தியாக பூமி/மழை/தீக்ஷிதர் சபதம்
தீக்ஷிதர் சபதம்
நல்லான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. மறுநாள் காலையில் சுமார் பத்து மணிக்கு, கொஞ்சம் தூற்றல் நின்று வானம் வெளி வாங்கியிருந்த போது வம்பும் தும்பும் கும்பலாகச் சேர்ந்து சம்பு சாஸ்திரியின் வீட்டு வாசலைத் தேடிக் கொண்டு வந்தன. சங்கர நாராயண தீக்ஷிதரை முன்னிட்டுக்கொண்டு, முத்துசாமி அய்யர், சாமாவய்யர், ரமணி அய்யர், பஞ்சவய்யர், ராமய்யா வாத்தியார், பென்ஷன் ஸப் ரிஜிஸ்ட்ரார் சினிவாச அய்யங்கார், பஞ்சாங்கம் பசுபதி ஜோசியர், குமாரசாமி குருக்கள், நாராயண கனபாடிகள், அர்ச்சகர் வரதய்யங்கார் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது வாசலில் நின்ற செவிட்டு வைத்தியைப் பார்த்து, தீக்ஷிதர், "அடே! உன் அத்திம்பேரைக் கூப்பிடு!" என்று வாயாலும் கத்தி, கையாலும் ஜாடை காட்டினார். செவிட்டு வைத்தி, அவ்வளவு பேரும் கும்பலாய் வருவதைப் பார்த்து ஏற்கெனவே மிரண்டு போயிருந்தான். இப்போது, நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொள்ள உள்ளே சென்று, பூஜை அறையில் இருந்த சாஸ்திரியிடம், "எல்லாரும் வந்திருக்கா; உங்களைக் கூப்பிடறா!" என்றான். பிறகு, சமையலறைப் பக்கம் சென்று, "அக்கா! அக்கா! ஊரிலே எல்லாருமாகச் சேர்ந்து அத்திம்பேரை அடிக்க வரா! நாம் இங்கே இருக்க வேண்டாம், ஊருக்குப் போய்விடுவோம், வா!" என்றான். ஆனால் மங்களம் அப்போது கொல்லையில் குளித்துக் கொண்டிருந்தபடியால், அவள் காதில் அவன் சொன்னது விழவில்லை. அதற்குப் பதிலாக அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த சாவித்திரியின் காதில் விழுந்தது. அவள் உடனே எழுந்து பரபரப்புடன் கையை அலம்பினாள்.
இதற்குள் சாஸ்திரி வாசற்பக்கம் வந்து, கும்பலாக வந்திருப்பவர்களைப் பார்த்து, "என்ன விசேஷம்? எல்லாருமா வந்திருக்கயளே! பூஜை பண்ணுகிறதற்கு உட்கார்ந்தேன்" என்றார்.
"உம்ம பூஜையைக் கொண்டு போய்க் குடமுருட்டி உடைப்பிலே போடுங்காணும்; உமக்குப் பூஜை வேறே வேண்டியிருக்கா, பூஜை!" என்றார் தீக்ஷிதர்.
"என்ன தீக்ஷிதர்வாள், கோவிச்சுக்கறயளே? நான் என்ன தப்பு செய்துட்டேன், தெரியலையே?"
"என்ன தப்பு செய்துட்டீரா? நீர் ஒரு தப்பும் செய்யலைங்காணும்! தப்பு எங்க பேரிலேதான்!" என்றார் சாமாவய்யர்.
"அவ்வளவு நெஞ்சு ஆண்மையாங்காணும் உமக்கு? அந்த நெஞ்சிலே உப்பை வச்சு நெரடினா என்னன்னு கேக்கறேன்?" என்றார் முத்துசாமி அய்யர்.
"இதென்ன பாவமான்னா இருக்கு!" என்றார் சாஸ்திரி.
"ஆமாம், பாவந்தான்! பாவத்தையும் புண்ணியத்தையும் ரொம்பக் கண்டவரோல்லியோ, நீர்?"
சம்பு சாஸ்திரி வாயை மூடிக்கொண்டு மௌனமாயிருந்தார்.
