உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடி மனம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அடிமனம்

நடக்குமானால் சமூகத்தில் அமைதி குலைந்து குழப்பமே மிஞ்சும். அந்தச் சமயத்திலே அகம் இத்தைக் கொஞ்சம் பொறுக்கும்படி கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தின் கலவியூக்கத்தைச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வழியில் நிறைவேற்ற முயல்கிறது. கலியாணம் போன்ற சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஒழுங்குக்கு உட்பட்டு இத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகிறது. இந்த அகம் பெரும்பாலும் சூழ்நிலையோடு மோதுவதால் ஏற்படுவதாயினும் இதன் அமைப்புக்குப் பாரம்பரியமும் துணை செய்கின்றது.

சில சமயங்களிலே இத் இந்த அகத்தின் கட்டுக்கு மீறித் தொழில் செய்துவிடும். அப்போதுதான் உணர்ச்சி வேகத்தால் காரியம் நடந்ததாக நாம் கூறுகிறோம். உணர்ச்சி வேகத்தால் கொலை செய்பவர்களும் உண்டு.

அதீத அகம் லட்சியத்திலே நாட்டமுடையது. அகம் வரம்பு மீறி இத்தின் இச்சையை நிறைவேற்ற முயலும் போது அதைக் கண்டிக்கிறது. இத் தனது உணர்ச்சி வேகத்தால் இழிந்த தொழில் செய்வதையும், அகம் அந்த இழிதொழிலை வேறு வழிகளில் நிறைவேறும்படி செய்ய முயலுவதையும் அதீத அகம் கண்டிக்கும்.

ஆகவே இத்துக்கு அகம் உடந்தையான தென்றும், அதீத அகம் அகத்தையும் அதன் வாயிலாக இத்தையும் அதன் இழி செயல்களுக்காகத் தண்டிக்கிறதென்றும் தெரிந்து கொள்ளலாம் சில சமயங்களில் அதீத அகம் மிக வன்மையாகக் கண்டிப்பதால் அகம் மிகவும் நைந்துருகும். அந்த நிலையிலே ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ள முனைவதோடு தற்கொலை செய்து கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தில் எண்ணுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/67&oldid=1005344" இலிருந்து மீள்விக்கப்பட்டது