உள்ளடக்கத்துக்குச் செல்

கள்வனின் காதலி/பண்ணையாரின் தவறு

விக்கிமூலம் இலிருந்து

பண்ணையாரின் தவறு

கல்யாணியின் கல்யாணத்தன்று திருமாங்கல்யதாரணம் ஆனதும், அவள் மூர்ச்சையாகி விழுந்தாளென்று சொல்லி விட்டு, பிறகு அவளை நாம் கவனியாமலே இருந்து விட்டோ ம். அதன் பின்னர் இன்று வரையில் அவளுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொள்வது இப்போது அவசியமாகிறது.




தாமரை ஓடைப் பண்ணையார் பஞ்சநதம் பிள்ளை இந்த உலகில் தப்பிப் பிறந்த உத்தம புருஷர்களில் ஒருவர். அவர் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு தான் செய்தார். அது, அந்த முதிய வயதில் ஓர் இளம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டது தான். இது பெரும் பிசகு என்றாலும் அவருடைய பூர்வ சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்ளுவோமானால் அவரிடம் கோபம் கொள்வதற்குப் பதில் அநுதாபமே அடைவோம்.

பஞ்சநதம் பிள்ளை படித்தவர்! விசால நோக்கமும் உயர்ந்த இலட்சியங்களும் உள்ளவர். கொஞ்ச நாளைக்கு அவர் பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். பிறகு அச்சங்கத்தின் கொள்கைகள் சில பிடிக்காமல் விட்டு விட்டார். தேசிய இயக்கத்திலே கூட அவருக்கு ஒரு சமயம் சிரத்தை இருந்தது. ஆனால் அந்த இயக்கம் ரொம்பத் தீவிரமாகி, சட்டம் மறுத்தல், சிறைக்குச் செல்லுதல் என்றெல்லாம் ஏற்பட்டபோது, இது நமக்குக் கட்டி வராது என்று ஒதுங்கிவிட்டார்.

ஒரே ஒரு தடவை அவர் ஜில்லாபோர்டு தேர்தலில் நின்று ஜயித்து அங்கத்தினர் ஆனார். ஆனால் ஒரு வருஷ அனுபவத்தில் அதிலே நடந்த அக்கிரமங்களையும் ஊழல்களையும் சகிக்க முடியாதவராய் ராஜினாமா கொடுத்து விட்டார்.

சொந்த வாழ்க்கையில், அவருடைய நடத்தை மாசற்றதாய், அப்பழுக்கு சொல்ல இடமற்றதாய் இருந்தது. லக்ஷ்மணனைப் பற்றிச் சொல்லியிருக்கிறதே ராமாயணத்தில் - சீதா தேவியின் பாதகங்களையன்றி அவளுடைய திருமேனியை அவன் பார்த்ததேயில்லையென்று - அம்மாதிரியே, "பரஸ்திரீகளை நான் கண்ணெடுத்தும் பார்த்தது இல்லை" என்று அவர் உண்மையுடன் சொல்லிக் கொள்ளக் கூடியவராயிருந்தார்.




அவருடைய மாசற்ற வாழ்க்கைக்குப் பன்மடங்கு பெருமையளிக்கக்கூடியதான இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பணக்காரக் குடும்பங்களில் சாதாரணமாய் நடப்பதுபோல் அவருக்குச் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆயிற்று. அந்தக் கல்யாணம் அவருடைய வாழ்க்கையின் பெரிய துர்ப்பாக்கியமாக ஏற்பட்டது.

இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து செத்துப்போன பின்னர், அவருடைய மனைவியை, மனுஷ்யர்களுக்கு வரக்கூடிய வியாதிகளுக்குள்ளே மிகக் கொடியதான வியாதி பீடித்தது. அவளுக்கு சித்தப் பிரமை ஏற்பட்டது.

சுமார் இருபது வருஷ காலம் அந்தப் பைத்தியத்துடன் அவர் வாழ்க்கை நடத்தினார். அவளுக்காக அவர் பார்க்காத வைத்தியம் கிடையாது; கூப்பிடாத மந்திரவாதி கிடையாது; போகாத சுகவாசஸ்தலம் கிடையாது.