"என்னங்காணும் ஊமைக் கோட்டான் மாதிரி சும்மா இருக்கீர்? சொல்லுமேங்காணும்?"
"என்ன சொல்லச் சொல்றயள்; அதுதான் தெரியலை?"
"தெரியலையா? உமக்கு ஏன் தெரியப் போறது? பாவம்! பச்சைக் குழந்தை! வாயிலே விரலை வைச்சாக் கடிக்கக் கூடத் தெரியாது."
"போருங்காணும், வேஷம்! பதில் சொல்லுங்காணும்! தீண்டாதவங்களை எப்படிங்காணும் அக்கிரகாரத்திற்குள் விட்டீர்?" "நீர் பிராம்மணனாங்காணும்? பூணலை அறுத்து எரியுங்காணும்!"
"இந்த மாதிரி கர்ம சண்டாளன்கள் உலகத்திலே இருக்கிறதனால் தானே மழை பெய்யமாட்டேங்கறது!"
"அப்படிப் பெய்தாலும் ஒரேயடியாக கொட்டி வெள்ளமாய் அடிச்சுடறது!"
"கனபாடிகளே! கொஞ்சங் கோவிச்சுக்காமே கேளுங்கோ. ஆபத்துக்குத் தோஷமில்லைன்னு பெரியவாள் சொல்லியிருக்கா..."
"ஆபத்துக்குத் தோஷமில்லையா? ஆமாம், யாருக்கு ஆபத்து வந்தா தோஷமில்லை? நமக்கு ஆபத்து வந்தா, தோஷமில்லை. இந்த நீசன்களுக்கு ஆபத்து வந்தா, நமக்கென்னன்னு கேக்கறேன்."
"அப்படியே அவன்களுக்கு ஆபத்து வந்தது. ஒத்தாசை செய்யணும்னா, அதுக்கோசரம், அவன்களை அக்கிரகாரத்துக்குள்ளே விட்டுடறதா?"
"செய்றதையும் செய்துட்டு சாஸ்திரம் பேசறதைப் பார்ரா!"
"தான் கெட்டதுமல்லாமல் சந்திர புஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்து விட்டீரே, ஓய்! இப்போ அக்கிரகாரத்திலே எல்லாரும்னா பிராயச் சித்தம் பண்ணிக்க வேண்டியிருக்கு?"
"கோவிலுக்குப் புண்யாவாசனம் பண்ணணும், இல்லாட்டா பூஜை பண்ணமாட்டேன் என்கிறாரே, குருக்கள்?"
"இது எல்லாத்துக்கும் யார் பணம் அழறதுன்னு கேக்கறேன்!"
"தயவு செய்து நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ! என் மனசாட்சிக்குச் சம்மதமா, நான் ஒன்றும் தப்புப் பண்ணலை. அப்படி நீங்கள் நினைக்கிற பட்சத்தில்..."
"அடேயப்பா! பெரிய மனச்சாட்சிடா இவருக்கு!"
"அப்படித்தான் உம்ம மனச்சாட்சி பாதி ராத்திரிலே வந்து, நீசன்களையெல்லாம் அக்கிரகாரத்துக்குள்ளே விடலாம்னு சொல்லித்தே; நாங்க இவ்வளவு பேரும் உயிரோடே தானே இருந்தோம்? எங்களை ஒரு வார்த்தை கேட்டீராங்காணும்?"
"ஏற்கனவே சேரி தலைகீழா நிக்கறது. இனிமே எங்களை ஒரு பயல் மதிப்பானா? எங்க பேச்சைத்தான் யாராவது கேப்பானா?"
சம்பு சாஸ்திரி இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சும்மா நிற்க, தீக்ஷிதர், கையை ஓங்கிய வண்ணம், "முழிக்கிறதைப் பார்ரா முழிக்கிறதை!" என்றார்.
இதுவரை ரேழிக் கதவண்டை நின்று கேட்டுக் கொண்டிருந்த சாவித்திரி அப்போது குறுக்கே வந்து, "என்ன மாமா, கையை ஓங்கறயள்? எங்க அப்பாவை அடிச்சுடுவேள் போலிருக்கே?" என்று ஆத்திரமாய்க் கேட்டாள்.
