கணேஷ்

விக்கிமூலம் இலிருந்து

இன்று தமிழ் நாட்டில் விநாயகர் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிராத இடத்தைப் பார்ப்பது வெகு அபூர்வமாகத்தான் இருக்கும். எந்த கிராமத்திலும் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும். ஒரு சிறு அறை, கம்பிக்கதவு. உள்ளே எரியும் சிறு விளக்கு. அவ்வளவு தான். ஏரி, குளக்கரைகளில், கிணற்றங்கரையில் பெரிய ஊர்களில், தெரு முனைகளில், நகரங்களில் அனேக நடைபாதைகளில், விநாயகருக்கு இல்லாத இடம் இல்லை. ஆனால் இந்த இடங்களில் அவருக்கு ஒரு அறை, பூட்டிய கதவு என்று எதுவும் தேவையில்லை. மரத்தடியில் ஒரு மேடை இருந்தால் போது, பாரிய உடம்பானாலும், எங்கும் இருக்க அவருக்குச் சம்மதம் தான். கிணற்றடியில், குளக்கரைகளில் இருக்கும் பிள்ளையார் பற்றி கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெண்கள் காலையிலும் மாலையிலும் குளிக்க, தண்ணீர் எடுத்துச் செல்ல கூட்டம் கூட்டமாக வரும் இடத்தில் பிள்ளையார் காத்திருக்கிறாராம். தன் அன்னை பார்வதி தேவியைப் போல அழகான, புத்திசாலியான பெண்ணைத் தேடி. ஆசை யாரை விட்டது? இதைச் சொல்லும்போது, பாட்டியிலிருந்து என் அம்மா, மாமி வரை எல்லோரும் ஒரு நமுட்டுச் சிரிப்பு உடன் உதடுகளில் மொட்டுக் கட்டியிருக்கும். அவர்கள் கிண்டல் செய்வது போல இருக்கும். பிள்ளையாரையா, அல்லது என்னையா என்பது தெரியாது. இப்படி பிள்ளையாரையும் விஷமத்தனமாக கிண்டல் செய்யும் ஹிந்து சமூகத்தைப் பற்றி இப்போது எனக்கு கர்வம் தான்.


நான் ஒன்றும் அவ்வளவு சமயப் பற்று கொண்டவன் இல்லை. ஹிந்து சமூகத்தில் பிறந்தேன். ஹிந்துவாக இருக்கிறேன். வேறு எதுவாகவும் மாறுவதற்கான சாதாரண காரணங்கள் கூட எனக்குத் தென்படவில்லை. எங்கு போனாலும் இந்தக் கதைதான் என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது அன்றாட உலக நிலவரங்களைப் பார்க்கும்போது. அதனால் ஹிந்து என்றால் திருடன் என்று நான் நம்பவில்லை. திருடனுக்கு மதம் இல்லை. நான் ஹிந்துவாகப் பிறந்ததற்கு வெட்கப்படவும் இல்லை.


இந்த ஹிந்து மதத்தில் தான் எவ்வளவு சுதந்திரம்! ஹிந்து என்றால் திருடன் என்று யாரும் சொன்னால், ஹிந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுவதாக சொன்னால், அதற்காக ஹிந்து மதம் அரண்டு வெறி பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று வெறியாட்டம் போடுவதில்லை. அதனால் தான் அவர்களுக்கு இப்படிச் சொல்லும் தைரியம் வந்ததோ என்னவோ. அந்த தைரியத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்த ஹிந்து மதத்தில் பிறந்ததற்கு அவர்கள் சந்தோஷப்படலாம். பிள்ளையாரைப் பற்றிய சுதந்திரம், அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்த அவர் நமக்கு சுதந்திரம் தந்துள்ளாரா அல்லது எப்படி வேண்டுமாலாலும் எங்குவேண்டுமானாலும் இருக்க அவர் சுதந்திரம் கொண்டுள்ளாரா என்பது பற்றி நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. இரண்டும் தான். பிரம்மாண்ட கோவில்களில், எல்லோரும் தொடப்பட முடியாத, விதிமுறைகள், சடங்குகள் நிறைந்த பிரதிநிதியாகவும் அந்த மூர்த்தி வடிவமாக இருக்க அந்த தெய்வத்திற்கு இஷ்டம் தான். அரசமரத்தடியில் சடங்குகள் ஏதுமின்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு, காக்கை எச்சமிட வெட்ட வெளியில் அமர்ந்திருக்கவும் அந்த பிள்ளையாருக்கு ஆட்சேபணை இல்லை. வெகு வயதான மரத்தின் வேர்கள் தரையில் பரவும் கோலம் பிள்ளையாரின் தோற்றத்தைத் தந்தால், அந்த வேர்களிலும் பிரசன்னமாகி, குங்குமம், சந்தனம் இட்டுக்கொள்ளத் தயார் தான். சமீப காலங்களில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருந்தாலும், இவ்வளவு வெகுஜனப்ரியரான ஒரு கடவுள் வேறு உண்டா என்று தெரியவில்லை.


