
- மின்னேற்ற மாக மிளிர்ந்தது "சீர்திருத்தம்"
- தன்னேற்றங் கொள்ளத் "தமிழர்சீர் திருத்தமன்றம்"
- "என்னேற்றம்" என்றே எல்லவரும் சேர்ந்திணைந்தார்
- பொன்னேற்ற வாழ்வினனைப் பாடுதுங்காண் அம்மானாய் (4)
- 5.முரசறைந்த மூலவன்
- அரசறைந்த செந்தமிழ்த்தாய் ஆற்றல் புரந்திருக்கும்
- முரசறைந்த நற்பெருமை மூலவனாய் நின்றிலங்கித்
- திருவுறையும் நூலகமும் தேர்ந்தளித்துச் செந்தமிழில்
- உருவரையும் ஏட்டாளர் பேரவையைத் தாம்தொடங்கிக்
- கருவுறையும் ஆற்றல் கலைவளர்த்து வாழ்வித்த
- பெருவரையாம் சீர்தலைமை பாடுதுங்காண் அம்மானாய் (5)
- 6.தமிழிசை சீர்பெருகத் தாழாது உழைத்தவன்
- உமிழிசையை ஊர்பரவ உண்மை நலங்குவிக்கும்
- தமிழிசையின் சீர்பெருகத் தாழா துழைத்திருந்தும்
- "அ.ம.த.க."த் தொண்டும் அதன்மாநாட் டுச்செயலும்
- நமதினத்தை இந்நாளும் நட்பாகக் காத்திருக்கும்
- கமழ்"சேவி கா"ப்புரந்தான் பாடுதுங்காண் அம்மானாய் (6)
(இப்பாடலில் ஓர் அடி விடுபட்டுள்ளது)
- 7.ஒப்பரிய தொண்டுக்கு ஒரு தேசதூதன்
- நிப்பானியர் காலம் நீளடிமை இந்தியத்தைத்
- தப்பாமற் காக்கத் தலைமைப் பரந்துரைசெய்
- செப்பரிய ஆக்கச் செயல்"விடுத லைக்கழகம்"
- முப்பொழுதும் செய்தபணி மூட்டும் உரிமையனல்
- ஒப்பரிய தொண்டிற் கொரு"தேசத் தூதனு"டன்
- தப்பறியா வாழ்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் (7)
- 8.திருவள்ளுவர் பாவேந்தர் விழா
- சீர்மலைய நாடு விடுதலையைச் சேராமுன்
- நார்மலிந்த தார்போல் நலிந்தகல்விக் கொள்கையினை
- ஊர்பொலியச் செய்த வயவர்துரை சிங்கப்பல்
- கூர்ஒடியச் செய்து"குறள்பாவேந் தர்விழா"வில்
- தார்மலிந்த நல்மணம்போல் தண்டமிழ்பே சச்செய்த
- ஆர்வலிந்த ஆரூரன் பாடுதுங்காண் அம்மானாய் (8)
- 9.மணிமன்றம் கண்டவன்
- அணிதமிழ்க்குத் தொண்டுசெய அச்சகங்கள் தாம்கண்டு
- பணிவலிக்கு மாறுதமிழ்ப் பண்பாடு தானோம்பி
- "மணி"யொலிக்கும் தார்கண்டு மற்றவரை ஊக்குவித்துத்
- துணிவெளுக்கும் போக்கில் துயரறுத்துச் செந்தமிழே
- பிணிநலிக்கும் மாமருந்தாய்ப் பேணிவிட அவ்வினமும்
- துணிந்திருக்கும் வாழுமென்றான் பாடுதுங்காண் அம்மானாய் (9)
- 10.குறள்வழி நடந்தவன்
- ஓடுங் குருதியொன்று உட்கலந்த ஆவியொன்று
- பாடும் தமிழென்னும் பாதையுண்டு காலத்தால்
- நாடும் வழிபலவே நாம்கொண்டோ மென்றாலும்
- கேடின்றி நாம்வாழக் கேளிரென நாம்ஒன்ற
- பீடொன்றே செய்த பெரும்புலவன் செந்தமிழைக்
- கேடொன்றே கொண்டானைப் பாடுதுங்காண் அம்மானாய் (10)
- 11.இந்து திருமணச்சட்டத் திருத்தம்
- 'ஐயையோ ராமசாமி' என்னுமலாய்ப் பாத்தட்டு
- மெய்யாகச் செந்தமிழர் மேன்மை குடித்துவிட்டுத்
- 'தைதைபோ டுதல்'என்னும் தாங்கொணாத் தன்மையினைப்
- பொய்பொய்என் றேயுடைப்பி்ல் போடச்செய்தும் நல்மணங்கள்
- கைந்நெகிழாப் போக்கில் கலந்ததீத் திட்டங்கள்
- மெய்நலியச் செய்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (11)
- 12.மொழியால் இனஒருமை, முன்னேற்றம் கண்டவன்
- மொழியால் இனஒருமை முன்னேற்றம் ஆம்என்னும்
- வழியால் நிலப்பெருமை வாய்க்கும் தொழில்வளங்கள்
- விழிபோல் விளங்குமென வீறார்ந்தும் சட்டமன்றில்
- பழிபோல் தனிஇருக்கை பார்த்திட்டார் கொள்கைத்தீக்
- கழிவே எனத்தடு்த்தும் கன்னல் தமிழ்த்தொண்டே
- பழியாய்க் கிடந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (12)