தீக்ஷிதர், "ஆமாண்டி அடிக்கத்தான் போறேன்! நீ யாரடி கேக்கறது?" என்று மறுபடியும் கையை ஓங்கினார்.
"ரொம்பத் திமிர் புடிச்ச குட்டிங்காணும். முதுகிலே வையுங்காணும் இரண்டு!" என்று முத்துசாமி அய்யரும் கையை ஓங்கிக் கொண்டு வந்தார். சம்பு சாஸ்திரி சாவித்திரியைச் சட்டென்று அணைத்துக் கொண்டார். அதே சமயத்தில், பின்னால், ஒரு பெரிய கனைப்புச் சத்தமும், தடியை ஓங்கித் தரையில் குத்துகிற சத்தமும் கேட்டது. எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். வாசலில் சற்றுத் தூரத்தில் பட்டிக்காரன் நல்லான் வந்து ஒரு பெரிய தடியை ஊன்றிக் கொண்டு நிற்பது தெரிந்தது.
"ஓஹோஹோ! இந்தச் சிப்பாய் தடியைத் தூக்கிண்டு வந்துட்டானா? நம்மையெல்லாம் அடிச்சாலும் அடிச்சுடுவான்" என்றார் சாமாவய்யர்.
"ஏன் அடிக்க மாட்டான்? பேஷாய் அடிப்பான்! இந்தப் பதிதனுடைய வீட்டு வாசல்லே வந்து நாம் நிக்கறோமோல்லியோ?"
"வாங்கய்யா, போகலாம்!"
"கிளம்புங்கோ!"
"ஏன் இன்னும் நிற்கறயள்? வாங்கோ!"
எல்லாரும் திரும்பிப் போக ஆரம்பித்தார்கள். ஆனால், பத்து அடி போனதும், முத்துசாமி அய்யர் மறுபடி நின்று திரும்பிப் பார்த்து, "இவன் அப்பன் திவசத்துக்கு இவனை நான் திண்டாட விடாட்டா, நான் போட்டிருக்கிறது பூணூல் இல்லை" என்றார்.
"அதோடே விடக்கூடாதுங்காணும். அந்தக் கல்கத்தாக்காரன் கிட்டச் சொல்லி, இந்தக் குட்டியைத் தள்ளி வைக்கப் பண்ணி வாழாவெட்டியா அடிக்கிறேனா இல்லையா, பாரும்!" என்றார் தீக்ஷிதர்.
"அவன் பேரிலே என்னடா தப்பு? நாம் தானேடா இடங்கொடுத்துக் கொடுத்துக் கெடுத்துவிட்டோ ம்? மாமாங்கத்துக்குப் போய்ட்டு வந்து, மீனா செத்துப் போய்ட்டாள்னு ஒரே புளுகாப் புளுகினானே, அப்பவே இவனை சாதிப் பிரஷ்டம் பண்ணியிருக்கணும்."
"அப்படிச் செய்திருந்தா, இவன் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகாமே, திண்டாடியிருப்பான்."
சம்பு சாஸ்திரியின் காதில் இதெல்லாம் விழுந்தது. அவர் நல்லானைப் பார்த்து, "நல்லான்! நீ என்னத்துக்கு இப்போது இங்கே வந்தே? போ, வேலையைப் பாரு!" என்று சொல்லிவிட்டு, உள்ளே பூஜை அறைக்குள் சென்றார். அம்பிகையின் விக்கிரகத்தின் முன்னால் உட்கார்ந்து, 'அம்பிகை! தாயே! என் அருமை மீனாவை நான் மறக்க முயன்றாலும், இவர்கள் மறக்க விட மாட்டேனென்கிறார்களே!' என்று எண்ணிக் கண்ணீர் விடுத்தார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, 'ஸ்வாமி! பகவானே! தீபாவளிக்கு இவர் வரப்போற சமயத்திலேதானா, இந்தச் சங்கடமெல்லாம் வர வேணும்?' என்று எண்ணி ஏங்கினாள். அவளுடைய கண்களிலும் ஜலம் ததும்பிற்று.