வினாயக சதுர்த்தி அன்று வீட்டிலேயே பூஜை அறையில் வினாயகரை பிரதிஷ்டை செய்து பூஜிக்க, சின்ன மர அச்சுக்களில் களிமண்ணால் என பிள்ளையார் சிலைகளை எட்டணா, ஒரு ரூபாய் என்று வாங்கிச்சென்ற ஞாபகம். இப்போதும் அந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை. சின்ன களிமண் பிள்ளையார். பூஜை முடிந்த மறுநாள் அந்த பிள்ளையாருக்கு வீட்டில் இடமிருக்காது. கிணறு, ஏரி, குளம், ஆறு என்று அவருக்கு வாசஸ்தலம் தேடப்படும். ஒரு வம்பு தும்பில்லை. அவருக்கும் ஏதும் ஆட்சேபனை இருந்ததில்லை.

இந்த தலைமுறைக்கு நினைவு இருக்கிறதோ என்னவோ, ஒரு சமயம், பகுத்தறிவுத் தந்தையின் நாஸ்திக பிரச்சாரம் பிள்ளையாரை உடைப்போம் என்று தம் திட்டத்தைச் சொல்லி பயமுறுத்தியது. அவரது நாஸ்திகம் பிள்ளையாரைத் தான் தனிமைப் படுத்தியது. வேறு எந்த கடவுளையும் தொடவில்லை. அப்போது ராஜாஜி முதன் மந்திரியாக இருந்தார். நாயக்கரும் ஆச்சாரியாரும் 1920லிருந்து நண்பர்கள். காங்கிரஸ் கட்சியில் நாயக்கரைச் சேர்த்ததே ஆச்சாரியார்தான். அதெல்லாம் பழைய கதை. இப்போதைய பிள்ளையார் சிலை உடைப்பு ரகளை முன்னிற்கிறதே. பகுத்தறிவுத் தந்தை உடைக்கத் திட்டமிட்டது மர அச்சில் வடிக்கப்பட்ட களி மண் பிள்ளையார் தான். அதை பிள்ளையார் உபாசகர்களே மறு நாள் அந்த அச்சுப் பிள்ளையாரை கிணற்றில் குளத்தில் எறியத் தான் போகிறார்கள். "அது பொம்மைப் பிள்ளையார் தான். உடைத்துவிட்டுப் போகட்டும்" என்று ராஜாஜி சொல்லவே, எந்த ரகளையும் ஏற்படாமல், பொது மக்கள் வேடிக்கை பார்க்க, "பிள்ளையார் சிலை உடைப்பு" அமைதியாக, வெற்றிகரமாக நடந்தேறியது. அதன் பிறகு அந்தப் போராட்டம் தொடரப்படவில்லை. ஆனால் பிள்ளையார் பூஜைகள், ஒவ்வொரு வருட சதுர்த்தசி தினமும் நடந்து வருகிறது. நடைபாதைப் பிள்ளையாருக்குக் கூட ஏதும் பத்து வரவில்லை. அவர் சௌக்கியமாகவே இருந்து வருகிறார். தஞ்சை ரயில் நிலயத்தில் நட்ட நடுவில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது தெரியுமோ. தஞ்சை ரயில் நிலயம் என்ன, சிலைகளை உடைக்கச் சொன்ன பெரியார் ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் தெரு முனையில் முச்சந்தியில், பூங்காக்களில், வாகனச் சந்தடி நடுவே தானே சிலையாகி நிற்பதே ஒரு விடம்பனம் தான்.


