உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/அகத்தியப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

மூவரும் தவக்குடிலில் இருந்து நீங்கல்

[தொகு]

அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின்,

இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர்,

குனி வரு திண் சிலைச் குமரர், கொம்பொடும்,

புனிதனது உறையுள்நின்று அரிதின் போயினார். 1


மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும்,

அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும்,

இலை செறி பழுவமும், இனிய சூழலும்,

நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினார். 2


தண்டக வனத்தில் வாழும் தவமுனிவர்களின் மகிழ்ச்சி

[தொகு]

பண்டைய அயன் தரு பாலகில்லரும்,

முண்டரும், மோனரும், முதலினோர்கள், அத்

தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்

கண்டனர் இராமனை, களிக்கும் சிந்தையார். 3


கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஒர்

வினை பிறிது இன்மையின், வெதும்புகின்றனர்;

அனல் வரு கானகத்து, அமுது அளாவிய

புனல் வர, உயிர் வரும் உலவை போல்கின்றார். 4


ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே

வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்;

தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர்

தாய் வர, நோக்கிய கன்றின் தன்மையார். 5


கரக்க அருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்,

பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர்,

அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார், ஒரு

மரக்கலம் பெற்றென, மறுக்கம் நீங்கினார். 6


தெரிஞ்சுற நோக்கினர்- செய்த செய் தவம்

அருஞ் சிறப்பு உதவ, நல் அறிவு கைதர,

விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந் துயர்ப்

பெருஞ் சிறை வீடு பெற்றனைய பெற்றியார். 7


வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம்

பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால்,

மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்;

ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்அரோ. 8


முனிவர்கள் மூவரையும் வாழ்த்தி, தம் குறை கூறல்

[தொகு]

எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின்

கொழுந்து என நின்ற அக் குரிசல் வீரனை;

பொழிந்து எழு காதலின் பொருந்தினார், அவன்

தொழும்தொறும் தொழும்தொறும், ஆசி சொல்லுவார். 9


இனியது ஓர் சாலை கொண்டு ஏகி, 'இவ் வயின்

நனி உறை' என்று, அவற்கு அமைய நல்கி, தாம்

தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர்

அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான். 10


எய்திய முனிவரை இறைஞ்சி, ஏத்து உவந்து,

ஐயனும் இருந்தனன்; 'அருள் என்? என்றலும்,

'வையகம் காவலன் மதலை! வந்தது ஓர்

வெய்ய வெங் கொடுந் தொழில் விளைவு கேள்' எனா, 11


'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்,

அரக்கர் என்று உளர் சிலர், அறத்தின் நீங்கினார்,

நெருக்கவும், யாம் படர் நெறி அலா நெறி

துரக்கவும், அருந் தவத் துறையுள் நீங்கினேம். 12


'வல்லியம் பல திரி வனத்து மான் என,

எல்லியும் பகலும், நொந்து இரங்கி ஆற்றலெம்;

சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்;

வில் இயல் மொய்ம்பினாய்! வீடு காண்டுமோ? 13


'மா தவத்து ஒழுகலெம்; மறைகள் யாவையும்

ஓதலெம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்;

மூதெரி வளர்க்கிலெம்; முறையின் நீங்கினோம்;

ஆதலின், அந்தணரேயும் ஆகிலேம்! 14


'இந்திரன் எனின், அவன் அரக்கர் ஏயின

சிந்தையில் சென்னியில், கொள்ளும் செய்கையான்;

எந்தை! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்?

வந்தனை, யாம் செய்த தவத்தின் மாட்சியால். 15


'உருளுடை நேமியால் உலகை ஓம்பிய

பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா

இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;

அருளுடை வீர! நின் அபயம் யாம்' என்றார். 16


இராமன் அபயம் அளித்தல்

[தொகு]

'புகல் புகுந்திலரேல்; புறத்து அண்டத்தின்

அகல்வரேனும், என் அம்பொடு வீழ்வரால்;

தகவு இல் துன்பம் தவிருதிர் நீர்' எனா,

பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான். 17


'வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும்,

ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர்

மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம்

போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்' என்றான். 18


'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை

மறந்த புல்லர் வலி தொலையேன்எனின்,

இறந்துபோகினும் நன்று; இது அல்லது,

பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 19


'நிவந்த வேதியர் நீவிரும், தீயவர்

கவந்தபந்தக் களிநடம் கண்டிட,

அமைந்த வில்லும் அருங் கணைத் தூணியும்

சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால். 20


'ஆவுக்கு ஆயினும், அந்தணர்க்கு ஆயினும்,

யாவர்க்கு ஆயினும், எளியவர்க்கு ஆயினும்,

சாவப்பெற்றவரே, தகை வான் உறை

தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். 21


'சூர் அறுத்தவனும், சுடர் நேமியும்,

ஊர் அறுத்த ஒருவனும், ஓம்பினும்,

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர்'என்றான். 22


உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட,

இரைத்த காதலர், ஏகிய இன்னலர்,

திரித்த கோலினர், தே மறை பாடினர்;

நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார்; 23


'தோன்றல்! நீ முனியின், புவனத் தொகை

மூன்று போல்வன முப்பது கோடி வந்து

ஏன்ற போதும், எதிர் அல; என்றலின்

சான்றலோ, எம் தவப் பெரு ஞானமே. 24


'அன்னது ஆகலின், ஏயின ஆண்டு எலாம்,

இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய்' எனச்

சொன்ன மா தவர் பாதம் தொழுது, உயர்

மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான். 25


பத்து ஆண்டுகள் இனிது கழிதல்

[தொகு]

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண்,

மைந்தர், தீது இலர் வைகினர்; மா தவர்

சிந்தை எண்ணி, 'அகத்தியற் சேர்க' என,

இந்து - நன்னுதல் தன்னொடும் ஏகினார். 26


அகத்தியனைக் காணச் செல்லும் இராமனைச் சுதீக்கணன் உபசரித்தல்

[தொகு]

விடரகங்களும், வேய் செறி கானமும்,

படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்;

சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்

இடர் இலான் உறை சோலை சென்று, எய்தினார். 27


அருக்கன் அன்ன முனிவனை அவ் வழி,

செருக்கு இல் சிந்தையர், சேவடி தாழ்தலும்,

'இருக்க ஈண்டு' என்று, இனியன கூறினான்;

மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார். 28


வைகும் வைகலின், மாதவன், மைந்தன்பால்

செய்கை யாவையும் செய்து, 'இவண், செல்வ! நீ

எய்த யான் செய்தது எத் தவம்? 'என்றனன்;

ஐயனும், அவற்கு அன்பினன் கூறுவான்; 29


'சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர்

முன்னையோருள், உயர் தவம் முற்றினார்

உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய

என்னின் யார் உளர், இற் பிறந்தார்?' என்றான். 30


உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு, எதிர்,

நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்:

'அவம் இலா விருந்து ஆகி, என்னால் அமை

தவம் எலாம் கொளத் தக்கனையால்' என்றான். 31


மறைவலான் எதிர், வள்ளலும் கூறுவான்:

'இறைவ! நின் அருள் எத் தவத்திற்கு எளிது?

அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர்

குறை கிடந்தது, இனி' எனக் கூறினான். 32


'நல்லதே நினைந்தாய்; அது, நானும் முன்

சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ

செல்தி ஆண்டு; அவற் சேருதி; சேர்ந்தபின்,

இல்லை, நின்வயின் எய்தகில்லாதவே. 33


'அன்றியும் நின் வரவினை ஆதரித்து,

இன்றுகாறும் நின்று ஏமுறுமால்; அவற்

சென்று சேருதி; சேருதல், செவ்வியோய்!

நன்று தேவர்க்கும்; யாவர்க்கும் நன்று' எனா, 34


இராமன் அகத்தியனைக் காணல்

[தொகு]

வழியும் கூறி, வரம்பு அகல் ஆசிகள்

மொழியும் மா தவன் மொய்ம் மலர்த் தாள் தொழா,

பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள்

பொழியும் சோலை விரைவினில் போயினார். 35


ஆண்தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான்;

ஈண்டு, உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த,

மாண்ட வரதன் சரண் வணங்க, எதிர் வந்தான் -

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான். 36


பண்டு, 'அவுணர் மூழ்கினர்; படார்கள்' என வானோர்,

'எண் தவ! எமக்கு அருள்க' எனக் குறையிரப்பக்

கண்டு, ஒரு கை வாரினன் முகந்து, கடல் எல்லாம்

உண்டு, அவர்கள் பின், 'உமிழ்க' என்றலும், உமிழ்ந்தான். 37


தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்;

ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்;

மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்

காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர் களைந்தான். 38


யோகமுறு பேர் உயிர்கள்தாம், 'உலைவுறாமல்

ஏகு நெறி யாது?' என, மிதித்து அடியின் ஏறி,

மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்

நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39


மூசு அரவு சூடு முதலோன், உரையின், 'மூவா

மாசு இல் தவ! ஏகு' என, வடாது திசை மேல்நாள்

நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா,

ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40


உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,-

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங் கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான். 41


அகத்தியன், இராமனை வரவேற்று, அளவளாவல்

[தொகு]

'"விண்ணினில், நிலத்தினில், விகற்ப உலகில், பேர்

எண்ணினில், இருக்கினில், இருக்கும்" என யாரும்

உள் நினை கருத்தினை, உறப் பெறுவெனால், என்

கண்ணினில்' எனக் கொடு களிப்புறு மனத்தான். 42


'இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும்

நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு

அரைத்தும், அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று

உரைக்கு உதவுமால்' எனும் உணர்ச்சியின் உவப்பான். 43


'உய்ந்தனர் இமைப்பிலர்; உயிர்த்தனர் தவத்தோர்;

அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள்; ஆனா

வெந் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்

வந்தனன் மருத்துவன்' என, தனி வலிப்பான். 44


ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து

ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்

கான அனலைக் கடிது அவித்து, உலகு அளிப்பான்,

வான மழை வந்தது' என, முந்துறு மனத்தான். 45


கண்டனன் இராமனை வர; கருணை கூர,

புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய, நின்றான் -

எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய,

குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46


நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;

அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,

'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்-

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். 47


வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற,

காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர்

மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ,

போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். 48


பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்;

விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; 'விரும்பி,

இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என்

அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச!' என்றான். 49


என்ற முனியைத் தொழுது, இராமன், 'இமையோரும்,

நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும்,

உன் தன் அருள் பெற்றிலர்கள்; உன் அருள் சுமந்தேன்;

வென்றனென் அனைத்து உலகும்; மேல் இனி என்?' என்றான். 50


'"தண்டக வனத்து உறைதி" என்று உரைதரக் கொண்டு,

உண்டு வரவு இத் திசை என, பெரிது உவந்தேன்;

எண் தகு குணத்தினை!' எனக் கொடு, உயர் சென்னித்

துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: 51


'ஈண்டு உறைதி, ஐய! இனி, இவ் வயின் இருந்தால்,

வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்;

தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால்,

மாண்டு உக மலைந்து, எமர் மனத் துயர் துடைப்பாய்; 52


'வாழும் மறை; வாழும் மனு நீதி; அறம் வாழும்;

தாழும் இமையோர் உயர்வர்; தானவர்கள் தாழ்வார்;

ஆழி உழவன் புதல்வ! ஐயம் இலை; மெய்யே;

ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு உறைதி' என்றான். 53


'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தித்

தருக்கு அழிதர, கடிது கொல்வது சமைந்தேன்;

வருக்க மறையோய்! அவர் வரும் திசையில் முந்துற்று

இருக்கை நலம்; நிற்கு அருள் என்?' என்றனன் இராமன். 54


இராமனுக்கு அகத்தியன் வில், கணை புட்டில் வழங்குதல்

[தொகு]

'விழுமியது சொற்றனை; இவ் வில் இது இவண், மேல்நாள்

முழுமுதல்வன் வைத்துளது; மூஉலகும், யானும்,

வழிபட இருப்பது; இது தன்னை வடி வாளிக்

குழு, வழு இல் புட்டிலொடு கோடி' என, நல்கி, 55


இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்

ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,

வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்

முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. 56


பஞ்சவடியின் சிறப்பு

[தொகு]

'ஓங்கும் மரன் ஓங்கி, மலை ஓங்கி, மணல் ஓங்கி,

பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி,

தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்

பாங்கர் உளதால், உறையுள் பஞ்சவடி - மஞ்ச! 57


'கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்

செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்

பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதா,

அன்னம் உள, பொன் இவளடு அன்பின் விளையாட. 58


மூவரும் அகத்தியனிடம் விடைபெற்றுச் செல்லுதல்

[தொகு]

'ஏகி, இனி அவ் வயின் இருந்து உறைமின்' என்றான்;

மேக நிற வண்ணனும் வணங்கி, விடை கொண்டான்;

பாகு அனைய சொல்லியடு தம்பி பரிவின் பின்

போக, முனி சிந்தை தொடர, கடிது போனான். 59


மிகைப் பாடல்கள்

[தொகு]

'அருந் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின்

புரந்திடும் தசமுகத்து ஒருவன், பொன்றிலாப்

பெருந்தவம் செய்தவன், பெற்ற மாட்சியால்

வருந்தினெம் நெடும் பகல்-வரத!-யாம் எலாம். 14-1


'தேவர்கள் தமைத் தினம் துரந்து, மற்று அவர்

தேவியர்தமைச் சிறைப்படுத்தி, திக்கு எலாம்

கூவிடத் தடிந்து, அவர் செல்வம் கொண்ட போர்

மா வலித் தசமுகன் வலத்துக்கு யார் வலார்? 14-2


'அவன் வலி படைத்து, மற்று அரக்கர் யாவரும்,

சிவன் முதல் மூவரை, தேவர் சித்தரை,

புவனியின் முனிவரை, மற்றும் புங்கவர்

எவரையும் துரந்தனர்-இறைவ!-இன்னுமே. 14-3


'ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல்

மேய போர் அரக்கரே மேவல் அல்லதை,

தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து

ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம், ஐயா! 14-4


'வெள்ளியங் கிரியிடை விமலன் மேலை நாள்,

"கள்ளிய அரக்கரைக் கடிகிலேன்" எனா,

ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான்; கடற்

பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான். 14-5


'நான் முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே

தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்;

வானில் வெஞ் சுடர் முதல் வயங்கு கோள் எலாம்

மேன்மை இல் அருஞ் சிறைப்பட்டு மீண்டுளார்.' 14-6


என்று, பினும், மா தவன் எடுத்து இனிது உரைப்பான்;

'அன்று, அமரர் நாதனை அருஞ் சிறையில் வைத்தே

வென்றி தரு வேல் தச முகப் பதகன் ஆதி

வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே! 53-1


'ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே,

தூய தவ வாணரொடு தொல் அமரர்தம்மை

நீ தனி புரந்திடுதல் நின் கடனது' என்றான்;

நாயகனும், 'நன்று!' என அவற்கு நவில்கின்றான். 53-2