சில சமயம் அவளுக்குப் பிரமை சுமாராயிருக்கும்; அப்போதெல்லாம் சாதாரணமாய் நடமாடிக் கொண்டு இருப்பாள். வேறுசில சமயம் பைத்தியம் முற்றிவிடும்! சங்கிலி போட்டுக் கட்டி அறையில் அடைத்து வைக்க வேண்டியதாயிருக்கும். இம்மாதிரி சமயங்களில் பஞ்சநதம் பிள்ளையைத் தவிர வேறு யாரும் அவள் சமீபம் போக முடியாது. இன்னும் சில சமயம் அவள் பிரம்மஹத்தி பிடித்தவளைப் போல் சிவனே என்று உட்கார்ந்திருப்பாள். அப்போதெல்லாம் பஞ்சநதம் பிள்ளைதான் அவளுக்கு வேண்டிய சிசுருஷைகளையெல்லாம் செய்தாக வேண்டும்.

அந்தக் காலத்தில், வேறே கல்யாணம் செய்து கொள்ளும்படியாக அவரை எவ்வளவோ பேர் வற்புறுத்தினார்கள். "இந்தப் பிரம்மஹத்தியைக் கட்டிக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழிக்க முடியுமா?" என்றார்கள். "இவ்வளவு சொத்தையும் ஆள்வதற்குச் சந்ததி வேண்டாமா?" என்று கேட்டார்கள்.

அதையெல்லம் பஞ்சநதம் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. தொட்டுத் தாலி கட்டிய மனைவிக்குத் தாம் செலுத்த வேண்டிய கடமை இது என்று கருதினார்.

சில சமயம் அவர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கவலைபடுவதுண்டு. தமது மனைவிக்கு முன்னால் தாம் காலஞ்செல்ல நேர்ந்தால் அவளுடைய கதி என்ன ஆகும் என்று எண்ணிப் பெருமூச்சு விடுவார். "ஸ்வாமி! இவள் எத்தனைக் காலம் இப்படிக் கஷ்டப்படுவாள்? இவ்வளவு போதாதா? இவளுடைய துன்பங்களுக்கு முடிவு உண்டு பண்ணக்கூடாதா?" என்று சில சமயம் பிரார்த்திப்பார்.

கடைசியாக, அவருடைய பிரார்த்தனை நிறைவேறிற்று! ஒரு நாள் ஊரில் இல்லாத சமயம் அந்தப் பைத்தியக்காரி திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடி, கொல்லையிலிருந்த கிணற்றில் விழுந்து உயிரைவிட்டாள்.

பஞ்சநதம் பிள்ளைக்கு இது ஒருவாறு மன ஆறுதல் அளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆயுள் கைதிக்குத் திடீரென்று விடுதலை கிடைத்ததுபோல், கொஞ்ச நாள் வரையில் அவருக்கே பிரமையாயிருந்தது. பின்னர் தாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதை அவர் உணர்ந்ததும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.

அவர் மனைவி உயிரோடிருந்தவரையில், "இவள் மட்டும் இறந்து போனால், நம்முடைய சொத்துக்களை யெல்லாம் நல்ல தர்ம ஸ்தாபனங்களுக்குச் சேர்த்துவிட்டு நாம் சந்நியாசியாகி விட வேண்டும்" என்று அவர் எண்ணமிடுவதுண்டு. இப்போதும் அவருக்கு அந்த எண்ணம் மாறிவிடவில்லை. புதிதாய் கிடைத்த சுதந்திரத்தை இன்னும் கொஞ்சநாள் அனுபவிக்க வேணுமென்ற ஆசையினால், சந்நியாசியாவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், தேசத்திலுள்ள முக்கியமான தர்ம ஸ்தாபனங்கள், சந்நியாசி மடங்கள் இவற்றையெல்லாம் பற்றி அவர் விசாரிக்கவும் விவரங்கள் சேமிக்கவும் தொடங்கினார்.

இந்த மாதிரி நிலைமையில்தான் பஞ்சநதம் பிள்ளை கல்யாணியைப் பார்க்கவும், அவளுடைய குதூகலமான சிரிப்பின் ஒலியைக் கேட்கவும் நேர்ந்தது. உடனே, அவருடைய வாழ்க்கை நோக்கம் முழுவதும் அடியோடு மாறிப்போய் விட்டது.