இதெல்லாம் போகட்டும். முன்னர் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சின்ன அளவில் அமைதியாக நடந்து வந்த பிள்ளளையார் பூஜை இப்போது சமூக நிகழ்வாகப் பெரிதாகி விட்டது. எவ்வளவு வேகத்தில் பந்தை எறிகிறோமோ அவ்வளவு வேகத்தில் அது சுவற்றில் அடிபட்டுத் திரும்பும். அப்படித்தானோ என்னவோ. பெரிய பிள்ளையார் சிலைகள் ஆறு அங்குல மர அச்சில் வார்த்த களி மண் பிள்ளையார் இருந்த இடத்தில் இப்போது மூன்றடி உயரத்திலிருந்து பத்து அடி உயரப் பிள்ளையார் வரை, 500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் விலையில் பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இப்போது சமீப காலமாகத்தான் இப்படி ஒரு சமூக விழாவாக இது ஆகியுள்ளது.


மகாராஷ்டிராவில்தான், மராத்தியர்கள்தான் விநாயக பூஜையை இப்படி கோலாகலமாக பெரிய அளவில் நடத்துவார்கள். நம்மூர்களில் நடக்கும் உறியடியும் அங்கு நடக்கும். மிக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் உறியில் பணம், தவிர இன்னும் என்னென்னவோ வைக்கப்பட்டிருக்கும். அந்த உறியைக் கைப்பற்ற மனித கோபுரம் எழுப்பப்படும், நான்கைந்து மனித உயரத்திற்கு. கீழே தாங்கி நிற்பவர்களின் தோளில் ஏறி இப்படி பல அடுக்குகளில் கோபுரம் எழும். ஒரு காலத்தில் மகாராஷ்டிரத்திலும் முன்னர் நம்மூர்களில் இருந்தது போல வீட்டு நிகழ்வாகத்தான் அது இருந்தது என்று நினைக்கிறேன். இதை ஒரு சமூக நிகழ்வாக, தேச பக்த உணர்வை எழுப்பும் செயல்பாடாக ஆக்கியது, பால கங்காதர திலகர். சிறந்த கல்விமான். தத்துவங்களில், நிறைந்த ஞானம் உள்ளவர். மாண்டலே சிறையில் இருந்த போது கீதா ரகஸ்யம் என்ற பெரிய நூலை இயற்றினார். அது அவரது உலக, தத்துவப் பார்வையைச் சொல்லும். கீதையில் சொல்லப்பட்டுள்ளது அனைத்தும் கர்ம யோகத்தை நோக்கிச் செல்வது. என்பது அவர் முடிபு. அந்த கர்ம யோகம் இன்று வலியுறுத்துவது தேச விடுதலை. மனித விடுதலை என்பது திலகர் கருத்து. அவர் மராத்தியர்களுக்கு தேச பக்தி உணர்வை ஊட்ட இரண்டு பெரிய சமூக செயல்பாட்டை ஆரம்பித்து வைத்தார். ஒன்று கணேஷ் பூஜை. இரண்டாவது சிவாஜியை, அன்னியர்களை விரட்டிய முதல் வீர புருஷனாக உணர்த்தியது. அனேகமாக ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. இரண்டும் மகாராஷ்டிரத்தில். மராத்தியர் வாழும் இடங்களில் எல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.


