பாரதியாரின் தேசிய கீதங்கள்/40. நடிப்பு சுதேசிகள்
Appearance
40. நடிப்பு சுதேசிகள்
(பழித்தறிவுறுத்தல்)
கிளிக்கண்ணிகள்
- நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
- வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
- வாய்ச் சொல்லில் வீரரடி.
- கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
- நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
- நாளில் மறப்பா ரடீ
- சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
- அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
- அகலிகளுக் கின்ப முண்டோ ?
- கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
- பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
- பேசிப் பயனென் னடீ
- யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
- மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
- மாங்கனி வீழ்வ துண்டோ !
- உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
- செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
- செய்வ தறியா ரடீ!
- தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
- நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
- நம்புத லற்றா ரடீ!
- மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
- பேதைகள் போலு யிரைக் - கிளியே
- பேணி யிருந்தா ரடீ!
- தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
- ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
- அஞ்சிக் கிடந்தா ரடீ!
- அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
- உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
- ஊமைச் சனங்க ளடீ!
- ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
- மாக்களுக் கோர் கணமும் - கிளியே
- வாழத் தகுதி யுண்டோ ?
- மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
- ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
- இருக்க நிலைமை யுண்டோ ?
- சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
- வந்தே மாதர மென்பார்! - கிளியே!
- மனத்தி லதனைக் கொள்ளார்
- பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
- பழமை இருந்த நிலை! - கிளியே!
- பாமர ரேதறி வார்!
- நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
- தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
- சிறுமை யடைவா ரடீ!
- சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
- சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
- செம்மை மறந்தா ரடீ!
- பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
- துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
- சோம்பிக் கிடப்பா ரடீ!
- தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
- வாயைத் திறந்து சும்மா - கிளியே!
- வந்தே மாதர மென்பார்!