- 13. தமிழர் திருநாள் தழைக்கக் கண்டவன்
- தமிழே யுயிராகத் தாங்கோண்ட கொள்கைவழி
- அமிழா துயர்ந்திருந்தும் ஆராத ஒற்றுமையால்
- உமிபோ லிருந்தார் ஒருங்கிணையக் கண்டுவந்த
- தமிழர்திரு நாளில் தழைத்த ஒருமைவளம்
- கமழும் நெறிகளினைக் கட்டுவித்த நல்லறிஞர்
- குமிழ உழைத்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் (13)
- 14.செந்தமிழே பல்கலைக்கழகத்தில் வரவேண்டிப் போராடிய பெருந்தகை
- உழைப்பிற் குரியாரை உட்சுரண்டும் போக்கொழித்தும்
- அழைப்புக்கும் வேண்டா அயன்மொழியுள் இந்தியினை
- நுழைப்பிற்கு உருதுமொழி நூற்பிற்குச் சாவடத்தை
- எழுப்பற்கு முன்வந்தார் என்பொடித்துச் செந்தமிழே
- தழைப்பிற்குப் பல்கலையில் தக்கஇடம் பெற்றுவந்த
- விழைவுக் குரியானைப் பாடுதுங்காண் அம்மானாய் (14)
- 15.தமிழ்த்துறைக்கு வடமொழி நூல்கள் பரிசளித்த இந்தியஅரசு
- முந்திவந்த செந்தமிழின் முன்னேற்றம் எண்ணாமல்
- மந்திமொழி கொண்டுவப்பார் மாண்டமொழி நூ்ல்களதாய்த்
- தந்ததொரு ஆயிரத்தைத் தட்டி எறிந்துவிட்டுச்
- சொந்தமொழி மேன்மை சுடரும்பத் தாயிரநூல்
- தந்து கலைக்கழகத் தன்மைச் சிறப்புயர்த்திச்
- செந்தேனாய் நின்றானைப் பாடுதுங்காண் அம்மானாய் (15)
- 16.மாணவர்க்கு உதவித்தொகை
- பல்கலை மன்றில் பதினொருமாண் பாளர்தாம்
- எல்கலை யாய்உதவி ஏற்றுவக்கச் செய்திருந்தும்
- தொல்நிலை தூய்தமிழின் தூய்மைகெட அம்மாமி
- சொல்நிலை வேண்டாவென் சொல்லார்ந்தும் இந்நாட்டு
- நல்நிலை வேண்டியிங்கு நாளும் நிலைத்திருக்கச்
- சொல்கலை வாணன்தனைப் பாடுதுங்காண் அம்மானாய் (16)
- 17.உமறு புலவர் உயர்நிலைப்பள்ளி
- இனஇழுக்கைக் கண்டித்தும் எந்நாளும் நற்றிருநாள்
- மனவழுக்கல் இன்றிக்கொள் மாண்புரைத்தும் நாட்டுநலன்
- முனைமழுங்கா மல்விளங்க முன்னுரைத்தும் நாட்டுரிமை
- தனைஅழுங்கா மற்கொள்ளத் தாமுழைத்தும் நற்கல்வி
- தினையளவு வித்தி உமறுகலை தாம்கண்டு
- பனையளவு நின்றானைப் பாடுதுங்காண் அம்மானாய் (17)
- 18.மணிவிழாச் செலவைக் கல்வி உதவித்தொகைக்குக் கொடு்க்கவேண்டுதல்
- அறுபானாட் டைவிழாவின் ஆக்கச் செலவினையே
- உறுபான்மைக் கல்வி உதவித்தொகை யாய்வழங்க
- செறுஏணி கொண்டானும் செப்பிய ஒப்பில்சொல்
- மறுவிலா வானமதிய மாண்பொக்கும் தன்பெயரான்
- மறுகொன்றிங் கேக்கமற மாட்சிசெயு மாவரசும்?
- நறுகொன்றைச் சூடுவனைப் பாடுதுங்காண் அம்மானாய் (18)
- 19.தமிழினத்தின் ஊன் உயிராய் விளங்கிய உத்தமன்
- தான்தமிழன் என்றுசொலத் தானும் தமிழ்வேண்டும்
- தேன்தமிழர் ஒன்றாயின் தேயம் நமக்காகும்
- வான்மழைபோல் இக்கருத்தை வாரி வழங்கியவன்
- ஊன்உயிராய் நம்மினத்தின் ஊடே விளங்கியவன்
- சான்றுமிக்க தொண்டன் நமைப்பிரிந்த நாளெண்ணி
- தோன்றுபுக ழாளன்தனைப் பாடுதுங்காண் அம்மானாய் (19)
- 20.இன்றுவரை எந்தமிழைக் காத்த ஏந்தலவன்!
- இன்றுவரை அன்னவனால் எநதமிழைக் காத்திருந்தோம்
- என்றுவரை இந்தநிலை என்ற்ற் குறுதியிலோம்
- மன்றுவரை சென்றதமிழ் மாணப் பெருமைகொள்ள
- நின்றவரை போல நிலைகொண்டான் போற்றிசெய்தோம்
- குன்றுயர்ந்த பேரொளியாய் நின்றுபகை தீய்த்தானை
- வென்றுயர்ந்த செந்தமிழால் பாடுதுங்காண் அம்மானாய் (20)
- சிங்கைக் கவிஞர் முல்லைவாணன் அவர்கள், தமிழவேள் மேற்பாடிய தமிழவேள் திருஅம்மானை முற்றியது