ஆனால், இங்கு பெரிய அளவில் நடத்தப்படும் பிள்ளையார் சிலை ஊர்வலத்திற்கும் அதன் சங்கமத்திற்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தோன்றியது ஏனோ தெரியவில்லை. ஏன் இவ்வளவு எதிர்ப்பு, முஸ்லீம்கள் காட்டுகிறார்களோ இல்லையோ, அரசு முஸ்லீம்களுக்கு எதிரானது என்று காரணம் சொல்லி, சட்டம் ஒழுங்குக்கு அபாயம் என்று பயமுறுத்துகிறார்கள். கடைசியில் எந்த வழி செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும், போலீஸ் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்லி கடைசியில் அந்த ஊர்வலத்தின் விழாக் கொண்டாட்டத்தின் உயிரையே பறித்து சக்கையாக்கி விட்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் எதிர்ப்பு என இல்லாத ஒன்று உருவாக்கப்படுகிறது என்று தான் தோன்றுகிறது. முஸ்லீம்கள் பெருமளவில் உள்ள ஆனால் ஹிந்துக்களே பெரும்பான்மையாக உள்ள தில்லியில் ஆங்காங்கே போக்குவரத்து நிறைந்த சாலைகளில் கூட முகர்ரம் பண்டிகையின் ஊர்வலங்களில் பெரிய பெரிய தாஜியாக்கள் எடுத்துச் செல்வார்கள். எல்லாம் அமைதியாக நடக்கும். அவையும் ஓர் அழகுதான். வாழ்க்கையைக் கொண்டாடும் ஓர்பாங்கு. ஆனால், இங்கு ஏன் பீதி கிளப்பப்படுகிறது என்று தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, வீட்டளவிலேயே நடக்கும் சின்ன மர அச்சுப் பிள்ளையாரே அமைதியும் அழகும் நிறைந்தவராகத் தோன்றுகிறார் எனக்கு. ஒரு குழந்தைமையும் அவருக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. விக்னேஸ்வரர் அதாவது இடர்பாடுகளை நீக்குபவர் என்று பொருள் பெற்ற பெயர் கொண்ட அவர் விக்னங்களையே, அதாவது இடர்பாடுகளையே சமூகத்தில் விதைப்பவராக இங்கு ஆக்கப்பட்டுள்ளது, தமிழ் வாழ்க்கையில் காணும் விடம்பனம்தான்.


இவ்வளவு வம்புகளுக்கும் காரணம் திலகரின் தேச பக்த உணர்வில் பிறந்த இந்த பத்தடியோ பதினைந்தடியோ உயர ஊர்வல மூர்த்தியான எண்ணெய் வண்ண பிள்ளையார்தான் என்று நினைக்கக் கூடாது. பிள்ளையாரே நமக்கு மகாராஷ்டிரத்திலிருந்து பெறப்பட்டவர்தான். இறக்குமதிதான். ஏழாம் நூற்றாண்டில் நரஸிம்மவர்ம பல்லவன் இரண்டாம் புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றினான். அந்தப் போரில் நரசிம்ம வர்மப் பல்லவனின் சேனாதிபதியாக இருந்தவர் பின்னர் சிறுத்தொண்ட நாயனார் என்று பெயர் பெற்ற பரஞ்சோதி. அவர்தான் வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொணர்ந்து விநாயக வழிபாட்டைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். இதைத் தான் முத்து சாமி தீக்ஷிதர் தம் ஹம்சத்வனி ராக கிருதி, "வாதாபி கணபதிம் பஜே" யில் குறிப்பிடுகிறார், வாதாபி கணபதி என்றே. இதற்கு முன் தமிழ் நாடு விநாயகரை அறியாது. திருமாலை அறியும். சிவனை அறியும். கொற்கை என்னும் துர்க்கையை அறியும். முருகனை அறியும். ராமாயணத்தை, மகாபாரதத்தை தமிழர் அறிவர். விநாயகரை அல்ல. பரஞ்சோதி வாதாபி சென்று புலிகேசியை வென்று திரும்பிய 630-640 கி.பிக்கு முந்திய எந்த தமிழ் நூலிலாவது விநாயகருக்கு வாழ்த்து சொல்லப் பட்டுள்ளதா என்று பார்க்கலாம். இல்லை யென்று தான் நான் நினைக்கிறேன். தமிழ் புலமை சான்றோர் இது பற்றித் தம் நுண்மாண் நுழைபுலக் கருத்து ஏதும் சொன்னால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.