கொள்ளிடத்தில் பிரவாகம் போகும்போது சில சமயம் பெரிய உத்தியோகஸ்தர்கள் கரையோரமாகப் படகில் பிரயாணம் செய்வதுண்டு என்று சொல்லியிருக்கிறோமல்லவா? ஒரு சமயம், டிபுடி கலெக்டர் ஒருவர் அவ்வாறு படகில் பிரயாணம் செய்தபோது பஞ்சநதம் பிள்ளையும் அவருடன் கூடப் போகும்படி நேர்ந்தது. இவர்கள் பழைய சிநேகிதர்கள், சந்தித்துச் சில காலமானபடியால், படகில் போகும்போது பேசிக்கொண்டிருந்தார்கள். வழியில், பூங்குளம் கிராமத்து ஸ்நானத் துறையண்டை படகு சென்றபோது, துறையில் இரண்டு இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஜலத்தை வாரி இறைத்துக் கொண்டு சிரித்து விளையாடுவதையும் அவர்கள் கண்டார்கள். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கரையில் இருந்த குடங்களில் ஒன்று மெதுவாய் நகர்ந்து ஆற்றில் மிதந்து செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்து விட்ட பெண்களில் ஒருத்தி "ஐயோ! கல்யாணி! குடம் போகிறது! எடு! எடு!" என்றாள். கல்யாணி "நீதான் எடேன்!" என்று சொல்லி ஜலத்தை வேகமாய் மோதவும், குடம் இன்னும் ஆழத்துக்குப் போய்விட்டது. அப்போது படகானது, மிதந்து போய்க் கொண்டிருந்த குடத்துக்குச் சமீபத்தில் வர, டிபுடி கலெக்டர் குனிந்து அந்தக் குடத்தைப் பிடிக்க முயன்றார். அம்முயற்சியில் அவர் தலையிலிருந்த தொப்பி நழுவித் தண்ணீரில் விழுந்தது. உடனே அவர் குடத்தை விட்டுவிட்டுத் தொப்பியைப் பிடிக்க முயன்றார். ஆனால் குடமும் போய்விட்டது; தொப்பியும் போய் விட்டது. குடத்தைப் பஞ்சநதம் பிள்ளை பிடித்துக் கொண்டார்; தொப்பி அரோகரா!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கல்யாணி, முதலில் அவளுடைய முகத்தில் இதழ்கள் விரிந்து குறுநகை ஏற்பட்டது. அந்தக் குறுநகை இளஞ்சிரிப்பாயிற்று. பின்னர், அந்த நதி தீரமெல்லாம் எதிரொலி செய்யும்படி கலகலவென்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவ்வளவு சந்தோஷமான, குதூகலமான சிரிப்பைப் பஞ்சநதம் பிள்ளை தமது வாணாளில் கேட்டது கிடையாது.

கன்னங்கள் குழியும்படி சிரித்த அந்த அழகிய முகத்தின் தோற்றமும், கிண்கிணியின் இனிய ஓசையையொத்த அவளுடைய சிரிப்பின் ஒலியும் அவருடைய உள்ளத்தில் நன்கு பதிந்துவிட்டன. அந்த நிமிஷம் முதல் அவருடைய வாழ்க்கை நோக்கமும் மாறுதல் அடைந்தது. "இத்தனை வருஷகாலமாய் முடிவேயில்லாதது போன்ற துன்பத்தின் மத்தியில் உழன்றாயிற்றே, இனிமேலாவது ஏன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தக் கூடாது?" என்று அவர் கருதத் தொடங்கினார்.

ஒரு வேளை, பஞ்சநதம் பிள்ளைக்கு வயது வந்த புதல்வன் ஒருவன் இருந்திருந்தால் அவனுக்குக் கல்யாணியை மணம் செய்வித்து, அவர்கள் சந்தோஷமாயிருப்பதைப் பார்த்தே தாமும் மகிழ்ந்திருப்பார். அப்படி இல்லையாதலால், அவர் தமக்கே அவளை உரிமை கொள்ளச் சொன்னவர்களின் வாதங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, அவற்றின் நியாயங்களைப் பற்றிச் சிந்திக்கலானார்.

முடிவில், கல்யாணியைப் பற்றி விசாரித்து அறிந்து, அவளைக் கல்யாணமும் செய்து கொண்டார்.