இதன் பின் பிள்ளையார் இல்லாத இடம் இல்லை. எந்த காரியம் தொடங்கினாலும் விக்னம் இல்லாது நடக்க அவன் துணை வேண்டியிருக்கிறது. எந்த புலவரும் வினாயகருக்கு வாழ்த்துப் பாடித்தான் தம் நூலை இயற்றத் துணிகிறார். பாரதி வரை. ஓம் சக்தி என்று தொடங்கினாலும் அடுத்தாற்போல் கணபதி ராயனின் இருகாலைப் பிடித்திடத்தான் அவர் மனம் செல்கிறது. அவர் எல்லா ஊருக்கும் எல்லைக்கடவுள் போல் கிவிட்டார். ஆனாலும், விக்னங்களை நாசம் செய்பவர், விக்னங்களையே தருபவராக சமூகத்தின் ஒரு பாலாரால், சில கட்சிகளால் கருதப்பட்டாலும், அவருக்குக் கற்பிக்கப்பட்டுள்ள உருவே அந்த விளயாட்டுச் சிறுவனின் பிரதிமையே வேடிக்கை உணர்வைத் தருகிறது. மகாராஷ்டிரத்தில் ஒரு பெண்மணி இன்னும் ஒரு சில நூறு பிரதிமைகள் செய்துவிட்டால் 50,000 பிரதிமைகளைச் செய்த இலக்கை அடைந்து விடுவேன் என்கிறார். இவ்வளவு பிரதிமைகள் செய்த பழக்கத்தாலோ என்னவோ, கண்களைக் கட்டிக் கொண்டே கூட அவரால் பிரதிமைகளைச் செய்துவிட முடிகிறது. அதுவும் நவீன சிற்பிகளைப் போல வித விதமான படிமங்களில் வித்தியாசமான பிரதிமைகளை அவர் சில நிமிடங்களில் அவர் விரல்கள் செய்யும் மாயத்தில் ஒரு நவீன படிம வினாயகர் உருவாக்கி விடுகிறார். சென்னையில் கூட கடந்த வருடம் ஒரு வாலிபர் எண்ணற்ற வினாயக சிற்பங்களைச் சேகரித்து வைத்திருந்ததை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். கையில் கிரிக்கெட் மட்டை தாங்கிய வினாயகர், பந்தின் மேல் கால் வைத்து உதைக்கத் தயாராயிருக்கும் வினாயகர், பைக்கில் அமர்ந்த கோலத்தில், இப்படி பல தோற்றங்களில். பாண்ட்டும் சர்ட்டும் போட்ட வினாயகர் கூட இருந்ததாக ஞாபகம்.


சிற்பிகளுக்கும் வினாயகர் பிரதிமை தரும் உற்சாகமும், கற்பனைப் பெருக்கமும், பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். அந்த பிரதிமை வாய்த்திருப்பது அப்படி. என்னென்ன விதமாகவெல்லாம், அந்த உருவம் தரும் வாய்ப்புகளுக்கும் அப்பால் கற்பிக்கத் தோன்றுகிறது. நிறைந்த கவர்ச்சியும், அழகும் வாய்ந்த பிரதிமை அது. முக்கியமாக நடனமாடும் விக்னேச்வரர் சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சி நடராஜப் பிரதிமைக்கே உண்டு.


எதுவானாலும், அதிலிருந்து மேம்பட்ட சிந்தனையையும், அழகுணர்வுகளையும் பெறுவது நமக்குள்ளிருந்து பிறக்க வேண்டும். அது நாம் எப்படிப்பட்ட ஆன்மா என்பதைப் பொறுத்துள்ளது. பரஞ்சோதி கொணர்ந்த கொடை நம் சங்கீதத்தை, சிற்பக் கலையை, கவிதையை, வாழ்க்கையை, விழாக்களை சிறுவர்களின் விளையாட்டு மனத்தையும் கூடத்தான் வளப்படுத்தியுள்ளது. நமது மனக்கட்டமைப்பு வேறானால், அழிப்பதற்கு எதுவும் சாக்காகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

22.8.06

"https://ta.wikisource.org/w/index.php?title=கணேஷ்&oldid=481227" இலிருந்து மீள்விக்கப்பட்டது